Published:Updated:

கார்ட்டூன்களாக மாறப்போகும் மனிதர்கள்... அன்டார்டிகாவில் உடைந்த Brunt பனிப்பாறையும், ஆபத்தும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Brunt பனிப்பாறையும், தொடரும் ஆபத்தும்!
Brunt பனிப்பாறையும், தொடரும் ஆபத்தும்!

அதிகரிக்கும் தட்பவெப்பம் இந்தப் பனிப்பாறைகளை உருக வைத்து நன்னீரை கடலின் உப்பு நீருடன் கலக்க வைக்கிறது. இதனால் பூமியில் வாழும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் தேவையான நன்னீரின் அளவு குறையும்.

பனிப்பாறைகள் என்றாலே 'டைட்டானிக்' திரைப்படம்தான் நம்மில் பலருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஒரு பெரிய கப்பலையே துண்டு துண்டாக உடைத்து புரட்டிப் போடக்கூடிய வல்லமை பனிப்பாறைகளுக்கு உண்டு என்பதை நாம் ஜாக் - ரோஸ் காதல்வழியாகத்தான் தெரிந்துகொண்டோம். அதன்பிறகு பல காதல் கதைகள் வந்துவிட்டதால் பனிப்பாறைகள் பற்றி நாம் மறந்தே போனோம். ஆனால், சமீக காலமாக சூழலியல் ஆர்வலர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பெயராக பனிப்பாறைகள் மாறி வருகின்றன. பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகரிக்கும் வேளையில் அதன் வெடிப்பும் தொடர்கதையாகி வருகின்றன. இவையெல்லாம் நமக்கு சொல்லும் செய்தி என்ன தெரியுமா?! கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்!

பனிப்பாறைகள்!

புவி வெப்பமடைதல் காரணமாக துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், அதன் விளைவாக பூமி பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை மணி ஏற்கனவே அடிக்கப்பட்டுவிட்டது. British Antarctic Survey என்ற அமைப்பு கடந்த பத்தாண்டுகளாகவே பனிப்பாறைகள் பெரிய அளவில் பிளவுபடும் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது. இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்டார்டிகாவின் ப்ரன்ட் (Brunt) ஐஸ் பனித்தட்டில், கிட்டத்தட்ட 490 சதுர மைல் (1,270 சதுர கிலோமீட்டர்) அளவு நீளமும், சுமார் 492 அடி தடிமனும் கொண்ட ஒரு பெரிய பனிப்பாறை உடைந்துள்ளது. இது அளவில் நியூயார்க் நகரத்தை விடப் பெரியது.

ஒரு பனித்தட்டில் இருந்து பனிப்பாறை பிரிந்து போவது கால்விங் (calving) என அழைக்கப்படுகின்றது. அன்டார்டிகாவில் முதன் முதலில் கடந்த நவம்பர் 2020-ல் இந்தப் பனித்தட்டுகளுக்கு இடையே ஒரு புதிய வெடிப்பு உருவாகி சிறு விரிசல்களை நோக்கி நகர்ந்தது. அதன் பின் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்தப் புதிய பிளவு ஒரு நாளுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை அதி வேகமாக நீண்டு சென்றது.

இந்த Brunt பனியடுக்குதான் British Antarctic Survey ஆராய்ச்சி நிலையத்தின் தாயகம். 2016-ம் ஆண்டில், இதுபோன்ற ஒரு calving நிகழ்வின் போது, பேரழிவு நிகழலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிலையம் கொஞ்சம் உள்நோக்கி நிலப்பரப்பிற்குள் நகர்த்தப்பட்டது.

அன்டார்டிக்கின் குளிர்காலத்தின்போது ஒரு நாளின் 24 மணி நேரமும் இருள் சூழ்ந்திருப்பதோடு வெப்பநிலை -60 டிகிரி செல்சியஸ் வரை எதிர்மறையில் செல்லும். எனவே இவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் அங்கிருந்து உடனே ஆராய்ச்சியாளர்களை வெளியேற்றுவது கடினம் என்ற காரணத்தினால் பனிக்காலங்களில் அவை மூடப்பட்டன. அங்கு பணிபுரியும் 12 ஊழியர்களும் 2017முதல் அன்டார்டிகாவின் கோடை மதங்களான நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிகளில் மட்டுமே அங்கு இருப்பார்கள்.

Brunt பிளவு
Brunt பிளவு
சிறு சிறு பிளவுகளாக இருந்து வந்த ப்ரன்ட் (Brunt) ஐஸ் பனித்தட்டின் விரிசல்கள் சென்ற பிப்ரவரி 26-ம் தேதி காலை ஒரு சில மணிநேரங்களிலேயே பல நூறு மீட்டருக்கு பிளவுபட்டு மிகப்பெரிய பனிப்பாறையாக பிரிந்து சென்றுள்ளது. பிபிசி அறிக்கையின்படி கடைசியாக இந்தப் பகுதியில் இவ்வாறான ஒரு நிகழ்வு 1970-களின் முற்பகுதியில்தான் நிகழ்ந்துள்ளது.

BAS நிலையத்தை சுற்றியுள்ள உயர் துல்லியமான ஜிபிஎஸ் கருவிகளின் தானியங்கி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தினசரி இந்தப் பனித்தட்டை BAS கண்காணித்து, இது எவ்வாறு சிதைந்து நகர்கிறது என்பதை அளவிடுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), நாசா மற்றும் ஜெர்மன் செயற்கைக்கோள் டெர்ராசார்-எக்ஸ் (German satellite TerraSAR-X) ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களும் இவற்றை கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, பனித்தட்டுக்கள் என்றால் என்ன? எதற்காக சூழலியலாளர்கள் இதை கண்காணிக்கிறார்கள்?

பனித்தட்டுகள் (Ice Shelf) என்றால், ஒரு நிலப்பரப்புடன் நிரந்தரமாக இணைந்திருக்கும் மிதக்கும் பனித்தகடுகள் (Ice Sheets) அல்லது பனிக்கட்டிப் படலம் என்று அர்த்தம். உலகின் பெரும்பாலான பனித்தட்டுகள் அன்டார்டிகா கடற்கரையையே காதலுடன் கட்டிப்பிடித்திருக்கின்றன. இதுதவிர கிரீன்லாந்து, ரஷ்யாவின் ஆர்க்டிக் வட்டம் மற்றும் கனடா போன்ற இடங்களிலும் இவை காணப்படுகின்றன.

நாம் Ice Age எனும் கார்ட்டூன் திரைப்படத்தை பார்த்திருப்போம். IceAge காலப்பகுதியில் வாழ்ந்த விலங்குகளையும் அதன் வாழ்க்கை முறையையும் சொல்லும் அந்தத் திரைப்படத்தின் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன. எதிர்காலத்தில் வரப்போகும் அதன் இறுதிப்பாகத்தில் நாமெல்லாம் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாகவே வாழப்போகிறோம். ஏனெனில் இந்தப் பூமியின் கடைசி IceAge காலத்தில்தான் (அதன் பின்னர் அழி்வுதானே!) நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
Brunt பிளவு
Brunt பிளவு

கிளேசியர் எனப்படும் பனி ஆறுகள் பல மில்லியன் ஆண்டுகளாக நமது பூமியை சமநிலையாக வைத்து அழகுபடுத்தி வந்துள்ளது. கிளேசியர்கள் உருகி, பரவி, பூமியின் மேற்பரப்பை ஒரு கை தேர்ந்த சிற்பியைப் போல செதுக்கி, இன்று நாம் காணும் பல இயற்கை காட்சிகளை உருவாக்குகின்றன. ப்ளீஸ்டோசீன் பனி யுகத்தின் போது (Pleistocene Ice Age), பூமியின் மூன்றில் ஒரு பங்கு நிலம் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருந்தது. ஆனால் இன்று பூமியின் பத்தில் ஒரு பங்கு நிலம் மட்டுமே பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த பனி ஆறுகள் தற்போது கரைந்து மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன.

சரி, எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் உள்ள இந்த பனிப்பாறைகள் உருகுவதால் நமக்கென்ன என்று பலருக்கும் தோன்றலாம். Butterfly effect என சொல்லப்படும் பட்டாம்பூச்சி விளைவு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பட்டாம்பூச்சி அதன் இறக்கைகளை மடக்கி விரிப்பதன் மூலம் ஒரு சூறாவளியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது போல, சிறிய விஷயங்கள் ஒரு சிக்கலான அமைப்பில் நேரியல் அல்லாத தாக்கங்களை ஏற்படுத்தும். நமக்கு எட்டமுடியா தூரத்தில் எங்கோ இருக்கும் துருவங்களில் பனிப்பாறை உருகுவதும் நம் வாழ்வில் நேரடியாக இல்லாத பல விளைவுகளை ஏற்படுத்தும்.

அதிகரிக்கும் தட்பவெப்பம் இந்தப் பனிப்பாறைகளை உருக வைத்து நன்னீரை கடலின் உப்பு நீருடன் கலக்க வைக்கிறது. இதனால் பூமியில் வாழும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் தேவையான நன்னீர் அளவு குறைகிறது. அதிகளவிலான நன்னீர் கலப்பு கடலின் ஈக்கோ சிஸ்டத்தின் அமைப்பை குலைப்பது மட்டுமல்லாது கடல் மின்னோட்டத்தையும் பாதிக்கின்றது. அதிகரித்துச் செல்லும் கடல் மட்டம் இப்படியே தொடருமாயின் கரையோர நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி, உலக மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் வரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

அன்டார்டிகா
அன்டார்டிகா

உண்மையில் இந்தப் பனித்தட்டுகளுக்குத் தற்போது என்னதான் நடக்கிறது?

கடந்த முப்பது ஆண்டுகளில், அன்டார்டிக் பகுதியில் தொடர்ச்சியாகவே அசாதாரண பனித்தட்டுகள் இடிந்து விழுவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். எனவே பனித்தட்டுகள் விரிசலடைந்து பெரிய பனிப்பாறைகளை விடுவிப்பது ஒன்றும் (calving) வழக்கத்திற்கு மாறானதல்ல என்றாலும், ice shelves-களில் முதலில் விரிசல்கள் மெதுவாக உருவாகும்போது, ​​அந்த செயல்முறை பொதுவாக பல மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை எடுக்கும். ஒரு பனிப்பாறை பிரிந்து உடைந்தால் Ice Shelves மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப பத்தாண்டுகள் பல ஆகும்.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், அன்டார்டிக் துருவப் பகுதிகளிலும் கனடாவின் வடக்கு கடற்கரையிலும் உள்ள பனித்தட்டுகள் விரைவாக சிதைவடைந்து வருகின்றன. மார்ச் 2008-ல், அன்டார்டிகாவில் உள்ள வில்கின்ஸ் ஐஸ் ஷெல்ஃப் (Wilkins Ice Shelf) 400 சதுர கிலோமீட்டருக்கும் (160 சதுர மைல்) மேல் பிரிந்து சென்றது. அதைத் தொடர்ந்து அந்த கோடைப் பருவத்தின் பிற்பகுதியில், வடக்கு கனடாவின் எல்லெஸ்மியர் தீவில் பல பனித்தட்டுகள் சில நாட்களில் தொடர்ச்சியாக உடைந்தன.

தற்போது பல மைல் தூரத்துக்கு உடைந்து பிரிந்துள்ள ப்ரன்ட் (Brunt) ஐஸ் பனித்தட்டு சூழலியலாளர்களுக்கு மட்டுமல்ல நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்குமான ஓர் எச்சரிக்கை மணிதான்.

பாறைகள் நம் கண் முன்னே உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கின்றன... நாம் எப்போதும்போல வேடிக்கைதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு