Published:Updated:

முதன்முதலில் நிலவில் கால் பதித்த நிகழ்வுகள்! - மீண்டும் ஏலத்துக்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் வீடியோ

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன் முதலாக கால் பதித்த நிகழ்வுகள் அடங்கிய வீடியோ மீண்டும் ஏலத்துக்கு வருகிறது. கேரி ஜார்ஜ் என்ற 65 வயது நபர் இதை ஏலத்தில் விடவுள்ளார்.

நிலவில் கால் பதித்த மனிதன்
நிலவில் கால் பதித்த மனிதன்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலிருந்து 1969-ம் அப்போலோ- 11 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதில் சென்ற குழு ஜூலை 20-ம் தேதி நிலவை சென்றடைந்தது. அந்த குழுவில் இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து, முதன்முதலாக நிலவில் கால் பதித்த மனிதன் என்ற பெருமையை பெற்றார்.

அவர் நிலவில் கால் பதித்தபோது நடந்த சம்பவங்களை நாசா வீடியோவாக பதிவு செய்தது. மொத்தம் 1,100 ரீல்கள் கொண்ட அந்த வீடியோவை கடந்த 1976-ம் ஆண்டு நாசா ஏலத்துக்கு விட்டது. அதை கேரி ஜார்ஜ் (Gary George) என்ற பொறியியல் கல்லூரி மாணவர் அப்போதைய பண மதிப்பில் 218 டாலர் (இந்திய மதிப்பில் 15,000 ரூபாய்) கொடுத்து ஏலம் எடுத்தார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்
நீல் ஆம்ஸ்ட்ராங்

தற்போது அந்த அரிய வீடியோவை மீண்டும் ஏலத்துக்கு விட முடிவுசெய்துள்ளார் கேரி ஜார்ஜ். நியூயார்க்கில் உள்ள ஏல மையத்தில் வரும் ஜூலை 20-ம் தேதி இந்த வீடியோ ஏலத்துக்கு வருகிறது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து சரியாக ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் ஜூலை 20, 2019-ல் இது ஏலத்துக்கு வரவுள்ளது.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள 65 வயதான ஓய்வு பெற்ற மெக்கானிக்கல் என்ஜினியர் கேரி ஜார்ஜ், “ அந்த வீடியோவில் மதிப்பு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால்தான் நான் அவற்றை ஏலத்தில் விட முடிவுசெய்தேன்” என கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் உள்ள மூன்று டேப்கள் மிகவும் பொக்கிஷமானவை. அவற்றில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியதும் முதலில் கூறிய ‘ மனிதனுக்கு இது ஒரு அடி. ஆனால் மனித குலத்துக்கு இது மிகபெரும் பாய்ச்சல்’ என்ற பொன் மொழிகள் இடம்பெற்றுள்ளன.