Published:Updated:

அணுகுண்டுக்குக்கூட அசராத பதுங்கு குழி! - ஜெர்மனியின் சுவாரஸ்ய பக்கங்கள் #MyVikatan

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என நாகசாகி ஹிரோஷிமா உலகுக்கு உணர்த்தியது.

"சாக்லேட் தொழிற்சாலைகள் எவ்வளவு பாதுகாப்பானதோ அதே போன்று பாதுகாப்பானது அணு உலைகள்!" இதைச் சொன்னவர், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையின் இயக்குநர். இதைச் சொன்ன ஒரு வாரம் கழித்து அணு உலை வெடித்துச் சிதறிவிட்டது.

Representational Image
Representational Image

இன்றைக்கும் மக்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும் இடம் செர்னோபில். அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என நாகசாகி ஹிரோஷிமா உலகுக்கு உணர்த்தியது. குண்டுவிழுந்த பொழுது நின்றுகொண்டிருந்த மக்கள் அப்படியே ஆவியாகிவிட்டனர். ஆவியாகிவிட்டனர் என்றவுடன் பேயாகி விட்டனர் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். EVAPORATE ஆகிவிட்டனர்! இது போன்ற அணு ஆயுதத் தாக்குதல்களிலிருந்து ஒரு நாட்டின் அரச தலைவரைக் காப்பதற்கு பல நாடுகள் ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கின்றன. இது தொடர்பான தெளிவான தகவல்கள் நம்மிடம் இல்லை. ஆனால், மேற்கு ஜெர்மனி அணுஆயுதத் தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டின் அரச தலைவர் மற்றும் முக்கிய அதிகாரிகளைக் காப்பதற்கு என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருந்தார்கள் என்பது 1997-ம் ஆண்டு உலகுக்குத் தெரிய வந்தது. அதுதான் ஜெர்மனியின் பான் (Bonn) நகருக்கு அருகே உள்ள `பங்கர்' (Bunker).

Vikatan

பங்கர் என்றால் பதுங்கு குழி என்பது நமக்குத் தெரியும். ஜெர்மனியின் இந்த பங்கரின் நீளம் 19 கி.மீ. இதை மேற்கு ஜெர்மனி ரகசியமாகக் கட்டிமுடிக்க எடுத்துக்கொண்ட காலம் 12 ஆண்டுகள். இப்படி ஒரு பங்கர் இருப்பதே ஜெர்மனியர்களுக்கு 1997 வரை தெரியாது. இப்போது அந்த பங்கரின் பெரும் பகுதியை மூடிவிட்டு, ஏறக்குறைய 1 கி.மீ தூரத்தை மட்டும் பராமரித்து வருகிறார்கள். சி.எஸ்.ஐ.ஆரில் ஆராய்ச்சியாளராக இருக்கும் நான், 2018-ம் ஆண்டு அங்கே போயிருந்தபோது தெரிந்துகொண்ட விஷயங்களையும் எடுத்த புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பதுங்கு குழி
பதுங்கு குழி

எங்களுக்காக ஆங்கிலம் பேசத் தெரிந்த வழிகாட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். எல்லோரும் நெருக்கமாக நிற்க வேண்டுமென்று சொல்வதை நகைச்சுவையாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு, "லண்டன் டியூபில் (மாநகர ரயில்) நிற்பதுபோல் நில்லுங்கள்" என்று சொன்னார். நான் சிரித்தேன். ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார். என்னுடைய செல்போனில் மும்பை ரயிலில் மக்கள் பயணிக்கும் படத்தைக் காட்டினேன். அவர் சிரித்துவிட்டு, லண்டன் டியூபில் நிற்பதுபோல நின்றாலே போதுமென்றார்! பொதுவான மற்ற பங்கர்களைப்போல அல்லாமல், இந்த பங்கர் அணு ஆயுத தாக்குதலைத் தாங்க வல்லது. முதல் உலகப்போருக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் இருந்த இரண்டு ரயில் நிலையங்களை இணைத்து ஒரு மலையைக் குடைந்து இதைக் கட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக கனமான கான்கிரீட் சுவர்களை வைத்துக் கட்டி, அதன் மீது பாறைகளையும் மண்ணையும் போட்டு மூடி, அதற்கு மேல் மரங்களை வளர்த்துள்ளதால், அணுகுண்டை அந்த பங்கரின் மீது போட்டாலும் பாதிப்பு இருக்காது என்று சொன்னார்கள். அணு குண்டு போடப்பட்டவுடன், ஏற்படும் வெப்பம் மற்றும் அணுக்கதிர்வீச்சை வைத்து அந்த பங்கரின் கதவு தானாகவே மூடிக்கொள்ளும். மூடுவதற்கு எடுக்கும் நேரம் சில நொடிகளே. அந்த கதவு கான்கிரீட் மற்றும் உலோகத்தால் ஆனது. அந்தக் கதவின் கணம் ஏறக்குறைய ஐந்தடி இருக்கும். இவ்வளவு கணமான கதவை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. அதற்கு அடுத்து குளியலறைகள் உள்ளன. உள்ளே நுழைபவர்கள் மீது அணுகதிர்வீச்சு வேதிப்பொருள்கள் இருந்தால், அதை நீக்குவதற்காக இந்தக் குளியலறை வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே போனவுடன், உடைகள் அனைத்தையும் கழட்டி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு, குளிர் நீரில் குளிக்க வேண்டும். சுடுநீரில் குளித்தால் தோலில் உள்ள துவாரங்கள் திறந்து வேதிப்பொருள்கள் உடலின் உள்ளே போய்விடும். எனவே, குளிர் நீர் குளியல்.

பதுங்கு குழி அறை
பதுங்கு குழி அறை

ஒழுங்காக குளிக்கிறாரா என்பதை அருகே உள்ள அறையில் இருந்து ஒருவர் பார்ப்பதற்கும் வசதி செய்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சிறிய அறையில் நுழைந்தால், உடலில் கதிர்வீச்சு உள்ளதா என ஒரு கருவி சோதனை செய்யும். கதிர்வீச்சு இல்லையென்றால் உள்ளே செல்லலாம். கதிர்வீச்சு இருந்தால் மீண்டும் குளிர் நீர் குளியல். சுத்தமாக கதிர்வீச்சு இல்லையென்று உறுதி செய்த பிறகே அந்த அறையின் கதவு திறப்பார்கள். அதைக் கடந்து உள்ளே போனால் அலுவலகங்கள் உள்ளன. ஒரே சமயத்தில் 3,000 பேர் வேலை செய்ய வசதிகள் உள்ளன. உள்ளே முடிவெட்டுவதற்கு இரண்டு அறைகள் உள்ளன. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன. பல் மருத்துவருக்கான சிகிச்சை அறையும் இருக்கிறது.

Vikatan

பணியாளர்கள் பொழுது போக்குவதற்கான சினிமா பார்க்கும் வசதிகளும் உள்ளது. வெளியிலிருந்து வீசப்படும் அணு குண்டுகளில் இருந்து பாதுகாப்பு இருந்தாலும், உள்ளயே தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? தீயணைப்புக்கும் வசதிகள் செய்திருக்கிறார்கள். இந்த பங்கர் அலுவலர்களுக்கு மட்டுமானதல்ல. ஜெர்மனியின் சான்செலருக்கு (Chancellor - வேந்தர்) ஒரு சிறிய அறையும் படுக்கையும் உள்ளது. இங்கிருந்தே சான்செலர் அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிப்பார். சான்சலரின் மனைவிக்கு இங்கே இடமில்லை. அவர் பங்கருக்கு வர முடியாது. அவர் குழந்தைகளும் வர முடியாது. சரி, சான்சலர் பெண்ணாக இருந்தால் அவர் கணவருக்கு இடமுண்டா? அது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இல்லை. ஏனென்றால், பெண்கள் சான்சலராக வர முடியாது என்பது அன்றைய 1972-ம் ஆண்டு ஜெர்மனியின் நம்பிக்கை. இந்தியாவில் இந்திராகாந்தி பிரதமராக வந்தது 1966 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த பங்கரில் சான்சலருக்கு என்று தனியாக எந்தச் சிறப்புச் சலுகைகளும் இல்லை, சிறிய தனி அறையைத் தவிர. அங்கே இருந்து அவர் பேசுவதை நேரலையாக டிவியில் ஒளிபரப்ப வசதியும் இருக்கிறது.

பதுங்கு குழி அறை
பதுங்கு குழி அறை

மொத்தம் 30 நாள்கள் வெளியுலகில் இருந்து எந்த உதவியும் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பாக இயங்க அனைத்து வசதிகளும் இந்த பங்கரில் உள்ளன. இதைப் பராமரிப்பதில் ஊழலும் நடந்ததாக சுற்றுலா வழிகாட்டி வருத்தப்பட்டுக்கொண்டார். நாங்கள் உள்ளே போன கொஞ்ச நேரத்திலிருந்து, என்னுடன் வந்த விஞ்ஞானியின் மனைவி அழுதுகொண்டே இருந்தார். ஏனென்று எனக்கு புரியவில்லை. கணவரும் கட்டிப்பிடித்தார், தட்டிக் கொடுத்தார், ஆனால் அவர் அழுகையை நிறுத்தவே இல்லை. என்ன காரணமாக இருக்குமென்று சிந்தித்துக்கொண்டே விளக்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பின்பு, காரணத்தைக் கணிக்க முடிந்தது. அந்தப் பெண் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.

இரண்டாம் உலகப்போரில் சோவியத்துக்கும் (ரஷ்யா) ஜெர்மனிக்கும் நடந்த போர் இரு நாட்டிலும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதில் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது கணிப்பு. அடுத்த நாள், தேநீர் குடித்துக்கொண்டிருக்கும்போது அந்த விஞ்ஞானியிடம் காரணத்தைக் கேட்டேன். ஸ்டாலின்கிராட் போரில் என் மாமனார் கொல்லப்பட்டார். போர் தொடர்பான விளக்கங்களைக் கேட்டவுடன், என் மனைவிக்கு அவர் தந்தை ஞாபகம் வந்துவிட்டது. அதனால், அழுக ஆரம்பித்துவிட்டார் என்று சொன்னார். உலக வரலாற்றில் நடந்த போர்களில் ஸ்டாலின்கிராட் சமர் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன்பு வரை பெண்கள் போரில் செவிலியராக, உதவியாளர்களாகப் பங்குபெற்றார்கள்.

பதுங்கு குழி அறை
பதுங்கு குழி அறை

விதிவிலக்காக வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சி ராணி லக்குமிபாய் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் போன்றவர்கள் படை நடத்தினார்கள். ஆனால், ஸ்டாலின்கிராட் சமரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆயுதமேந்தி போரிட்டனர். ஜெர்மனிய படைகளுக்கு ஜெனரல் பிரெடெரிக் பாவ்லஸ் என்ற திறன்மிகுந்த வீரர் தலைமை தாங்கினார். இவர் எதிரியை நெருங்கி தாக்கும் முறையை விரும்பாதவர். விமானங்கள் மூலம் குண்டு போடுவது, அதன் பின் ஆர்டிலரிகள் மூலம் குண்டுபோட்டு ஏறக்குறைய எல்லாவற்றையும் அழித்த பிறகு வீரர்களுடன் முன்னேறுவார். இதைப் புரிந்துகொண்ட ரஷ்ய படைத்தளபதி ஜெனரல் ஸுக்கோவ், ஜெர்மனிய வீரர்களை நெருங்கித் தாக்குவது என்று முடிவெடுத்தார். நெருங்கித் தாக்க, குறிபார்த்து சுடும் வீரர்கள் தேவை. குறிபார்த்து சுடுவதற்கு பொறுமையும் துல்லியமும் தேவை. அவை இரண்டும் பெண்களுக்கு உள்ளது என்று முடிவு செய்து அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

ஐந்து லட்சம் சோவியத் பெண்கள் ஜெர்மனிய ஆண் வீரர்களைக் கொன்றுக் குவித்துவிட்டார்கள். சோவியத்தின் கை ஓங்குவதை உணர்ந்த ஜெனரல் பாவ்லஸ், பின் வாங்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால், ஹிட்லர் அந்த முடிவை ஏற்கவில்லை. இறுதி ஜெர்மனிய ஆரியனும் குண்டும் இருக்கும் வரை போராடும்படி ஆணையிட்டார். போராடுவதை ஊக்குவிப்பதற்காக, ஜெனரல் பாவ்லசை ஃபீல்டு மார்ஷலாகப் பதவி உயர்த்தினார். இறுதியில், தோல்வியடைந்த ஃபீல்டு மார்ஷல் பாவ்லஸ், சோவியத் படைகளிடம் சரணடைந்தார். உலக வரலாற்றில் சரணடைந்த ஒரே ஃபீல்டு மார்ஷல் பாவ்லஸ்தான்.

பதுங்கு குழி அறை
பதுங்கு குழி அறை

சோவியத், ஸ்டாலின்கிராட் போரில் வென்றது. ஆனால், வெற்றி பெற்ற சோவியத் நாட்டைச் சேர்ந்த பெண் அழுததைப் பார்த்தபோது, போரில் யாரும் வெல்வதில்லை, மனித குலம் தோற்கிறது என்று நினைத்துக்கொண்டேன். போரும் வன்முறையும் ஏற்படுத்தும் வடுக்கள் மறைவதேயில்லை. இதை நாம் என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுவரை நடந்த போர்கள் வடுக்களை விட்டுச் சென்றது. இனி வரும் போர்கள் எதையும் விட்டுச் செல்லாது. இதை நான் சொல்லவில்லை, அணுகுண்டு கண்டுபிடிக்க மூலகாரணமாக இருந்த சூத்திரத்தைக் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் சொன்னார், “I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.”

- கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு