Published:Updated:

`கொல்கத்தா டு ஹார்வர்டு; தந்தையைப் போலவே பொருளாதாரம்!'- `நோபல் பரிசு' இந்தியர் அபிஜித் பானர்ஜி யார்?

வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதைச் சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசுகள் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைதிக்கான பரிசு தவிர மற்ற நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி - எஸ்தர் ட்யூப்லோ
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் ட்யூப்லோ

மனிதகுலத்தின் மிக அவசரமான பிரச்னைகளில் ஒன்று வறுமை. வறுமையால் உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகள் இன்னும் நோய்களால் இறக்கின்றனர். உலகின் பாதி குழந்தைகள் இன்னும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

20 ஆண்டு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு! - எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

``இவர்கள் நடத்திய ஆராய்ச்சி உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இருபது ஆண்டுகளாக இவர்களின் புதிய சோதனை அடிப்படையிலான அணுகுமுறை பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. இது இப்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகும்" எனக் கூறி மூவரையும் நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளது. இந்த சோதனை முயற்சியில் முக்கிய பங்குவகித்தவர் அபிஜித் பானர்ஜி. கடைசியாக கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெற்ற இந்தியர். அவருக்குப் பிறகு இந்தியர்கள் யாருக்கும் நோபல் கிடைக்காத நிலையில் கொல்கத்தாவின் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் பானர்ஜிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி

யார் இந்த அபிஜித் பானர்ஜி?

58 வயதாகும் அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார் அபிஜித். அதிலும் தந்தை தீபக்கை போலவே பொருளாதாரத்தை தேர்வு செய்து படித்துள்ளார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் 1988ல் பி.ஹெச்டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே குடியுரிமை வாங்கி செட்டில் ஆகிவிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி முடித்த இவர் தற்போது மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

35,000 குழந்தைகளைப் பாதித்த லித்தியம் பேட்டரி உருவாக்கம்... நோபல் பரிசின் பின்னணி #MyVikatanStory

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ச்சியாக வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் கவனம் செலுத்தி வரும் அபிஜித்துக்கு ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல் நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் மற்றும் செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை மையத்தை நிறுவியுள்ளார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மாசேசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும்போது இதே நிறுவனத்தில் இலக்கிய பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், கொல்கத்தாவில் தன் சிறுவயது தோழியாக இருவருமாக அருந்ததி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்தார்.

அபிஜித் பானர்ஜி - எஸ்தர் ட்யூப்லோ
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் ட்யூப்லோ

ஆனால், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் மனைவி விவாகரத்து பெற்றுவிட 2016ல் மகனும் உயிரிழந்துவிட்டார். இதன்பின்புதான் தன்னுடன் ஆராய்ச்சி செய்து வந்த எஸ்தர் ட்யூப்லோவுடன் வாழ்ந்து வருகிறார் அபிஜித். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிரெஞ்சு பெண். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் மற்றும் குறைந்த வயதில் (46 வயது) பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் எஸ்தர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு