பெய்ரூட் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட்டை அழிக்க முடியாதா... அறிவியல் சொல்வது என்ன?

அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அடுக்கிக்கொண்டேயிருக்கிறது 2020. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பெருவெடிப்பு இவ்வாண்டின் மற்றொரு பேரழிவு. 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு, 6,000 பேர் காயம் பாதிப்பு என எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேபோகிறது.
'பெய்ரூட் மத்திய துறைமுக சேமிப்புக் கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்தான் வெடிப்புகுக் காரணம்' என லெபனான் பிரதமர் ஹஸன் தியாப் சொல்ல, அமோனியம் நைட்ரேட் தொடர்பான வாதம் உலக அளவில் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. மக்களின் போராட்டத்தையடுத்து லெபனான் அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், இந்த விபத்தால், சென்னையில் நீண்ட நாள்களாகச் சேமிப்பிலிருந்த அமோனியம் நைட்ரேட் மீது அக்கறை செலுத்தியது போலீஸ்.
இவ்வளவு மோசமான வேதிப்பொருளை ஏன் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியில் தொடங்கி அமோனியம் நைட்ரேட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம், அவசரமும்கூட!
அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

NH4NO3 என்ற வேதி மூலக்கூற்றைக் கொண்ட அமோனியம் நைட்ரேட் நீரில் கரையக்கூடிய திடப்பொருள். இது AnFO (Ammonium Nitrate Fuel Oil) என்ற எரிபொருளாகவும் பயன்படுகிறது. இது பிற வேதிப்பொருள்களுடன் வினைபுரிகையில் எரியும் திறன் பெறுகிறது. ஆதலால், நிலக்கரி மற்றும் மெட்டல் சுரங்கங்கள், கட்டுமானப் பணிகள், வேளாண்மை போன்றவற்றில் பயன்படுகிறது. அமோனியம் நைட்ரேட் ஆக்ஸிஜனேற்றம் அடைவதாலும், பிற வேதிப் பொருள்களுடன் வினை புரிவதாலும் ஆபத்தான வெடிபொருளாக மாற வாய்ப்புள்ளது. தூய அமோனியம் நைட்ரேட் ஒருபோதும் எரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சேமிப்புக் கிடங்கில் இருக்கும் அமோனியம் இரண்டு விதத்தில் வெடிக்க வாய்ப்புள்ளது. ஒன்று ஆக்சிஜனேற்றம் மற்றும் வெப்பமடைவதால் வெடித்துச் சிதறுகிறது. பெய்ரூட் பெருவெடிப்புக்கு இதுதான் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். மற்றொன்று, செயற்கையாக வெடிக்க வைக்கக் கையாளும் முறை. அரசுகளின் போர் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இது முக்கிய காரணி. தாலிபான்களின் பல தாக்குதல்களில் ஆர்டிஎக்ஸ், டிஎன்டி போன்ற வெடிகுண்டுகளுக்கு இணையாக அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த புல்வாமா, வாரணாசி, மாலேகான், புனே, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை தாக்குதல்களில் அமோனியம் நைட்ரேட் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட் வெடிப்பிலும் பின்னணியில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இதில், ஐஸ்லாத்தின் ருதே பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் ஜிம்மி ஒக்ஸ்லேவின் கருத்து குறிப்பிடத்தக்கது. அதில், "சாதாரண சேமிப்பு நிலையில் சராசரி வெப்பநிலையில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் எளிதில் எரியக்கூடியவை அல்ல. நாம் வீடியோவில் சிவப்பு புகையையும் கறுப்பு புகையையும் கண்டது நிறைவுறாத வினையின் வெளிப்பாடாகவே இருந்தது. ஆக்சிஜனேற்றம் மற்றும் வேதிவினை சிக்கல்கள் இருந்தாலும், சேமிப்புக் கிடங்குகள் எரிபொருள் மற்றும் வெப்ப பகுதியிலிருந்து பாதுகாத்தே வைக்கப்படும். விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, சேமிப்பு முறை மாறியுள்ளது. அமோனியம் நைட்ரேட்டுடன் கால்சியம் கார்பனேட் இணைத்து கால்சியம் அமோனியம் நைட்ரேட்டாக மாற்றி வைக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இது தீயிலிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பெய்ரூட் எதில் தவறியது என்பதற்கான விடை மர்மமாக உள்ளது" என்கிறார் ஒக்ஸ்லே.
பெய்ரூட் துறைமுகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரின் குற்றச்சாட்டு மற்றொரு காரணியைத் தேடுகிறது. யூசுப் ஷஹடி என்ற முன்னாள் துறைமுக ஊழியர் ஓர் இதழுக்கு அளித்த பேட்டியில், ''துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்குக்கு அருகில் ஆபத்தான ராணுவத் தளவாடங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன. ஆபத்தான அந்தப் பொருள்களைக் கிடங்குக்கு அருகில் வைக்கக்கூடாது என்று துறைமுக ஊழியர்கள் தொடர்ந்து எச்சரித்தோம். ஆனால், ராணுவத்தினர் கேட்கவே இல்லை. மேலதிகாரியிடம் பேச வேண்டும் என்று ஒவ்வொருவரும் மற்றொருவரை கைகாட்டினரே தவிர, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை இவ்விபத்துக்கு இது முக்கிய காரணமாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்.

இன்று பெய்ரூட்டைப் போன்ற விபத்துக்கள் கடந்த நூற்றாண்டில் பலமுறை நடைபெற்றிருக்கின்றன. 1947-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த பெருவெடிப்பே இதற்கெல்லாம் முன்னோடி. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பிறகு, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், 1947-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி டெக்சாஸின் 'கிரான்கேம்ப்' துறைமுகத்துக்கு 2,300 டன் அமோனியம் நைட்ரேட் கொண்ட கப்பல் வந்திறங்கியது. துறைமுக சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், துறைமுகப் பணியாளர் யாரோ ஒருவர் புகைபிடித்ததே பெரும் விபத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. கப்பலில் பற்றிய தீ கட்டுக்கடங்காமல் பரவியது. இந்த வெடிப்பின் தாக்கம் 150 மைல் வரை அதிர்வலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கப்பலின் நங்கூரம் 2 மைல் தொலைவுக்குச் சென்று விழுந்தது. இரண்டு நாள் தொடர்ந்த தீயில் 600 பேர் பலியாகினர். தொடர்ந்து டெக்சாஸ் மாகாணம் பல அமோனியம் நைட்ரேட் விபத்தைக் கண்டுள்ளது.
2015-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட 800 டன் அமோனியம் நைட்ரேட் வெடிப்பில் 173 பேர் உயிரிழந்தனர். ஒருவாரம் வரை தீயை அணைக்கப் போராடினர்.

வெடிபொருள் தயாரிப்பு, மயக்க மருந்து, சுரங்கம் மற்றும் கட்டுமானம், வேளாண்மையில் செயற்கை உரம் போன்ற பயன்பாடுகளில் அமோனியம் நைட்ரேட்டை சார்ந்துள்ளது இந்தியா. தொழில் முன்னேற்றம் மற்றும் ஒழுங்கு சட்டம் 1951 என்கிற சட்டத்தின்படி அமோனியம் நைட்ரேட் பயன்பாட்டுக்கு லைசென்ஸ் பெறுதலும், உரிய காரணத்தை அரசிடம் சமர்ப்பிப்பதும் அவசியம். மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு 2011-ம் ஆண்டு 45% மேல் அமோனியம் நைட்ரேட் கொண்ட வேதிப்பொருள்கள் தடை செய்யப்பட்ட பொருளாகவும், அதை வைத்திருப்பது அச்சுறுத்தல் கொண்ட செயலாகவும் பார்க்கப்படுகிறது. 'அமோனியம் நைட்ரேட் சட்டம் 2012'ன் படி மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருக்கும் பகுதிகளில் 'அமோனியம் நைட்ரேட்' சேமித்து வைத்திருப்பது சட்ட விரோதம். இவ்வளவு அச்சுறுத்தலையும் பேரழிவையும் உண்டாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பூதம் தவிர்க்க முடியாத தேவையாகவும் இருக்கிறது என்பதுதான் நவீன உலகின் நிர்ப்பந்தமாக உள்ளது.