Published:Updated:

"காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?

2021க்கான இயற்பியல் நோபல் பரிசு ( twitter.com/NobelPrize )

ஷுகுரோ மனாபே, க்ளௌஸ் ஹாஸல்மேன் மற்றும் ஜியார்ஜியோ பரீஸி ஆகியோருக்கு இயற்பியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசை அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.

"காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?

ஷுகுரோ மனாபே, க்ளௌஸ் ஹாஸல்மேன் மற்றும் ஜியார்ஜியோ பரீஸி ஆகியோருக்கு இயற்பியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசை அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.

Published:Updated:
2021க்கான இயற்பியல் நோபல் பரிசு ( twitter.com/NobelPrize )
2021ம் ஆண்டு என்பது நோபல் பரிசின் கேலிக்கூத்து ஆண்டு என்றுதான் சொல்லப்பட்டது. ஏனெனில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். நார்வே நாட்டின் கிரிஸ்டியன் டைபிரிங் 2018 முதலே இந்த வேலையை தொடர்ந்து செய்து வந்தாலும், இஸ்ரேலிலும் ஆப்கானிஸ்தானிலும்தான் அமைதியை நிலைநாட்டியதால் தன்னைவிட நோபல் பரிசுபெற தகுதியானவர் இல்லை என ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதங்களில் கூட கூச்சமே இல்லாமல் பேசிக்கொண்டு திரிந்தார்.
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

"புவிவெப்பமடைவது, கார்பன் குடை என்பது, கடல்மட்டம் ஏறுவது, தட்பவெப்ப மாறுதலில் மனிதனின் பங்கு, இதெல்லாம் பொய்... இதில் அறிவியல் உண்மை எதுவும் கிடையாது" என்று பகிரங்கமாக அறிவித்து பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் பரிவாரம் வெளியேறியதை ஒவ்வொருமுறை தட்பவெப்ப – உச்சக்கட்ட காட்சி நடக்கும்போதெல்லாம் நினைக்காமல் இருக்க முடிவது இல்லை.

இந்த நோபல் அதற்கு பதில் சொல்லி இருக்கிறது. ஷுகுரோ மனாபே, க்ளௌஸ் ஹாஸல்மேன் மற்றும் ஜியார்ஜியோ பரீஸி ஆகியோருக்கு இயற்பியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசை அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது. ஷுகுரோ மனாபே ஜப்பானைச் சேர்ந்த காற்று மண்டல இயற்பியலாளர். அணுகுண்டு வீச்சுக்குப்பிறகு ஜப்பானிலிருந்து வெளியேறிய இளைஞர்களில் ஒருவர். டோக்கியாவிலிருந்து அமெரிக்காவில் தன் ஆய்வுகளைத் தொடர அவர் முயன்றார். புவி வெப்பம் அதிகரித்தல் சம்பந்தமான திருப்புமுனை கண்டுபிடிப்பு ஒன்றை 1960களில் அவர் சாதித்தார். மனாபேயின் ஆய்வு முடிவுகள்தான் இன்றுவரை புவி வெப்பமேற்றம் என்பதை அறிவியல்படி நிரூபணமான சூழலிய தட்பவெப்ப சிக்கலாக ஏற்கப்பட காரணமானது.

ஷுகுரோ மனாபே, க்ளௌஸ் ஹாஸல்மேன், ஜியார்ஜியோ பரீஸி
ஷுகுரோ மனாபே, க்ளௌஸ் ஹாஸல்மேன், ஜியார்ஜியோ பரீஸி

அது என்ன கண்டுபிடிப்பு என்பதை அறிவதற்கு நாம் புவி சூடேற்றம் குறித்த அறிவியல் வரலாற்றை அறியவேண்டும். பிரெஞ்சு இயற்பியலாளர் ஜோசப் ஃபவுரியர் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு 1821ல் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு புவியை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்த ஆய்வில் இறங்கினார். புவியில் வந்து விழும் வெப்பக்கதிர் வீச்சை தரை வான்நோக்கி எதிரொலித்து திரும்ப அனுப்புகிறது. புவியின் உள்நுழையும் சூரிய கதிர்வெப்பம் வெளியேறும் வெப்பக்கதிர் வீச்சாக மாற்றப்படுகின்றது. இந்த விஷயத்தில் நம் வளிமண்டலம் முக்கிய சமன்செய்யும் அரணாக விளங்குகிறது என்பதை ஃபவுரியர் அறிவித்தார். மேலே திரும்பிச் செல்லும் வெப்பகதிர்வீச்சுக்கு அவர் ‘கரும் வெப்பம்’ (Dark Heat) என்று பெயரிட்டார். வளிமண்டலத்தின் சமன்செய்யும் வேலைதான் இன்று பசுமை இல்ல விளைவு (Green House Effect) என்று அழைக்கப்படுகிறது.

கண்ணாடி அரண்களால் சூழப்பட்ட பசுமை இல்ல பராமரிப்பில் சூரியனின் வெப்பம் உள்ளே நுழைய முடியும். ஆனால் வெளியேற முடியாமல் கண்ணாடி அரண் தடுத்துவிடும். ஆனால் வளிமண்டலத்தின் கதிர்வீச்சு செயல்பாடு இவ்வளவு எளிதானது அல்ல. அதிக சிக்கல் மிக்கது. 1896 பசுமை குடில்விளைவு எனும் பதத்தை அறிமுகம் செய்தவர், சுவீடன் நாட்டு இயற்பியல் வேதியியல் விஞ்ஞானி ஸ்வான்டே ஆர்ஹெனியஸ், புவியின் வரலாற்றில் பனிக்கட்டி காலம் (Ice ages) எப்படி உருவாகி இருக்கும் என்பதை அவரது ஆய்வுகள் துல்லியமாக நிறுவின. புவிக்கு சூரியனில் இருந்துவந்து விழும் வெப்பக்கதிர்வீச்சு குறுகிய சிற்றலை கதிர்வீச்சு. ஆனால் புவியியல் இருந்து வான்நோக்கி திருப்பி அனுப்பப்படும் வெப்பக் கதிர்வீச்சு நீள் அலை கதிர்வீச்சு என்பதை அவர் கண்டறிந்து அறிவித்தார். ஸ்வான்டே, நீல்ஸ் எக்ஹால்ம்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் புவியின் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இந்தப் பசுமை குடில் விளைவும் ஒரு காரணம் என்பதை நிரூபித்தனர். தங்கள் காலத்தின் பருவநிலை மாதிரிகளை (Climate Models) இயற்பியல் முறைப்படி அவர்கள் வெளியிட்டு புதிய பாதைக்கு வழிகாட்டினர்.

Climate Model
Climate Model

அடுத்த மாதம் இதே தேதியில் உங்கள் ஊரில் மழைப்பொழியுமா என்பதைச் சொல்ல முடியாவிட்டாலும் ஸ்வாண்டேவின் கணித வரையறைப்படி அன்றைய தினத்தின் வெப்பத்தை முன் அனுமானித்து கூறமுடியும் புவி உயிர்த்திருக்க பசுமைகுடில் விளைவு அத்தியாவசியமானதாகம். பருவநிலைதுறை விஞ்ஞானிகள் விரைவில் பல விசித்திரமான கேள்விகளையும் எழுப்பிக்கொண்டனர். நியூயார்க்கில் பட்டாம்பூச்சி சிறகு அடிப்பது காரணமாக சலனப்படுத்தப்பட்ட காற்று வாஷிங்டனில் புயலாக மாறுமா என்பதை போன்ற சுவையான தேடல்கள் ஒழுங்கின்மை கோட்பாடு (Chaos Theory) நோக்கி காலநிலை அறிவியலை தள்ளியது.

உறைபனிக்காலம் ஏன் ஏற்பட்டது? அதற்கு ஸ்வாண்டேவின் பதில் என்ன?

ஸ்வாண்டே ஆர்ஹேனியஸ் பசுமை இல்லை நிகழ்வு என்பது ஒரு இயற்பியல் நிகழ்வு என்பதை புரிந்துகொண்டார். வெளியேறும் வெப்பகதிர் – வெளியிடும் வெப்பப் பொருளின் ‘முழுமை வெப்பநிலை' (absolute temperature) அல்லது தனித்த வெப்பம் (ஒரு பொருள் நீர்மமாக, வாயுவாக உறைபனியாக ஒரே நேரத்தில் கூடி இருக்கும் சீர்சமநிலையின் வெப்பநிலை) என்பதன் (T) நான்கின் மடங்காக (T4) இருக்கும். என்று கண்டுபிடித்தார். வெப்பம்கூடக் கூட அலைநீளம் குறையும். சூரியனின் வெளிப்பரப்பு வெப்பநிலை 6,000℃. அது தன் கதிரியக்கத்தை புலப்படும் நிறைமாலையாக வெளியிடுகிறது. புவியின் தரைதள வெப்பநிலை (அதாவது திரும்பி வெளியேறும் வெப்பக்கதிர்வீச்சு) 15°C மட்டுமே இந்த வெப்ப கதிர்வீச்சின் நிறமாலை நம் கண்களுக்கு புலப்படாதவகை ஆகும். நமது வளிமண்டலம் இந்த வெப்பத்தை அதீத குளிர்ச்சி அடைந்து -18°C ஆகி (மைனஸ் 18 டிகிரி) உறைந்து போகும். புவியின் உறைபனி – காலம் (Ice- age) இந்த இயற்பியல் உண்மையில் ஏற்பட்ட ஒன்று. வளிமண்டலம் இப்படி கடவுள் பாதி மிருகம்பாதி எனும் நிலையில் உள்ளது.

உறைபனி – காலம் (Ice- age)
உறைபனி – காலம் (Ice- age)

இங்குதான் ஷுகுரோ மனாபேவின் ஆய்வு நுழைகிறது. மனாபே பசுமைகுடில் விளைவின் பிரதான காரணி கரியமில வாயுவே என்பதை நிரூபித்தவர். கரியமில வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க புவியில் இருந்து திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்பது அவரது கண்டுபிடிப்பு 1960களில் மனாபே புவியில் இருந்து ஆவியாகும் நீரின் காரணமாக வெளியேறும் கீழிருந்து மேல்நோக்கிய வாயுக்களின் பயணமும், பிற கரியமில வெளியேற்ற நிகழ்வுகளும் வளிமண்டலத்தை ஒரு நிரந்தர குடைபோல மாற்றிவருவதை ஒரு எளிய ஆய்வின் மூலம் நிரூபித்தார். இதைத்தான் நாம் மனாபே பருவநிலை மாதிரி (Manabe’s Climate Model) என்று அழைக்கிறோம். கார்பன் குடை (Carbon Umbrella) எனும் பதம் அவரது பருவநிலை அறிவியல் சார்ந்த முக்கிய பங்களிப்பு அவரது போராட்டம் மிக உக்கிரமானது. பல பத்தாண்டுகள் பலவகையில் இந்த இயற்பியல் கண்டுபிடிப்பு ஒன்று கண்டு கொள்ளபடாமலோ அல்லது எந்தத் தரவும் இன்றி மறுக்கப்பட்டோ வந்தது. கரியமிலவாயுவின் அளவு இருமடங்கானால், புவியின் வெப்பநிலையில் இரண்டு டிகிரி உயரும் எனும் அவரது நிரூபணத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரமே இந்த 2021 நோபல் பரிசு.

மனாபேயின் கண்டுபிடிப்பிற்கு பத்தாண்டுக்கு பிறகு க்ளௌஸ் ஹாஸல்மேன் தனது அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டார். பருவநிலை மாற்றங்களும் அன்றாட தட்பவெப்ப மாறுதல்களையும் மனிதனின் செயல்பாடுகளால் வெளியேறும் கரியமிலவாயு காரணியாக இருந்து பாதிக்கமுடியும் என்று க்ளௌஸ் ஹாஸல்மேனின் ஆய்வுகள் பல நிரூபித்தன. மனாபே தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட 1975-ல் க்ளௌஸ் ஹாஸல்மேன், ஜெர்மனியில் ஹாம்பர்க்கில் மாக்ஸ் பிளாங்க் வளிமண்டல ஆய்வகத்தில் இணை இயக்குநராக இருந்தார்.

ஷுகுரோ மனாபே (Syukuro Manabe)
ஷுகுரோ மனாபே (Syukuro Manabe)
Seth Wenig

அன்றாட தட்பவெப்பத்தை பருவநிலையுடன் இணைக்கும் அறிவியல் சித்தாந்தத்தை முன்மொழிந்தவர் க்ளௌஸ் ஹாஸல்மேன். சூரியவெப்பக்கதிர்வீச்சின் அளவு அனைத்து இடங்களிலும் ஒரே சீராக இருப்பது இல்லை. புவி வட்டக்கோளமாக இருப்பதால் பூமத்திய ரேகையின் அருகே செல்ல செல்ல கதிர்வீச்சின் அம்சம் குறைகிறது. அதேசமயம் புவி தன் அச்சில் சாய்ந்து இருக்கிறது. எனவே புவி மீது விழும் சூரிய கதிர்வீச்சை அன்றாட தட்பவெப்ப நிலைமையாக அது மாற்றுகிறது. வெப்பக்காற்று குளிர்ச்சியான காற்று, இவற்றின் அடர்த்திவேறுபாடு அட்சரேகையின் இடையே வெப்ப சலனத்தை ஏற்படுத்தும். கடல் மற்றும் நிலப்பகுதிக்கு இடையிலான வாயுமண்டல சுழற்சி அன்றாட தட்பவெப்பத்தை உருவாக்கும். இதனைத் துல்லியமாக ஹாஸல்மேன் நிரூபித்தார். தட்பவெப்ப இயற்பியல் பல்வேறு சிக்கல்கள் கொண்ட ஒழுங்கின்மை அமைப்புகளின் கோர்வையை சார்ந்தது.

நோபல் பரிசு தேர்வுக்கமிட்டி கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிட்ட பரிசு விவரக் கட்டுரையில் ஒரு வீட்டு வளர்ப்பு நாய் உதாரணம் தரப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் வீட்டு நாயை சங்கிலியில் பிணைத்து சாலையில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்கிறீர்கள். நாய் முன்னும் பின்னும் உங்கள் கால்களை சுற்றியும் கூட பலவாறு தன் தடத்தை மாற்றுகிறது. நீங்கள் அதை கணக்கில் எடுக்காமல் உங்கள் இலக்கிடம் நோக்கி அதை இழுத்தப்படி நடக்கிறீர்கள். அன்றாட தட்பவெப்பமும், பருவநிலையும் அவ்வாறான உறவு கொண்ட அமைப்பில் உள்ளன என்று விவரித்திருந்தது. ஆஸ்திரேலிய பருவநிலை விஞ்ஞானி டேவின் செப்போர்டு - அதற்கு பருவநிலை மற்றும் தட்பவெப்ப அறிவியலின் சிக்கலான மாதிரிகள் என்பவை இத்தனை எளிமையானது அல்ல. வேண்டுமானால் ஒருவர் ஆறெழு நாய்களை அழைத்துபோவதோடு ஒப்பிடலாம் என்று மறு கருத்து தெரிவித்தார்.

நோபல் பரிசு
நோபல் பரிசு

நோபல் அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டே மாதங்களுக்கு முன்பு ஆகஸ்டில் மட்டுமே உலகெங்கும் பருவநிலை மாற்ற அவசரநிலை அனுபவிக்கப்பட்டதை நாம் இப்போது வரிசைப்படுத்தவேண்டும். 1980களில் தொடங்கி 1990களின் மத்திய ஆண்டுகள் வரை ஹாஸல்மேன் புவியை குறித்த என்ன மாதிரி (அறிவியல் முறைப்படி) எச்சரித்தாரோ அவை நேரடி காட்சிகளாக மாறிய மாதம் இந்த 2021 ன் ஆகஸ்ட் மாதம்.

க்ளௌஸ் ஹாஸல்மேன் நாய்களுக்குப் பதிலாக சமனற்ற இரைச்சல்களின் இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதை தன் தட்பவெப்ப மாதிரியின் செயல்பாட்டு உதாரணமாக முன்வைத்தார்.

1950களில் ஹாம்பர்க்கில் (ஜெர்மனி) தனது முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு திரவ-இயக்கவிலை பாடமாக எடுத்தவர் அவர், இவ்வகையில் அவரது முழுக்கவனமும் கடல்சார்ந்ததாக அமைந்தது கலிபோர்னியா சென்றபோது ஏனைய கடல் இயல் அறிஞர்களான டேவிட் கீலிங் போன்றவர்களோடு ஹவாய் தீவில் மொவ்னாலோவா ஆய்வகத்தில் வெளிக்காற்றில் கரியமில வாயுவின் அளவை சரியாகக் கணக்கிடும் முறையை அடைந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பரெளனிய துகள் அசைவு எனும் கருதுகோளை தட்பவெப்ப அறிவியலுக்கு ஹாஸல்மேன் புகுத்தினார். வெப்பமேற்றப்படும் ஒரு திரவத்தில் உள்ள அணுத்துகள்கள் நோக்கமற்ற தாறுமாறு திசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. இதற்கு சீரற்ற நடை (Random walk) என்று ஐன்ஸ்டீன் பெயரிட்டார். திரவத்தின் அடிப்படை குணாதிசயத்தை இந்த அணுத் துகள்களின் சீரற்ற பயணம் மாற்றும். இதேபோல வளிமண்டலத்தில் ஏற்படும் அதிவேக மாற்றங்கள் - கடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஹாஸல்மேன் நிரூபித்தார்.

பசுமை இல்ல வாயு அதிகரிப்பு
பசுமை இல்ல வாயு அதிகரிப்பு

பசுமை இல்ல அளவீடு, சூரிய வெப்ப உள் நுழையும் கதிர்வீச்சு, போன்றவற்றின் மிக துல்லிய ஹாஸல்மேனின் கணக்கீடுகள் மனிதனால் ஏற்படுத்தப்படும் – ஆலைகள், வாகனங்கள், வயல்வெளி தெளிப்பான்கள் – கரியமிலவாயு வெளியீடு புவிவெப்பம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பதை ஆக துல்லியமாக நிரூபித்தன. இத்தகைய தன் பங்களிப்பிற்காக அவர் 2021 இயற்பியல் நோபல் பரிசு பெறுகிறார்.

புவி சூடேற்றம் என்பது ஓர் அறிவியல் மெய்மை. மனித தலையீட்டினால் குறிப்பாக வளர்ந்த நாடுகளின் - கார்பரேட் ரக தொழில் பெருக்கம் மற்றும் குளிர்பதன பெட்டி உட்பட அதீத நகர் புறமாக்கல்கள் காரணமாக புவியின் தட்பவெப்பம் மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்கும் எனும் ஹாஸல்மேனின் கருத்துக்கள் இத்தனை சீக்கிரத்தில் உண்மையாகும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

க்ளௌஸ் ஹாஸல்மேன் (Klaus Hasselmann)
க்ளௌஸ் ஹாஸல்மேன் (Klaus Hasselmann)

ஹாஸல்மேனின் கணக்கீடுகளின்படி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியோடு ஒப்பிடும்போது நமது வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் இன்றைய அளவு 40 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அவரது கணக்கீட்டு முறைப்படி (ஹாஸல்மேன் பருவ நிலை மாதிரி விளைவு) புவியின் சூடேற்றம் இதன் காரணமாக 1.7 டிகிரி அதிகரித்து உள்ளது. இது தீவிர பருவநிலை – அவசரநிலை காலத்தை நோக்கி புவியை வேகமாக கொண்டு செல்கிறது.

ஓர் அறிவியல் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே இன்றுவரை நம்பப்படுகிறது. ஹாஸல்மேன் போன்ற பருவநிலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் போலியானவை என்று பகிரங்கமாக அறிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கண்காணிப்பு குழுமத்தில் (Inter Governmental Panel on climate change – IPCC) இருந்து 2015ல் அமெரிக்கா வெளியேறுகிறது என்று அறிவித்தார். 1988ல் ஐ.நாவின் சுழலியல் திட்ட முகமையும் சர்வதேச தட்பவெப்ப அமைப்பும் இணைந்து உருவாக்கிய அமைப்பு அது. 1990,1996, 2001, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் IPCC அமைப்பு வெளியிட்ட புவியின் பருவநிலை மாற்றம் குறித்த கண்காணிப்பு அறிக்கைகளை ட்ரம்ப் கேலி செய்தார்.

50% பெட்ரோலிய பொருள் உற்பத்தியையும், 67% நச்சு உர தயாரிப்பையும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள் நிறுத்துவதை பாரீஸில் 2015 கூடிய பருவநிலைமாற்ற உலக மாநாடு கோரியபோது கரியமிலவாயு வெளியேற்றத்தை தான் குறைக்க முடியாது என்றும் – புவி சூடேற்றம் ஒரு மோசடி என்று அறிவித்து பருவ நிலைமாற்ற உலகக்குழுமத்தில் இருந்தே அமெரிக்க வெளியேறுகிறது என்றும் ட்ரம்ப் அறிவித்தார். அத்தோடு பருவநிலை அவசரகால உலக நிதிக்கான உதவிகளையும் நிறுத்துவதாக அவர் அறிவித்தார். பெரிய கார்ப்பரேட் அதிபர்களும், சிலநாடுகளின் தலைவர்களும் கூட – புவி சூடேற்றம் ஒரு மோசடி அறிவியல் என்றும் பருவநிலை மாற்ற – இயற்கை சீற்றம் என்பது எப்போதும் இருந்து வருவதுதான் என்றும் வாதிட்டனர்.

பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கண்காணிப்பு குழுமம்
பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கண்காணிப்பு குழுமம்

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு – கரியமில வாயு அதிகம் வெளியேற காரணமாகிறார்கள் என ட்ரம்ப் கேலிபேசினார்.

அதிசிக்கலான அமைப்புகளின் ஊடக கணித-இயற்பியல் நுணுக்கங்களை புகுத்தி அவற்றின் அறிகுறிகளை - பொதுமை அம்சங்களை சமிக்கை உடைப்பு செய்திட 1989 ல் ஜியார்ஜியோ பரீஸி தனது புதிய கோட்பாடு ஒன்றை அறிவித்தார். சிக்கல் அமைப்புகள் (complex systems ) என்பவை ஒழுங்கற்ற பொருட்கூட்டத்தின் குழப்பமான முடிச்சுகளில் சிக்குண்டவை. சுழல் கண்ணாடிகள் (spin glasses) மீது இயற்பியல் வடிவமைப்பியல் கேள்வியாக இதை 1980 களின் இறுதியில் ஜியார்ஜியோ பரீஸி மாற்றிக் கொண்டு சில அனுமானங்களை (Hypothesis) அடைந்தார்.

ஜியார்ஜியோ பரீஸி இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்தவர். தற்போது ரோமின் சாப்பியன் சா பல்கலைக்கழகத்தில் குவாண்ட கோட்பாட்டு பேராசிரியராக இருக்கிறார். இவர் 1980 களில் ரோம் பல்கலைக்கழகத்திலேயே ஆய்வுத்துறை பேராசிரியராக இருந்தபோது சுழலும் கண்ணாடிகள் பிரச்னையை ஆய்வு செய்தார். புள்ளியியல் இயற்பியல், கணித இயற்பியல், புலன் கோட்பாட்டியல், இயக்க அமைப்பியல் மற்றும் சுருக்கப்பட்ட பருப்பொருள் துறை என யாவற்றையும் இணைக்கும் சுழலும் கண்ணாடி எனும் அதி – சிக்கல் அமைப்பின் வடிவுரு அடிப்படைகளை விடுவிக்க களமிறங்கினார்.

ஜியார்ஜியோ பரீஸி (Giorgio Parisi)
ஜியார்ஜியோ பரீஸி (Giorgio Parisi)
Cecilia Fabiano/LaPresse

தற்சுழற்சி கண்ணாடி காந்தத்தன்மை கொண்ட அணுக்களால் ஆனது. வடக்கு, தெற்கு என தன் துருவங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். அபூர்வமான உலோகக்கலவையான அந்த அதி சிக்கல் அமைப்பிற்கு பாரிசி பொருத்திய அடிப்படை உருமாதிரி அறியும் அறிவியல் முறைதான் பன்முறை பிரதியாக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் பல்லாயிரம் பிரதிகள் எடுத்து கணித வரைறைக்கு உட்படுத்துதல் கண்ணாடி முதல் தட்பவெப்ப அமைப்பு வரையான சிக்கல் அமைப்புகள் விரக்தி முற்றிய சிக்கல் அமைப்புகள் (Frustrated complex systems) என்று அழைக்கப்படுகின்றன. ஜியார்ஜியோ பரீஸியின் சிக்கல் தீர்வு இயற்பியல் மூலம் தட்பவெப்பத்தை முன் அனுமானித்து கணிப்பது முதல் மருத்துவ துறையில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் சாத்தியங்கள் வரை பலவாறு பயன்படுத்தமுடியும். இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு நோபல் பரிசைப் பெற்று தந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுகள், பருவநிலை மாற்றமும் – புவிசூடேற்றமும் மோசடி என பிதற்றிய ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான புவிப் பாதுகாப்பு நோபல் பரிசுகள் என்பதில் சந்தேகமே இல்லை.

இனி ஒவ்வொறு நாடும் பருவநிலை மாற்றத்தடுப்புக்கு ஆண்டுதோறும் தனி பட்ஜெட் வெளியிட இது தூண்டும்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

புவிப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாரீஸ் (2015) ஒப்பந்த – இலக்குகளை அடைய நாடுகளுக்கு இந்தப் பரிசு அறிவிப்பு, நெருக்குதல் தரும்.

உலகளவில் பள்ளிக்கல்லுரிக் கல்வியில் பருவநிலை மாற்றம் (Climate changes) ஒரு தனி பாடமாக விரைவில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.

இப்படி மேற்கண்ட சூழலிய விஞ்ஞானிகளிள் நீண்ட நாள் எதிர்ப்புகளுக்கு இந்த 2021-ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு வலு சேர்த்துள்ளதே உண்மை.