Published:Updated:

பல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்!

பல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்!
பல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்!

இதில் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போது டெக் ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், அமெரிக்காவும் இனி ஜப்பான் போடும் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தாக வேண்டும். ஏனென்றால் தற்போது ஜப்பான் கிரானைட் மலையை கண்டறிந்த படையப்பாவை போலத்தான்!

ரு நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தக வளர்ச்சியையும் தீர்மானிப்பதில் அந்த நாட்டின் மண் வளம் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையிலேயே அங்குக் கிடைக்கும் கனிம வளங்கள், அங்கு விளையும் பொருள்கள் இவ்விரண்டும் மிக முக்கியமானவை. மொத்த உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வளம் சவுதி அரேபியாவில் இருக்கிறது. இன்றும் எண்ணெய் வர்த்தகத்தில் அந்த நாடு கோலோச்சுவதால்தான் பாலை நிலத்திலும் அத்தனை பிரமாண்டமாகவும், வசதியாகவும் வாழ முடிகிறது. அந்த வகையில், மண் வளத்தில் ஜப்பான் சற்று பலவினமான நாடாகத்தான் இருந்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிக்கும் நாடாக இருந்தாலும், அதற்குத் தேவையான தாதுப்பொருள்களுக்குப் பக்கத்து நாடான சீனாவிடம் கையேந்த வேண்டிய நிலை. அதுவும் என்ன விலை சொன்னாலும், என்ன வகை ஒப்பந்தங்கள் போட்டாலும் மறுக்க முடியாத நிலை என்றே கூற வேண்டும். ஆனால், ஜப்பான் நாட்டுக்கு இனி அந்தக் கவலை இருக்கப் போவதில்லை.

ஜப்பான் நாட்டின் கடலோரப்பகுதிகளில் மிகவும் அரிதான கனிம வளம் கொண்ட பகுதி, பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஏதோ சாதாரண பகுதி கிடையாது. இதில் இருக்கும் கனிம வளத்தைக் கொண்டு உலகத்துக்கே பல நூற்றாண்டுகள் தாதுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிறார்கள் அதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள். 'Nature' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளே 16 மில்லியன் டன்கள் தாதுப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் இருக்கும் தாதுப் பொருள்கள் அனைத்தும் செல்போன் பேட்டரிகள் முதல் மின்சார வாகனங்கள் வரை தயாரிக்கப் பயன்படும் வளங்கள். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட 17 அரிய வகை தாதுப்பொருள்களும் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இந்த அரிய வகை தாதுகள், பூமியின் ஒரே இடத்தில் மண்டிக் கிடக்காமல் பரந்தே இருக்கும். அப்படி இருக்கும் இடத்தில் இருந்தும் அவற்றை எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம் மட்டுமல்ல, அதிக பணத்தை உறிஞ்சும் செயல். அதனால், இப்படி அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து இருப்பது ஓர் அரிய நிகழ்வு, ஒரு மாபெரும் புதையல்!

Photo Courtesy: Alchemist-hp

இது ஜப்பானின் வர்த்தகத்தை மட்டுமல்ல, உலக வர்த்தகத்தையே மாற்றும் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், எண்ணிப் பார்க்கவே முடியாத கால அளவுக்கு உலகம் முழுவதுக்கும் இதிலிருந்து தாதுப்பொருள்களை எடுக்க முடியும். இந்த மாபெரும் சுரங்கத்தைக் கடைந்து எடுத்தால் திகழியம் (Yttrium) தாதுவை 780 வருடங்களுக்கும், டிஸ்ப்ரோசியம் (Dysprosium) 730 வருடங்களுக்கும், ஐரோப்பியம் (Europium) 620 வருடங்களுக்கும், டெர்பியம் (Terbium) 420 வருடங்களுக்கும் உலகம் மொத்தத்துக்கும் வழங்கிட முடியும்.

இந்த அற்புத சுரங்கம் டோக்கியோவின் தென் கிழக்கில் 1,850 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மினமிட்டோரி தீவில் (Minamitori Island) அமைந்துள்ளது. ஜப்பானுக்கு அதிர்ஷ்டம் சேர்க்கும் வகையில் அதன் பொருளாதார எல்லைக்குள்ளாகவே இந்த இடம் வருவதால், இந்த மொத்த சுரங்கமும் ஜப்பான் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகிறது. ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டில், தீவுகளைச் சொந்தம் கொண்டாடுவதில் சீனாவும், ஜப்பானும் முட்டி மோதிக் கொண்டன. அதற்கு முன்னர், 2010-ம் ஆண்டிலேயே மேலே கூறிய அரிய வகை தாதுகளுக்கு சீனா, ஜப்பானிடம் 10 சதவிகிதம் கூடுதல் பணம் கேட்டது. கொடுத்து வந்த பங்கையும் தடாலடியாக குறைத்துக்கொண்டது. பிறகு உலகப் பொருளாதார நிறுவனம் தலையிட்ட பிறகே பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்த இரண்டு காரணங்களாலும், ஜப்பான் அரசு தன் எல்லைக்குள்ளாகவே தாதுப்பொருள்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் குழு அமைத்தது. அந்த முயற்சி தற்போது வீண் போகவில்லை.

பொதுவாக, எரிமலை வெடிப்பாலும், பூகம்பத்தாலும் பூமியின் மேற்பரப்புக்கு வரும் இந்த வகை அரிய தாதுப் பொருள்கள், பூமி என்ற கோள் உருவாகும் முன்பே உருவானவை. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஜப்பான் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க இந்தச் சுரங்கம் உதவும் என்றாலும், இதில் இருந்து வேண்டிய தாதுகளைப் பிரித்து எடுப்பது ஒன்றும் சுலபமான வேலை கிடையாது. ஜப்பான் இதற்காக நிறைய பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கும். ஆனால், இதில் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போது டெக் ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், அமெரிக்காவும் இனி ஜப்பான் போடும் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தாக வேண்டும். ஏனென்றால் தற்போது ஜப்பான், கிரானைட் மலையைக் கண்டறிந்த படையப்பாவைப் போலத்தான்.

வெற்றிக்கொடி கட்டட்டும்!

அடுத்த கட்டுரைக்கு