Published:Updated:

பிரபஞ்ச நாயகன்!

பிரபஞ்ச நாயகன்!
பிரீமியம் ஸ்டோரி
பிரபஞ்ச நாயகன்!

ராஜ சங்கீதன்

பிரபஞ்ச நாயகன்!

ராஜ சங்கீதன்

Published:Updated:
பிரபஞ்ச நாயகன்!
பிரீமியம் ஸ்டோரி
பிரபஞ்ச நாயகன்!

ஸ்டீஃபன் ஹாக்கிங் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து சாகசம் புரிந்த ஒரு சூப்பர்மேன்.  அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்த அறிவியலாலேயே ‘இரண்டாண்டுகளில் இறந்துவிடுவார்’ என நாள் குறிக்கப்பட்டவர். ஆனால் ‘தீரன்’ படத்தில் வரும் தாத்தாவைப் போல் ‘தோ மோர் இயர்ஸ்’ என்றபடியே 76 வயது வரை வாழ்ந்துவிட்டார்.

எல்லோரையும்போல் வெகு இயல்பான வாழ்க்கையைத்தான் ஹாக்கிங்கும் தொடங்கினார். கணிதம் படிக்க விரும்பி வாய்ப்பு கிடைக்காததால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள், நடக்கும்போது திடீரெனப் பாதம் பிசகியது. தடுமாறி விழுந்தார். பின் எழுந்து கவனக்குறைவு என எண்ணித் தன் வேலைகளைத் தொடர்ந்தார். ஆனால், கவனக் குறைவன்று; ‘தசைகளை இயக்கும் நரம்புகளின் செயல்குறைவு’ எனப் பின்னாளில் கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.

21-ம் வயதில் Motor Neurone Disease அவரைப் பீடித்திருந்தது. நிலைகுலைந்து போனவர், நண்பர்கள், காதலி ஜேன் என்று யாரையும் சந்திக்கவில்லை. எத்தகைய தடுமாற்றம் நிகழ்ந்தாலும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையின்மீது ஈர்ப்பு வருவதற்கான ஒரு பொறி கிளம்பும் அல்லவா, அப்படியான இரண்டு பொறிகள், ஹாக்கிங் வாழ்க்கையிலும் கிளம்பின.

மருத்துவமனையில் ஹாக்கிங் இருந்த சமயம், லுக்குமியா நோய்ப் பாதிப்பால் அவதிப்படும் ஒருவரின் வேதனைகளைப் பார்த்த ஹாக்கிங், தன்னுடைய வேதனைகள் ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு வந்தார். அடுத்த தூண்டல் கனவில் நிகழ்ந்தது. கொல்லப்படுவது போல் ஹாக்கிங் கனவு கண்டிருக்கிறார். தனக்கான மரணம் அறிவிக்கப்பட்ட பின்னும் வராத பதைபதைப்பு, அதைத் தன்னளவில் உள்ளார்ந்து அனுபவித்ததும் ஹாக்கிங்குக்கு வந்திருக்கிறது. தனக்கான காலம் மிகக்குறைவாக இருப்பதைப் புரிந்துகொண்டார். குறைவான காலத்தில் செய்யும் செயல்களின் மூலம், காலத்தில் நீடித்து வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

பிரபஞ்ச நாயகன்!

கருந்துளைகள் பற்றிய ஆய்வில் இறங்கியவருக்கு அந்தக் கருதுகோள்கள் பிடிபடவே இல்லை. ’கருந்துளைகள் இருக்கின்றன’ என ஆராய்ந்து கூறிய சக அறிவியலாளர் கிப் தார்னினிடம் ‘கருந்துளைகள் இல்லை என்று நிரூபித்துக்காட்டுவேன்’ என்று பந்தயம் கட்டினார். ஆனால், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம், பிரபஞ்சத்தில் கருந்துளைகள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தவர், தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதேபோல் இன்னும் பல பந்தயங்கள், பல தோல்விகள். ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும் ஹாக்கிங்தான் வென்றார். ஒவ்வொரு பந்தயத் தோல்வியின் வழியாகவும் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிதலில் நம்மை ஓரடி முன்னே அழைத்துச்சென்றார்.

அறிவியலைத் தாண்டியும் அவரது விருப்பங்கள் எல்லை கடந்தவை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார், விளம்பரப்படம் நடித்தார், ‘ஜீரோ கிராவிட்டி’ கலத்தில் மிதந்தும் சுழன்றும், விண்வெளி போன உணர்வைப் பெற்றார். ஆனாலும், நேரடி விண்வெளி போகும் விருப்பம் அகலவில்லை. விண்வெளிச் சுற்றுலா போக விரும்புபவர்களுக்கான Virgin Galactic விண்கலத்தின் முதல் பயணத்தில் போக டிக்கெட்டும் எடுத்து வைத்துக்கொண்டார்.

வானம் தாண்டி விண்வெளியைச் சிந்தித்தாலும் வாழ்க்கை, அவரின் கால்களைப் பிடித்துப் பூமிக்கு இழுத்தது.

ஹாக்கிங்கும் ஜேனும் பிரிய நேரிட்டது.  1995-ல் செவிலியர் எலைன் மேசனைத் திருமணம் செய்துகொண்டார். அந்த உறவும் 11 ஆண்டுகள்தான் நீடித்தது. 2006-ல் இரண்டாவது விவாகரத்து!

உடல், மனம் ஆகியவற்றின் வதைக் கொடுக்குகளில் மாட்டிய பின்பும் உன்னதமான வாழ்க்கை வாழ முரட்டுத்தனமான குழந்தைத் தனம் வேண்டும். எப்போதும் எதுவாகவும் எதுவோடும் தன்னை நிறுத்திக் கொள்ளாத தெளிதல் கிட்ட வேண்டும். இரண்டும் வாய்த்த சூப்பர்மேன் ஹாக்கிங்.

‘‘அறிவாளி ஏதேனும் குறைபாட்டுடன் இருப்பான் என்ற கூற்றுக்கு நான் உதாரணமாக இருக்கிறேன். மக்களுக்கு நாயகர்கள் தேவைப்படுகிறார்கள். முதலில் அவர்கள் ஐன்ஸ்டீனை நாயகனாக்கினார்கள். இப்போது என்னை நாயகன் ஆக்குகிறார்கள், அது எந்தவிதத்திலும் நியாயம் இல்லையென்றாலும்’’ - நகைச்சுவை ததும்பச் சொன்ன ஹாக்கிங் வார்த்தைகளில் சுய எள்ளலைக் கழித்துவிட்டுப் பார்த்தால், நிச்சயமாக அவர் ஒரு நாயகன்தான்.

இந்தப் பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தில் வாழும் நம் வாழ்க்கையையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு உதவிய நாயகன்.