Published:Updated:

35,000 குழந்தைகளைப் பாதித்த லித்தியம் பேட்டரி உருவாக்கம்... நோபல் பரிசின் பின்னணி #MyVikatanStory

காங்கோ
News
காங்கோ

அந்தக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதில் கோபால்ட் அடங்கிய பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்கும் 3 மணி நேரமும் அடக்கம்.

சி.எஸ்.ஐ.ஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை முக்கியமானதொரு செய்தியை இங்கே பதிவுசெய்திருக்கிறது. இந்தக் கட்டுரைபோல விகடனில் உங்களுடைய கட்டுரையும் வரவேண்டுமா? கீழே அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

``பேட்டரி கார்கள் மணிக்கு 800 கிமீ வேகத்தில் ஓடும். விலை, பெட்ரோல் டீசல் கார்களை விட மிகக் குறைவு. பேட்டரியின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள். இதெல்லாம் பேட்டரி கார்கள் தொடர்பாக வாட்ஸ்அப்பில் உலவும் செய்திகள். பயணிகள் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 900 கிமீ வேகத்தில் பறக்கிறது. அப்படியானால், கார் எப்படி மணிக்கு 800 கிமீ வேகத்தில் ஓடும்? அதேபோல, பெட்ரோல் டீசல் கார்களை விட பேட்டரி கார்கள் விலை குறைவு என்பதும் உண்மையில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹூண்டாய் (கொரிய மொழியில் இதை `ஹந்தாய்' என உச்சரிக்க வேண்டும்) சமீபத்தில் சென்னையில் அறிமுகம் செய்த பேட்டரி காரின் விலை ரூ.25 லட்சம். பெட்ரோல் டீசல் கார்களின் விலை உங்களுக்குத் தெரியும். அவற்றோடு பேட்டரி காரின் விலையை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள், அப்போது புரியும் பேட்டரி கார்கள் விலை குறைவா அதிகமா என்பது. பேட்டரியின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என்பதும் விவாதத்திற்குரியதே. பேட்டரியின் ஆயுட்காலம் என்பது, பேட்டரி எத்தனை முறை சார்ஜ் செய்யப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படும். பேட்டரியைப் பயன்படுத்தி எத்தனை கிலோ மீட்டருக்கு ஒரு காரை ஓட்ட முடியும் என்பதை வைத்தும் இன்னொரு முறையில் ஆயுட்காலம் கணக்கிடப்படும். எனவே, கார் பேட்டரியின் ஆயுட்காலத்தை வருடங்களில் கணக்கிடுவது சரியாக இருக்காது.

Recharge
Recharge
Pixabay

டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் இனிமேல் பயன்படாது, இன்னும் ஐந்தாண்டுக் காலத்தில் எல்லாமே பேட்டரி கார்கள்தாம் என்பதும் வாட்ஸ்அப்பில் உலவும் இன்னொரு தகவல். இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கையை மூன்று விஞ்ஞானிகள் விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டுபிடித்தது, ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயனி பேட்டரிகள் (Rechargeable Lithium Ion Batteries).

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் குட்எனஃப் (Professor John B Goodenough), பிங்காம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி விட்டிங்காம் (Professor Stanley Whittingham), மற்றும் ஜப்பான் நாட்டின் மெய்ஜோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிரா யோஷினோ (Professor Akira Yoshino) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்காக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பேட்டரிகள், ரீசார்ஜ் செய்யும் வாய்ப்புகள் இல்லாதவை. நாம் இன்றைக்கும் கடிகாரங்களில் பயன்படுத்துவது அந்த வகை பேட்டரிகளே. கடிகார பேட்டரியின் சார்ஜ் போய்விட்டால், கீழே தூக்கி போட்டுவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால், நம் செல்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் போய்விட்டால் பலமுறை ரீசார்ஜ் செய்ய முடிகிறது.

டெஸ்லா பேட்டரிகள்
டெஸ்லா பேட்டரிகள்
The Guardian

ரீசார்ஜ் செய்யும் அமைப்புடைய லித்தியம் பேட்டரிகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள ஒரு வேதிப்பொருள் லித்தியம் கோபால்ட் ஆக்சைட். இதற்குத் தேவையான கோபால்ட் என்ற கனிமம் காங்கோ நாட்டின் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்று நாம் உபயோகிப்பதில் 60% கோபால்ட் காங்கோ நாட்டுச் சுரங்கங்களில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த கோபால்ட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கும் பேட்டரிகளை ஃபோர்ப்ஸ் இதழ், 'ரத்த பேட்டரிகள்' (Blood Batteries) என்று குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியிருந்தது.

இவ்வளவு காட்டமாகக் காங்கோவின் கோபால்ட் சுரங்கங்கள் பற்றி ஃபோர்ப்ஸ் கட்டுரை எழுதக் காரணம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். சுமார் 35,000 குழந்தைகள் பணிபுரிவதாகத் தரவுகள் சொல்கின்றன. அவர்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து சுரங்கங்களுக்குப் போகிறார்கள். அங்குள்ள கோபால்ட் தாதுக்களைக் கையால் எடுத்துப் பையில் போட்டு சுமந்துகொண்டு அருகில் உள்ள மாலோ என்ற ஏரியில் கழுவுகிறார்கள். மீண்டும் அதைத் தூக்கிக்கொண்டு போய் கோபால்ட் தாதுக்களை வாங்கும் சீன வியாபாரிகளிடம் விற்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதில் கோபால்ட் அடங்கிய பைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் 3 மணி நேரமும் அடக்கம். இதன் மூலம் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வருமானம் 30-50 ரூபாய்.

இப்படி வேலை செய்யும் குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்?

இந்தச் சுரங்கங்களில் வேலை செய்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுப் பல பெற்றோர்கள் மரணமடைந்து விட்டார்கள். பல கைம்பெண்களும் இங்கே வேலை செய்கிறார்கள். ஒரு 15 வயதுச் சிறுமி, பிறந்து இரண்டு மாதமே ஆன அவருடைய மகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு வேலை செய்கிறார்.

காங்கோ நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை இரண்டு மாதத்திலேயே வேதித்துகள்களைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறது. நாம் உபயோகிக்கும் பேட்டரிகளுக்குப் பின் இப்படி ஒரு கொடுமை இருப்பதை உலகிற்குச் சொல்வதற்குத்தான் ஃபோர்ப்ஸ் "ரத்த பேட்டரிகள்" என்று கட்டுரை எழுதியது.

சரி, இந்த ரத்த பேட்டரிகளுக்கும் இயற்பியல் நோபல் பரிசுக்கும் என்ன தொடர்பு? இப்போது இதை இங்கு பேசுவது ஏன்?

காங்கோ போன்ற நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கத்தான் கரிம வேதிப்பொருள்களைப் (Organic Molecules) பயன்படுத்தி லித்தியம் பேட்டரி தயாரிக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பேட்டரிகள் எடை குறைவாகவும், வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும். இதில் ஆராய்ச்சிக் குழு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.

டாராஸ்கான்
டாராஸ்கான்

கரிம வேதிப் பொருள்களை உள்ளடக்கிய பேட்டரி ஆராய்ச்சியின் முன்னோடி பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் ஜான் மெரி டாராஸ்கான் (Professor John-Marie Tarascon). இவருக்கு நோபல் பரிசு கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். அவருக்குக் கிடைக்காதது எனக்கு வருத்தமே.

இந்தப் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் இன்னொரு மூலப்பொருள் லித்தியம். இது பூமியில் அரிதாகக் கிடைக்கும் தனிமம். ஓர் ஆராய்ச்சியின் படி, இன்னும் 17 ஆண்டுகளுக்கு மட்டுமே லித்தியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இன்னோர் ஆராய்ச்சியில் 300 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நாம் எவ்வளவு பேட்டரிகளைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அது எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது அமையும்.

லித்தியம் பேட்டரி
லித்தியம் பேட்டரி
Pixabay

இந்த பேட்டரிகள் ஒருவகையில் ஆபத்தானவையாக இருந்தன. 2010-ம் ஆண்டு துபாய் நாட்டிலிருந்து கிளம்பிய யுபிஎஸ் விமானம் (Boeing 747-400F) 81000 லித்தியம் பேட்டரிகளை எடுத்துக்கொண்டு கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த பேட்டரிகளில் ஏற்பட்ட தீ, விமானத்தை மொத்தமாகத் தீக்கிரையாக்கியது. அதற்குப் பிறகு நடந்த பல ஆராய்ச்சிகள், லித்தியம் பேட்டரிகளைப் பாதுகாப்பானவையாக மாற்றியுள்ளன. சிறு உபகரணங்களை ரீசார்ஜ் செய்வதற்குத்தான் இந்த பேட்டரிகள் முதலில் உருவாக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் நடந்த பலகட்ட ஆய்வுகள் அந்த நிலையை மாற்றின. அதன் விளைவாக, டெஸ்லா கம்பெனி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்கு அருகில் பல நகரங்களுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மிகப்பெரிய பேட்டரிகளை நிர்மாணித்திருக்கிறது. டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார்களை உருவாக்கி விற்பனை செய்கிறது.

இத்தகைய லித்தியம் பேட்டரிகளைக் கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவரான ஜான் குட்எனஃப் தன் 97 வயதில் நோபல் பரிசைப் பெற்றுள்ளார். அவர் ஓர் ஆச்சர்ய மனிதர். உலகிலேயே மிக முதிய வயதில் நோபல் பரிசு பெறுகிறவர் இவர்தான். இன்றைக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குத் தினமும் வந்து விடுவார். டிஸ்லெக்ஷியா நோயினால் பாதிக்கப்பட்ட குட்எனஃப் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் சிறு வயதில் பெரும்பாலும் வீட்டின் அருகே இருந்த சிறு வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் சேர விரும்பியபோது அவருடைய பெற்றோர் அவருக்குக் கொடுத்தது வெறும் 35 டாலர்கள் மட்டும்தான். ஆனால், ஓராண்டுக்கு அவருக்குத் தேவைப்பட்டது 900 டாலர்கள். தேவையான மீதிப் பணத்தை டியூசன் சொல்லிக்கொடுத்துச் சம்பாதித்தார்.

நோபல் பரிசு பெற்ற குட்எனஃப்
நோபல் பரிசு பெற்ற குட்எனஃப்

கோடை விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் டியூசன் வருமானம் நின்று விடும். அந்த நேரங்களில் அவரின் நண்பர்களின் பெற்றோர் உணவு வழங்கினார்கள். அதன்மூலம் அவர் தன் இளங்கலை படிப்பை முடித்தார். பிறகு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற முடிவு செய்து தேர்வு எழுதியவர், முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்து விட்டார். இரண்டாவது முறையில் தேர்ச்சியடைந்து முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். லித்தியம் பேட்டரி ஆராய்ச்சியை குட்எனஃப் தொடங்கிய சமயத்தில் அவரிடம் இரண்டு இந்தியர்கள் ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் பெயர் அக்க்ஷய பதி மற்றும் கிரக்கோடு நஞ்சுண்டஸ்வாமி. லித்தியம் பேட்டரி ஆராய்ச்சியில் இந்த ஆராய்ச்சியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர மாரியப்பன் பரந்தாமன், ஆறுமுகம் மந்திரம், ஆர்.மனோகரன். ப்ரீத்தம் சிங், எம்.எம் தாக்கரே, வி.மணிவண்ணன், ராஜசேகர ஷ்ரேயாஸ் மற்றும் ஸ்வர்ணகமல் முக்கர்ஜீ போன்றவர்களின் பங்கும் மிக முக்கியமானது.

குட்எனஃப் இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவிடம் இருந்து National Medal of Science என்ற விருதைப் பெற்றுள்ளார். நோபல் அறிவிக்கப்படும் பொழுது லண்டனில் ராயல் சொசைட்டியின் மதிப்புமிக்க கோப்லி மெடலை வாங்குவதற்காக வந்திருந்தார். நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை, லண்டனில் தூங்கிக் கொண்டிருந்த குட்எனஃப்-பை எழுப்பி மரியா ஹெலினா பிராகா (Professor Maria Helena Braga) என்ற பேராசிரியை சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு குட்எனஃப் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் இந்த வயதில் நோபல் பரிசு என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன இன்னொரு தகவல் எல்லோருக்கும் முக்கியமானது.

Electric Car
Electric Car
Pixabay
மற்றவர்களைக் காப்பியடிக்காதீர்கள். உங்களுக்குள்ள தனித்திறமையைக் கண்டுபிடியுங்கள். அதை நன்கு வளரச் செய்யுங்கள். உலகில் பல பிரச்னைகள் உள்ளன. அதைச் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஜான் குட்எனஃப்

- முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/