Published:Updated:

Eye of fire: தீப்பற்றி எரிந்த கடல்... மெக்சிக்கோ கடல் பகுதியில் என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Gulf of Mexico on Fire | மெக்சிக்கோ கடலில் தீ
Gulf of Mexico on Fire | மெக்சிக்கோ கடலில் தீ ( Screenshot from Viral Video )

பலர் அச்சத்துடன் சமூக வலைதளங்களில் அந்தக் காணொளியைப் பகிர்ந்திருக்கிறார்கள். தீப்பற்றி எரியும் கடலைப் பார்த்தால் எதோ ஓர் இனம்புரியாத பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது என்பதே உண்மை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புனைவில் வரும் கற்பனையை விட நிதர்சனம் விநோதமானது என்பார்கள். கடல் தீப்பற்றி எரிவதை ஒரு ஃபேண்டஸி படத்தின் VFX காட்சியாகவோ காதல் கவிதையில் வரும் அதீத கற்பனையாகவோ மட்டும்தான் நாம் இதுவரை ரசித்திருக்கிறோம். ஆனால், உண்மையாகவே கடல் தீப்பற்றி எரிந்திருக்கிறது. அதுவும் மூன்று நாள்களில் இரண்டு தனித்தனிக் கடற்பகுதிகளில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஒன்று விபத்து, மற்றொன்று (இப்போதைய நிலவரப்படி) இயற்கைப் பேரிடர்.

மெக்சிக்கோவின் யூகடான் தீபகற்பத்துக்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் கூ-மலூப்-சாப் (Ku-Maloob-Zap) என்ற மூன்று எண்ணெய்ப் படுகைகள் உண்டு. மெக்சிக்கோ நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெமெக்ஸ், இந்த இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டறிந்து, பல ஆண்டுகளாக இங்கு எண்ணெய் எடுத்து வருகிறது. பெமெக்ஸின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% இங்கிருந்துதான் வருகிறது.

ஜூலை மாதம் 2ம் தேதி காலையில் எண்ணெய் எடுக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 150 அடி தள்ளி ஓர் இடத்தில் கடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. கடலுக்கடியில் உள்ள குழாயிலிருந்து வாயுக்கள் கசிந்ததால் (gas leak) இந்த விபத்து ஏற்பட்டதாக பெமெக்ஸ் தரப்பு கூறியிருக்கிறது. கிட்டத்தட்ட ஓர் அடி விட்டமுள்ள இந்தக் குழாய், கடல்மட்டத்திலிருந்து 78 மீட்டர் கீழே இருந்திருக்கிறது. மின்சாரப் பிரச்னைகள், கடும் மழை காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Eye of Fire | Gulf of Mexico
Eye of Fire | Gulf of Mexico
Screenshot from Viral Video

விபத்து ஏற்பட்ட கொஞ்ச நேரத்திலேயே கடல் தீப்பற்றி எரியும் காணொளிகளும் புகைப்படங்களும் வைரலாகிவிட்டன. எரிமலைக் குழம்பு போலக் கடலிலிருந்து எழும்பிய தீப்பிழம்புகளுக்கு இணைய உலகம் 'Eye of fire' என்று பெயர் சூட்டியது.

ஐந்து மணிநேரம் போராடியபின்னரே தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. குழாய்க்குள்ளிருந்து எதுவும் வெளியில் கசியவில்லை (spill) என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பெமெக்ஸ் நிறுவனம் இதுபோன்ற சூழல்சார் விபத்துக்களுக்குப் பெயர் போனது. உலகிலேயே மிக அதிகமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் டாப் டென் நிறுவனங்களின் பட்டியலில் இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க வைரலாகியிருக்கிற இந்த நிகழ்வு பெமெக்ஸின் தொடர் தோல்விகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

இத்தனை பெரிய தீயை ஏற்படுத்திய விபத்தில் கசிவுகள் எதுவுமே நடக்கவில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. விபத்தால் ஏற்பட்ட நெருப்பு ஐந்து மணிநேரம் தொடர்ந்து எரிவதற்கு நிச்சயம் எரிவாயு தேவை, அது கசிவிலிருந்துதான் வந்திருக்கவேண்டும். ஆனால் இதில் ஒரு சின்ன நன்மை இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். "கசிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து எரிந்த நெருப்பு, அங்கிருக்கும் வாயுக்களை அங்கேயே பிடித்துவைக்க உதவி செய்திருக்கலாம். ஆகவே, ஒருவேளை கசிவு ஏற்பட்டிருந்தாலும் அது அங்கேயே எரிந்து முடிந்திருக்கக்கூடும்" என்கிறார் புவிவேதியியலாளர் சைமன் ஜார்ஜ்.

கடல்சூழலுக்கு இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவில்லை. கடல் வேதியியல், கடல்மட்டத்தின் வெப்பநிலை, கடல்வாழ் உயிரினங்கள் போன்ற பல அடுக்குகளில் பாதிப்பு வந்திருக்கலாம். அது போகப் போகத்தான் தெரியும். விபத்தால் வலுவிழந்துள்ள குழாயில் எதிர்காலத்தில் மேலும் குளறுபடிகள் வந்தால் என்ன ஆகும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி.

Caspian Sea Azerbaijan Explosion
Caspian Sea Azerbaijan Explosion
AP | AZERBIJAN'S EMERGENCY MINISTRY PRESS SERVICE

மெக்சிக்கோவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள காஸ்பியன் கடலும் இதுமாதிரியான ஒரு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஜூலை 4ம் தேதி அன்று காஸ்பியன் கடலில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டு அங்கு தீப்பிழம்புகளும் பெரிதாகக் காணப்பட்டன. அஸர்பைஜான் நாட்டுக்குச் சொந்தமான பல எண்ணெய்ப் படுகைகள் இங்கு உண்டு என்பது சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால் எண்ணெய் நிறுவனமான சோகார், இது மண் எரிமலை (Mud volcano) ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு என்று தெரிவித்திருக்கிறது. வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலேயே எண்ணெய்ப் படுகைகள் இருப்பதால், எண்ணெய் எடுப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது. காஸ்பியன் கடலுக்கடியில் பல மண் எரிமலைகள் உண்டு. புவியியலாளர்கள் இது மண் எரிமலை வெடிப்பாக இருக்க சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊழிக்காலம் - 24: காலநிலை மறுப்பாளர்களின் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்!
எண்ணெய்ப் படுகைகள் இருக்கும் இடத்தில் நடந்த வெடிப்புக்கு மண் எரிமலை மட்டுமே காரணமாக இருக்குமா என்பது சூழலியலாளர்களின் கேள்வி. இதை அறிவிப்பது ஓர் எண்ணெய் நிறுவனம் என்பதும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருக்கிறது. ஆனாலும் அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கும் வரை அதை இயற்கைப் பேரிடர் என்பதாகவே வைத்துக்கொள்ளலாம்.

அடுத்தடுத்து கடல் தீப்பற்றி எரிந்த நிகழ்வுகள் உலகெங்கிலும் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன. குறிப்பாக பெமெக்ஸ் தீவிபத்து, புதைபடிவ எரிபொருள்கள் மீது நமக்கு இருக்கும் பிடிமானம் எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஒரு தனி நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்றுமட்டும் இதை ஒதுக்கிவிட முடியாது. பல ஆண்டுகளாகவே தொடர் விபத்துக்கள், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் மாசு பற்றிய குற்றச்சாட்டு போன்ற பூதாகாரமான பிரச்னைகளுக்கு நடுவில் பெமெக்ஸ் தன் வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

மெக்ஸிக்கோவின் பொருளாதாரத்தில் எண்ணெய்க்குத் தவிர்க்க முடியாத ஓர் இடம் உண்டு. ஆகவே எண்ணெய் நிறுவனங்கள் எவ்வளவு சொதப்பினாலும் அவை பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அந்த ஒரு காரணத்தால்தான் இன்னமும் பெமெக்ஸ் இயங்குகிறது. இந்த அரசியல் கோணத்தோடு அணுகிப் பார்த்தால் பிரச்னையின் வீரியம் புரியும். புதைபடிவ எரிபொருள்களைத் தவிர்க்குமாறு காலநிலை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தும் பல நாடுகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இந்தப் பொருளாதாரப் பிணைப்பும் ஒரு முக்கியமான காரணம்.

"ஆம். கடல் தீப்பற்றி எரிகிறது, கடல்தான்" என்றெல்லாம் பலர் அச்சத்துடன் சமூக வலைதளங்களில் அந்தக் காணொளியைப் பகிர்ந்திருக்கிறார்கள். தீப்பற்றி எரியும் கடலைப் பார்த்தால் எதோ ஓர் இனம்புரியாத பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது என்பதே உண்மை.

புதைபடிவ எரிபொருள்கள், எண்ணெய் நிறுவனங்களின் பாதுகாப்பு செயல்திட்டங்கள், ஆற்றல் ஆகியவை பற்றிய வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக வேண்டிய நேரம் இது. கடலுக்குள்ளிருந்து ஓர் எச்சரிக்கை அலாரம் வந்திருக்கிறது என்பதாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு