Published:Updated:

`வெளியில் தெரிவது மட்டுமே இவ்வளவா?!' - ஆஸ்திரேலியாவை நோக்கி நகரும் எரிமலைக் கற்களின் படலம்

மு.ராஜேஷ்

இந்தக் கற்களால் அழிந்து வரும் பவளப் பாறைகள், அவற்றை உயிர்ப்பித்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

Raft of volcanic rocks
Raft of volcanic rocks ( NASA/Terra satellite )

எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் எப்போதும் ஆச்சர்யத்தைக் கொடுப்பவை. உலகில் பல இடங்களில் எரிமலைகள் சீறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை எப்போது வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

Volcanic Eruption
Volcanic Eruption

இப்படிச் சீறும் எரிமலைகளிலிருந்து வெளியாகும் தூசியாலும் எரிமலைக் குழம்பாலும் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். ஆனால் இயற்கையை யாராலும் சரியாகக் கணிக்க முடிவதில்லையே. இப்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகே வெடித்த எரிமலையால் ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது.

கடந்த மாதம் 8-ம் தேதி நாசாவின் புவி கண்காணிப்பு செயற்கைகோளின் பார்வையில் பட்டது அந்தக் காட்சி. பசிபிக் பெருங்கடலில் ஃபிஜி தீவுகளுக்கு அருகே கடலில் பெரும் பரப்பளவில் ஒரு அமைப்பு மிதந்துகொண்டிருந்தது. அடுத்த சில நாள்கள் கழித்து 13-ம் தேதி Landsat 8 செயற்கைகோள் அந்த அமைப்பை இன்னும் தெளிவாகப் புகைப்படம் எடுத்தது. அதன் பிறகுதான் கடலில் மிதந்துகொண்டிருந்தது சிறு சிறு மிதக்கும் கற்களாலான ஒரு மிகப்பெரிய படலம் என்பது தெரிய வந்தது.

Raft of volcanic rocks
Raft of volcanic rocks
NASA/Landsat 8 satellite

பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாடான டோங்காவைச் (Tonga) சுற்றி பல எரிமலைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில எரிமலைகள் அவ்வப்போது சீறுவது வழக்கமாக நடக்கும். அப்படி கடலுக்கடியில் இருந்த ஒரு எரிமலை ஒன்றுதான் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் வெடித்திருக்கிறது. செயற்கைகோள்கள் இந்த எரிமலைக் கற்களின் படலத்தைப் படம் பிடிப்பதற்கு சில நாள்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் சென்ற கப்பல்களின் மாலுமிகள் சல்பர் வாயுவின் மனத்தை சுவாசிக்கும் போது உணர்ந்ததாகத் தகவல் தெரிவித்திருந்தார்கள். அடுத்த சில நாள்கள் கழித்துச் சிறு சிறு கற்கள் கடலின் மேற்பரப்பில் மிதக்கத் தொடங்கியதை ஆகஸ்ட் 9-ம் தேதி வேறு சில மாலுமிகள் பார்த்திருக்கிறார்கள்.

டோங்காவிற்கு அருகே கடலுக்கடியில் இருக்கும் ஒரு எரிமலைதான் வெடித்திருக்கிறது என்பது பின்னர் உறுதியானது. கடலின் மேற்பரப்பிலிருந்து 130 அடிக்குக் கீழே இருக்கும் அந்த எரிமலை கடந்த 2001-ம் ஆண்டில் வெடித்தது. அதன் பின்னர் இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறது. இந்த எரிமலை கொடுத்த அன்பளிப்புதான் பமிஸ் (Pumice stone) எனப்படும் ஒருவகை எரிமலைக் கற்கள். இவை மிகவும் மிருதுவானவை, எடை குறைந்தவை என்பதால் தண்ணீரில் போட்டாலும் மிதக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இப்போது வெடித்த எரிமலையிலிருந்துதான் சிறு சிறு பமிஸ் கற்கள் வெளிவந்திருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு கால்பந்தின் அளவுள்ள கற்கள் இந்தப் படலத்தில் இருக்கின்றன. அதை அந்த படலத்தின் அருகே பயணம் செய்த Sail Surf ROAM என்ற குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள். இந்தக் கற்கள் அடங்கிய படலத்தின் அளவு உலகைப் பிரமிக்க வைத்திருக்கிறது. இது சுமார் 58 சதுர கிலோ மீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கிறது. இது 20,000 கால்பந்து மைதானங்கள் அளவுக்குச் சமமானது. இந்தப் படலத்தில் பல கோடிக்கணக்கான அளவில் கற்கள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் வானிலிருந்து தெரிவது இந்தப் படலத்தில் உள்ள கற்களில் ஒரு பகுதிதான். அதாவது வெறும் 10 சதவிகிதம் மட்டுமே மீதமிருக்கும் 90 சதவிகித கற்கள் நீருக்கு அடியில்தான் மறைந்திருக்கின்றன.

பவளப்பாறைகளை உயிர்ப்பிக்குமா இந்த எரிமலைக் கற்கள்?

இந்தக் கற்களால் மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படப்போவதில்லை. அதேவேளையில் பவளப்பாறைகளை உயிர்ப்பிக்க இவை உதவக் கூடும் என்பதால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினங்களில் ஒன்று இந்தப் பவளப் பாறைகள். அதுவும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் அருகே உள்ள கடல்பகுதியில் காணப்படும் 'தி கிரேட் பேரியர் ரீஃப்' (The Great Barrier Reef) போன்ற பவளப்பாறைகளின் தொகுப்பைப் போல ஒன்றை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. நிலப்பகுதியில் எப்படி மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றனவோ அப்படி கடலில் அதன் இயல்பைத் தக்க வைப்பதில் இந்தப் பவளப்பாறைகளின் பங்கு முதன்மையானது.

ஆனால், புவி வெப்பமயமாதல், கடல் நீரின் வெப்பநிலை தொடர்ந்து உயர்வது, மாசுபாடு போன்ற காரணங்களால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவை பெருமளவில் அழியத் தொடங்கின. பெரும் பரப்பளவில் காணப்பட்ட இவை மீண்டும் உயிர்த்தெழ இந்த பமிஸ் எரிமலைக் கற்கள் உதவும் எனச் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடலில் மிதக்கும் இந்தக் கற்களின் துளைகளில் தண்ணீர் உட்புகுவதால் சில காலம் கழித்து கடலுக்கு அடியில் செல்லும். அதற்குள்ளாக இந்தக் கற்கள் காற்றாலும், கடல் நீரோட்டத்தாலும் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இப்போது 10 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை இந்தப் படலம் நகர்ந்து வருகிறதாகத் தெரியவந்துள்ளது. காற்றின் வேகமும், நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்தால் இது ஒரு நாளில் அதிக தூரத்தைக் கடக்கும்.

கடலுக்கு அடியில் சென்று சேரும் இந்தக் கற்கள் பவளப்பாறைகள் உட்பட பல்வேறு உயிரினங்கள் படர்ந்து வளர ஏற்றதாக இருக்கும். குறிப்பாகப் பவளப்பாறைகள் இவற்றை நன்றாகவே பயன்படுத்திக் கொள்வது முன்னரே உறுதி செய்யப்பட்டுள்ளது. "இந்த பில்லியன் கணக்கான கற்கள் பவளப்பாறைகள் செழித்து வளர்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும். ஒரு வேளை நிலைமை சாதகமாக இருந்தால் தி கிரேட் பேரியர் ரீஃப் பகுதிக்குச் செல்லும். வெறும் 0.1 சதவிகிதம் சென்றால் கூட போதுமானது இளம் பவளப்பாறைகள் அதைப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கை கொண்ட பவளப்பாறைகளாக மாற்றமடையும் என டாஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஜட்ஸெலர் (Martin Jutzeler) என்பவர் தெரிவித்திருக்கிறார்.

Raft of volcanic rocks
Raft of volcanic rocks
Sail Surf ROAM/ Facebook
95 வருடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த எரிமலை... புதிய கோணத்தில் கிடைத்த ஆச்சர்ய புகைப்படம்!

"இப்போது வெடித்திருக்கும் எரிமலையிலிருந்து பமிஸ் எரிமலைக் கற்கள் கிடைக்கக் காரணம் எரிமலைக் குழம்பில் சிலிக்காவின் செறிவு அதீதமாக இருப்பதுதான். இந்த பமிஸ் எரிமலைக் கற்கள் வாரக்கணக்கில், வருடக்கணக்கில் கடலில் மிதக்கும் தன்மை கொண்டவை. அதன் பின்னர் படிப்படியாகக் கடலுக்குள் செல்லும். இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்." என எரிமலை ஆய்வாளரான எரிக் க்ளெமெட்டி (Erik Klemetti) தெரிவித்திருக்கிறார். மனிதர்கள் செய்யும் தவறுகளால் இயற்கையின் கடுமையாகப் பாதிப்படைகிறது. அதைக் குறைக்க ஒரு போதும் மனிதர்கள் முயல்வதில்லை. அது போன்ற சமயங்களில் இது போன்ற நிகழ்வுகளால் இயற்கை தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்கிறது.