Election bannerElection banner
Published:Updated:

உலகத்தின் அழிவை நாம் நெருங்கிவிட்டோமா... அது குறித்த பயம் நமக்கு ஏன் இல்லை?!

உலக அழிவு | End of the world
உலக அழிவு | End of the world

கொரோனாவுக்கு பயந்து முகக்கவசம் அணியும் நாம், கார்பன் வெளியேற்றத்தைப் பற்றிக் கண்டு கொள்ள மறுக்கிறோம்.

உலகத்தின் அழிவு என்பது பற்றி நாம் எப்போதும் சிந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதனைப் பற்றிய பயம் இன்றி எப்போதும் ஒரு சுவாரஸ்யத்துடனேயேதான் அதனை அணுகுகிறோம். உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி, தீயை விட வேகமாகப் பரவுகிறது. 2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி பரவியபோது துளி வருத்தமோ பயமோ இன்றி அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தோம்.

இப்படியான மனநிலைக்கு முக்கியமான காரணம், உலகம் இப்போதைக்கு அழியாது என்ற திடமான நமது நம்பிக்கைதான். ஒருவேளை நாம் அழிந்தாலும் அது எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் ஒரு காரணம். ஆக்கத்தை நம் மனது எந்த அளவிற்கு விரும்புகிறதோ, அதை விட அதிகமாக அழிவை ரசிக்கிறது. அதனால்தான், விபத்தில் சிக்கிய ஏதோவொரு வாகனத்தையும் வெகு நேரம் உற்றுப் பார்க்கிறோம். யூடியூபில் விலைமதிப்பு மிக்கப் பொருட்களை உயரத்தில் இருந்து போட்டு உடைக்கும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை ஈர்க்கிறது. சரி இப்போது ஏன் அழிவைப் பற்றிய இத்தனை விளக்கங்கள் என்கிறீர்களா? கடந்த காலத்தில் நம்மையும் அறியாமல் உலகம் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தன, தற்போதும் இருக்கின்றன என்றால் நம்புவீர்களா? ஆம், மனித இனத்தின் தற்போதைய வளர்ச்சி உலகத்தின் அழிவை எந்நேரமும் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி.

மனிதகுல அழிவு
மனிதகுல அழிவு

கடந்த காலத்தில் மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி என வர்ணிக்கப்படும் சில நிகழ்வுகளில் உலகம் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. அப்படிப்பட்ட சில நிகழ்வுகள் நாம் மிகவும் சிலாகிப்பவை. முதன் முதலில் மனிதன் நிலவின் கால்வைத்ததை உலகமே சிலாகித்துக் கொண்டாடியது. முதலில் நிலவில் கால் வைத்த நபரின் பெயர் காலத்திற்கும் மக்களின் மனதில் இருந்து நீங்காது. ஆனால், ஒரு வேளை மனிதன் நிலவுக்கு சென்றதே மனித இனத்தை அழித்திருந்தால்? முதன் முதலில் மனிதன் நிலவுக்குச் செல்லும் முன் அங்கே என்ன இருக்கிறதென்று யாருக்குமே தெரியாது. 1960-களில் நாசாவில் இருந்து விண்கலம் புறப்படும் முன்னரே, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவிட்டுத்தான் விண்கலமே புறப்பட்டது.

`அமேசான் காட்டில் நிலங்கள் விற்பனைக்கு...'- ஃபேஸ்புக்கில் விளம்பரம்! பின்னணி என்ன?

பூமியில் இருந்து விண்கலம் புறப்படும் முன்னர், அவை நன்கு சுத்தம் செய்யப்பட்டு தொற்றுக்கிருமிகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என மிகவும் கவனமாக ஆராயப்பட்டன. ஒரு வேளை நிலவில் உயிரினங்கள் இருந்து அவை பூமியில் இருக்கும் கிருமிகளால் பாதிக்கப்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் இதற்குக் காரணம். அதே போல், நிலவிலிருந்து மனிதர்கள் பூமிக்குத் திரும்பிய பிறகு அவர்களைக் கப்பலில் 15 நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும். நிலவில் இருந்து எந்தத் தொற்றுக் கிருமிகளும் அவர்களுடன் பயணம் செய்யவில்லை என்பது உறுதியடைந்த பிறகே அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற வழிமுறைகள் எல்லாம் சொல்லப்பட்டன. ஆனால், கடலில் அவர்கள் விண்கலம் விழுந்த பிறகு, அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளைப் பின்பற்றாமல் நேரடியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நல்ல வேளையாக நிலவில் இருந்து எந்த விதமான தொற்றுக் கிருமிகளும் அவர்களோடு பயணம் செய்யவில்லை. ஒரு வேளை இருந்திருந்தால் மனித குலத்தின் தலையெழுத்து மாறியிருக்க வாய்ப்பிருந்தது.

நிலவுக்குச் சென்ற வீரர்கள் பூமியை அடைந்த போது
நிலவுக்குச் சென்ற வீரர்கள் பூமியை அடைந்த போது

காலத்தை இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் செலுத்தி முதல் அணு ஆயுத சோதனை செய்த காலகட்டத்திற்குச் செல்வோம்.

ஜூலை 16, 1945
உலகின் முதல் அணு ஆயுத சோதனை நடைபெற்ற நாள்.

அணு ஆயுதம் எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மனித குலம் தற்போது அறிந்திருக்கிறது. அதற்கு ஜப்பான் ஒரு சாட்சி, ஆனால் முதன் முதலில் அணு ஆயுத சோதனை நிகழ்த்திய போது, அது எதிர்மறையான விளைவுகளைப் பூமிக்கு ஏற்படுத்தி விட்டால் என்னாவது என விஞ்ஞானிகள் அப்போதே பயந்து கொண்டுதான் இருந்தனர். அணு ஆயுதம் எவ்வளவு கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அதுவரை நேரில் யாரும் பார்த்தது இல்லை. அணு ஆயுத வெடிப்பில் இருந்து வெளிவரும் வெப்பமானது மிக அதிக அளவு, மிக அதிக தூரத்திற்கு இருக்கும். ஒரு வேளை அதிலிருந்து வெளிப்படும் வெப்பமானது வளிமண்டலத்தில் எதிர்வினையாற்றி ஒட்டு மொத்த வளிமண்டலத்தையும் எரித்து பூமியையும் அழித்துவிட்டால் என்னவாகும் என்பதே விஞ்ஞானிகள் பயந்ததற்கான காரணம். அணு ஆயுத சோதனைக்கு முந்தைய நாள்வரை அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என மீண்டும் மீண்டும் பரிசோதித்துக் கொண்டேதான் இருந்தனர். அப்படி எதிர்வினையாற்றுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. குறைவுதான், ஆனால் நடக்கவே நடக்காது என உறுதிப்பட யாராலும் கூற முடியவில்லை. நல்ல வேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை.

முதன் முறை அணு ஆயுத வெடிப்பைப் பார்த்த விஞ்ஞானி ஒருவர், தான் மனிதக் குலத்தின் அழிவைத் தொடங்கி வைத்திருப்பதாக அந்த நொடியில் நினைத்தாக தன் நினைவைப் பகிர்ந்திருக்கிறார்.

20-ஆம் நூற்றாண்டில் மனிதக் குலத்தின் அழிவு என்பது 1/100 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே 1/6 என்ற விகிதமாக அது அதிகரித்திருக்கிறது.

தற்போது பல நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், போர் என்ற ஒன்று வந்தால், உலகில் துரும்பு கூட மிஞ்சாத அளவு அழிக்கும் அளவு சக்தியுடைய அணு ஆயுதங்கள் பல நாடுகளிடம் உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. கார்பன் வெளியேற்றம் விண்ணை முட்டுகிறது. கார்பன் வெளியேற்றத்தால், காலநிலை மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. தற்போது கிருமிகளும் முன்னை விட பல மடங்கு பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அதனை இப்போது நம் கண்களாலேயே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் அல்லது வீரியமடைந்தாலும் மனிதக்குலத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா என்று தெரியாது.

முதல் அணு ஆயுதப் பரிசோதனை | First Nuclear bomb test
முதல் அணு ஆயுதப் பரிசோதனை | First Nuclear bomb test

மனிதக் குலத்தின் அழிவு எப்போது என்பதை ஒரு சிந்தனைப் பரிசோதனை (Thought Experiment) மூலமாக ஆராய்ச்சியாளர்கள் அணுகுகிறார்கள். ஒரு பையில் வெள்ளை, சாம்பல் மற்றும் கறுப்பு நிறமுடைய பந்துகள் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பந்தும் மனிதன் கண்டறியும் அல்லது உருவாக்கும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தைக் குறிக்கும். அதில் வெள்ளைப் பந்து மனிதக்குலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான தொழில்நுட்பங்கள். சாம்பல் நிறப் பந்துகள் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டையும் சேர்த்து அமையப்பெற்ற தொழில்நுட்பங்கள். கறுப்பு நிறப் பந்துகள், மனிதக்குலத்தின் அழிவைக் கொண்டு வரும் தொழில்நுட்பங்கள். இதுவரை கறுப்பு நிறப் பந்துகளை நாம் உபயோகப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், உதாரணத்திற்கு அணு ஆயுதங்கள், ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்ட கிருமிகள் போன்றவை எல்லாம் கறுப்புப் பந்துகள்தான்.

Black-browed Babbler: 170 ஆண்டுகளுக்குப் பின் இந்தோனேஷியாவில் தென்பட்ட அரிய பறவையினம்!

நம்முடைய ஆழ்மனதின் பயங்கள் எல்லாம் இதற்கு முன் நாம் சந்தித்த அல்லது நாம் பார்த்த நிகழ்வுகளை வைத்துத்தான் உருவாகும். நெருப்பைப் பற்றிய புரிதல் இல்லாத குழந்தையிடம் நெருப்பைத் தொட்டால் சுடும் என்றால் அது கேட்காது, அதனைத் தொட்டு்ப்பார்க்கத் துடிக்கும். அது போல் பேரழிவு வரும் என அது குறித்த புரிதல் இல்லாத நம்மிடம் கூறினால், நம்மால் அதனை உணர முடியாது. அதனால்தான், கொரோனாவுக்குப் பயந்து முகக்கவசம் அணியும் நாம், கார்பன் வெளியேற்றத்தைப் பற்றிக் கண்டு கொள்ள மறுக்கிறோம். கொரோனா அழிவுப் பயத்தை நம் கண் முன்னே காட்டிச் சென்றுள்ளது. ஆனால், எல்லா வகையான அழிவுகளும் இது போல் மிதமானதாக இருக்காது, ஒரு முறை தொடங்கினால் அதோடு முடிந்துவிடும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உணவுச் சங்கிலி | Food Chain
உணவுச் சங்கிலி | Food Chain

இப்படியான அழிவுகள் நிகழ வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டால், இருக்கிறது என்றே கூறத் தோன்றுகிறது. உலகம் எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும். அனைத்து உயிர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தாவரங்களைப் பூச்சிகள் உண்ண வேண்டும், பூச்சிகளைத் தவளைகள் உண்ண வேண்டும், தவளைகள் பாம்புகள் உண்ண வேண்டும், பாம்புகளைக் கழுகுகள் உண்ண வேண்டும். இதுதான் இயற்கையின் உணவுச் சங்கிலி.

இதில் எந்த இடத்தில் மனிதன் இருக்கிறான் என்றால், இவை அனைத்திற்கும் மேலாகச் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றான். அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், இயற்கையின் சமநிலை தவறும்போது, அதைச் சீர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படத்தானே வேண்டும்? அந்தப் பொறுப்பை அனைத்துக்கும் மேலே அமர்ந்திருப்பதாய் நினைக்கும் மனிதன் தன் கையில் எடுத்துக்கொண்டுதானே ஆகவேண்டும்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு