Election bannerElection banner
Published:Updated:

கருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி... அதிர்ந்த சீனா! #WeekInScience

கருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி... அதிர்ந்த சீனா! #WeekInScience
கருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி... அதிர்ந்த சீனா! #WeekInScience

கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience

றிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுடத்தின் சிந்தனையையும், வாழ்வியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்புகளைத் தொகுத்து, இந்த வார #WeekInScience பகுதியில் தருகிறோம். பறவைகளின் பார்வையில் தொடங்கி, பூமியில் மோதிய வேற்றுகிரகம் வரையில் கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன.

1. பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன?

தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. ஸ்வீடனைச் சேர்ந்த லன்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது. 

லன்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான் எரிக் நில்சன், ``மனிதர்களின் பார்வை சிவப்பு, பச்சை, நீளம் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டது. பறவைகளுக்கு இவற்றோடு கூடுதலாக புறஊதா நிறங்களையும் காண முடியும். உதாரணத்திற்கு, அடர்த்தியான வனத்தில் நம்மால் பச்சை நிறத்தில் மட்டுமே இலைகளை மட்டுமே காண முடியும். ஆனால் பறவைகளால், இலைகளின் மேற்புறம் மங்கலான பச்சையையும், கீழ்புறம் அடர்த்தியான பச்சையையும் வேறுபடுத்திக் காண முடியும். இதன் மூலம் தன் உணவுகளைச் சேகரிப்பதில் தொடங்கி, லாகவமாகப் பறப்பது வரை தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன. இப்படி வேறுபட்ட வண்ணங்களில் பறவைகளால் பார்க்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை" என்றார்.

இந்த ஆராய்ச்சிக்காகவே பிரத்யேக கேமராவை லன்ட் விஷன் குரூப் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம், பறவைகள் மட்டுமல்லாது உலகில் உள்ள எந்த விலங்குகளின் பார்க்கும் திறனையும் கண்டறிய முடியுமாம். நம்முடைய கற்பனைக்கும் எட்டாத நிறங்களில் விலங்குகள் உலகைக் காண்கின்றன என்று லன்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வியக்கிறார்கள்.

2. வெற்றிகரமாக சோதனையிடப்பட்ட பறக்கும் கார்

ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டுமே பறந்துவந்த கார்கள், இனி நிஜத்திலும் பறக்கப் போகின்றன. அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்திலுள்ள மனசாஸ் நகரில், பறக்கும் கார் சோதனை ஓட்டத்தை போயிங் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

போயிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான `அரோரா ப்ளைட் சையின்சஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பறக்கும் கார், 30 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது. இதன் எலெக்ட்ரிக் இன்ஜின்கள் 80 கி.மீ. வரை பறக்கும் சக்தி கொண்டதாக வடிவைக்கப்பட்டுள்ளன. பறக்கும் காரை உயரப் பறக்கவிட்டு, செங்குத்தாக தரையிறக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும், விமானத் தயாரிப்பில் இது ஒரு புரட்சி என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது. 

3. டி.என்.ஏ. மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகள்; விசாரணை வளையத்தில் சீன விஞ்ஞானி!

எயிட்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக, கருவிலுள்ள இரு சிசுக்களின் டி.என்.ஏ.க்களை மாற்றியமைத்ததாகவும், அந்த சிசுக்கள் தற்போது பெண் குழந்தைகளாகப் பிறந்து நலமுடன் இருப்பதாகவும், ஹாங்காங்கில் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மனித மரபணு மாற்றம் உச்சிமாநாட்டில் சீன விஞ்ஞானி ஜியான்குய் ஹி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். மரபணு விஞ்ஞானிகள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை, இக்கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளது. 

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தென் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜியான்குய் ஹி, கருவில் உள்ள சிசுக்களுக்கு ஹெச்.ஐ.வி. நோய்த் தொற்று தாக்காமல் இருக்க, சிசுக்களின் மரபணுக்களை மாற்றி, குழந்தைகளைப் பிறக்கும் வரை பாதுகாத்ததாக மாநாட்டில் கூறினார். மேலும் ஒரு பெண், டி.என்.ஏ. மாற்றப்பட்ட குழந்தையை சுமந்து வருவதாகவும் கூறியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

கடந்த ஜனவரி 21-ம் தேதி சீனாவின் குவாங்டாங் மாநில அதிகாரிகள், ஜியான்குய் ஹி'யின் ஆராய்ச்சியை ஒத்துக்கொண்டதோடு, அவர் சீனாவின் சட்டதிட்டங்களை மீறிவிட்டதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மார்ச் 2017 முதல் நவம்பர் 2018 வரையில் மரபணு மாற்றப்பட்ட குழந்தைகளை உருவாக்கி அவர் பாதுகாத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

4. ஆராய்ச்சியில் மனித மூளை கம்ப்யூட்டர்

சூப்பர் கம்ப்யூட்டர், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் பல வந்துவிட்டாலும் மனித மூளைக்கு நிகராக இதுவரை எந்த கம்ப்யூட்டரும் உருவாக்கப்படவில்லை. முதல்முறையாக, ஸ்காட்லாந்திலுள்ள ஹிரியாட் வாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஹார்ட்மேன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அம்முயற்சியில் இறங்கியுள்ளது.

`தி கன்சர்வேஷன்' என்கிற இதழுக்கு ஹார்ட்மேன் எழுதியுள்ள கட்டுரையில், ``இதுவரை, சாப்ட்வேர்களை அடிப்படையாகக் கொண்டே கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மனித மூளையில் செயல்படும் நரம்பு மண்டலங்களைப் போன்று, குவாண்டம் கம்ப்யூட்டர்களிலும் நியூரான் சக்திகளை இணைத்து புதுவகை கம்ப்யூட்டர்களை உருவாக்க முயன்று வருகிறோம். இதனால் கம்ப்யூட்டர்களின் விரைவாக முடிவெடுக்கும் திறனும், சிக்கலான கேள்விகளுக்கு விடைதேடும் திறனும் அதிகரிக்கும். 

உதாரணத்திற்கு, நகரின் போக்குவரத்து நெருக்கடியை இந்த மனித மூளை குவாண்டம் கம்ப்யூட்டர் தானாகவே கிரகித்துத் தீர்வு காணும். கம்ப்யூட்டர் யுகத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக இக்கண்டுபிடிப்பு அமையப் போகிறது" என்று எழுதியுள்ளார். ஹார்ட்மேனின் ஆராய்ச்சி கம்ப்யூட்டர் உலகில் புது விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

5. பூமியில் மோதிய கிரகத்தால் உயிரினங்கள் வந்ததா?

4,400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய வேற்று கிரகத்தால், பூமியின் மேற்பரப்பில் புவி ரசாயனம் மாற்றப்பட்டு, உயிரினங்கள் உருவாக ஏதுவான நிலை உருவாகியிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இக்கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். உச்ச வெப்பத்திலும், பூமிக்கடியில் ஏற்படும் அழுத்தத்திலும் ஏற்படும் ரசாயன மாற்றங்களைக் கணக்கிட்டு, பூமியில் மோதிய கிரகத்திலிருந்துதான், நமது உடலில் இன்று இருக்கும் கார்பன் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் வந்திருக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். 

``சல்ஃபரை மையமாக வைத்துச் சுழன்ற கிரகத்தில் கார்பனும், நைட்ரஜும் அதன் வெளிப்புறத்தில் நிறைந்திருக்கும். அப்படியொரு கிரகம் பூமியுடன் மோதியதில் வெடித்துச் சிதறி பூமியின் ரசாயன மண்டலமும், தட்பவெட்பமும் மாறியது. இன்று இருக்கும் நிலவும் அதிலிருந்தே உருவாகியது. இந்த மாற்றங்களால்தான், உயிரங்கள் உருவாக ஏதுவான காலநிலை பூமியில் ஏற்பட்டது." என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ராஜ்தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார். 

6. இதுதான் அசரீரி... செய்தியைக் காதில் சொல்லும் லேசர் புரட்சி!

பழைய பக்தி படங்களில், பக்தரின் காதுகளில் மட்டும் தெய்வத்தின் குரல் அசரீரி வடிவில் ஒலிப்பதாகக் காட்டியிருப்பார்கள். இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் காதுகளிலும் இதுபோன்ற அசரீரி கேட்டால், அது மாயவித்தையோ என்று எண்ணிவிடாதீர்கள். அது லேசர் ஒலியாகவும் இருக்கலாம். 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரிலுள்ள எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் லிங்கன் ஆய்வகம், லேசர் மூலமாக ஒலி எழுப்பும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. காற்றிலுள்ள ஈரப் பதத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி, அதன் மூலம் மனிதர்களின் காதுகளுக்குக் கேட்கும் ஒலியை உருவாக்கியுள்ளது. இந்த அதிர்வுகள் மூலம் நாம் சொல்ல வரும் செய்தியைக் குறிப்பிட்ட தூரத்திலிருந்து மற்றொருவர் காதுகளுக்கு லேசர் மூலமாக அனுப்பிவிட முடியும்.

1.9 மைக்ரோமீட்டர் உடைய `தூலியம் லேசர்' மூலமாக இக்கண்டுபிடிப்பை லிங்கன் ஆய்வம் செய்துள்ளது. சோதனை முயற்சியாக 8 மீட்டர் தொலைவிலிருந்து 60 டெசிபல் அளவுள்ள ஒலியை ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்க, ஒலியின் அளவும் அதிகரிக்கும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த லேசரால் கண்களுக்கோ, உடலின் தோல்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த ஆய்வகம் கூறியுள்ளது. அதிக தூரத்திலிருந்து, உயர்ந்த ஒலியில் சேலர் மூலமாகச் செய்தியை அனுப்புவது குறித்தும் மேற்கொண்டு ஆய்வு நடைபெற்று வருகிறதாம். 

7. சூரிய சக்தியை 18 வருடங்களுக்குச் சேமிக்க முடியும்!

சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருள்களின் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான தொழில்களும் அதிகரித்துள்ளன. புதிய கண்டுபிடிப்பாக, சூரிய சக்தியை சில இரசாயனங்களுக்குள் அடைத்து 18 வருடங்களுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் இம்மூன்று வாயுக்களையும் திரவ நிலையில் அடைத்து, அதில் சூரிய ஒளி பாயும் போது, திரவ வாயுக்களின் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், சூரிய ஒளியின் சக்தியை 18 வருடங்களுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 

ஒருமுறை இந்தத் திரவம் அடைத்திருக்கும் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிட்டு, தேவைப்படும் நேரத்தில் மூலக்கூறுகளைச் சூடாக்கி பயன்படுத்தலாமாம். வாட்டர் ஹீட்டர், சிறிய மின் அடுப்புகள், விளக்குளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை இந்தத் திரவ பேட்டரியால் வழங்க இயலும். அதிகபட்சம் 250 வாட் வரையில் சக்தியைச் சேமிக்க முடியும் என்பதையும் ஸ்வீடன் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. தீவிர ஆய்வில் உள்ள இந்த திரவ பேட்டரி, இன்னும் 10 வருடங்களில் சந்தைக்கு விற்பனைக்காக வரவிருக்கிறது. சூரிய மின்சக்தி துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு