Published:Updated:

``முகமூடி இல்லாமல் வெளியே வராதீர்கள்!" - எரிமலை வெடிப்பால் தவிக்கும் நியூசிலாந்து மக்கள்

`இதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது. எரிமலை வெடிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னர்தான் எங்கள் குழுவினர் வெள்ளைத் தீவின் முகப்பில் நின்றுகொண்டிருந்தோம்.‘

நியூசிலாந்தில் புகழ்பெற்ற சுற்றுலா இடமான வெள்ளைத்தீவில் அமைந்துள்ள எரிமலை, திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் வெடித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்தத் தீவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். இந்தத் தீவுக்கு அருகிலேயே ஓர் எரிமலை உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலையானது ஏற்கெனவே 2016-ம் ஆண்டு வெடித்துள்ளது. ஆனால், மனித உயிரிழப்புகள் ஏதுமில்லை. பாதிப்புகள் எதையும் இந்த எரிமலை வெடிப்பு ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் எரிமலை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக ஜியோநெட் (Geo Net) நிறுவனம் நவம்பர் மாதம் எச்சரித்திருந்தது.

இந்தத் தீவுக்கு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் முதலே மிகவும் உஷ்ணமாக இருந்த எரிமலை திங்கள்கிழமை 2 மணி அளவில் வெடித்துள்ளது. அப்பொழுது உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த 47 சுற்றுலாப் பயணிகள் வெள்ளைத்தீவைப் பார்வையிடச் சென்றிருந்தனர். எரிமலை வெடித்தவுடன் அவர்கள் பெரிய அபாயத்துக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையறிந்த நியூசிலாந்து காவல் துறையினர் மீட்புப் பணியைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். அதில் ஐந்து நபர்கள் இறந்துவிட்டதாகவும் 8 பேர் காணாமல் போனதாகவும் கூறுகின்றனர். மீதம் உள்ளவர்களை மீட்டெடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

இந்த அபாயகரமான சம்பவம் குறித்துப் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஆர்டென், "இந்தப் பேரழிவு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பயங்கரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், இந்த அபாயகரமான சம்பவம் குறித்து மிகப்பெரிய கேள்விகள் எழும். அவற்றுக்குச் சரியான பதில்கள் கிடைக்க வேண்டும்" என்றார்.

எரிமலை
எரிமலை

இது குறித்து ஆஸ்திரேலியாவின்‌ பிரதமர் ஸ்காட் மோரிசன், "இந்தக் கொடூரமான சம்பவம் ஆஸ்திரேலியா மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது மிகவும் கடினமான நாள். இந்தச் செய்தியை முதலில் கேட்டவுடன் மிகவும் பயந்துவிட்டேன்" என்று கூறினார்.

இந்தத் தீவுக்கு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அந்தந்த நாட்டு மக்களை பீதியடையச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய நியூசிலாந்து அதிகாரிகள், எரிமலை வெடிப்புக்குப் பின் குற்ற விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், இது பற்றிக் காவல்துறை துணை ஆணையர் ஜான் டிம்ஸ் பேசியபோது, "பாதுகாப்பு வீரர்கள் எரிமலைக்குள் செல்ல இன்னமும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அங்கு நிலவும் வெப்பக் காற்று, எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் ஆகிய காரணங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், தற்போது ட்ரோன்களின் உதவியோடுதான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் மக்கள் மற்றும் அங்கு சிக்கியுள்ளோரின் உறவினர்களின் ஆதங்கத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் நம்பிக்கையை வீணாக்காமல் சிக்கிக்கொண்டவர்களை நிச்சயம் மீட்போம்" என்றார்.

வெள்ளைத் தீவு
வெள்ளைத் தீவு

சான் ஃபிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மைக்கேல் ஸ்காடே தனது ட்விட்டர் பக்கத்தில், "இதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது. எரிமலை வெடிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னர்தான் எங்கள் குழுவினர் அனைவரும் எரிமலை இருக்கும் வெள்ளைத் தீவின் முகப்பில் நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் படகுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது" என்று பதிந்துள்ளார். இவர் தனது குழுவோடு அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாகாரி என்ற பெயரிலும் அழைக்கபடும் இந்த வெள்ளை தீவுக்கு வருடத்துக்கு 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக, 'நியூசிலாந்து நாட்டின் அதிகச் செயல்பாட்டிலிருக்கும் எரிமலையாக' இது திகழ்வதே ஆகும். இங்கிருக்கும் முழு சுற்றுலாத் துறையுமே இந்தத் தீவை நம்பித்தான் செயல்படுகிறது.

தற்போது, இந்த இடத்தைச் சுற்றி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் வசிக்கும் மக்கள்மீது எரி துகள்கள் விழுந்து பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அவர்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த எரி துகள்களில் கடினமான கண்ணாடிகளாகவும் கெட்டியான பாறைகளாகவும் இருக்கலாம். அதனால் இந்தச் சூழலில் மக்கள் கட்டாயம் வெளிவரும் நிலையிலிருந்தால் முகத்தைக் கைக்குட்டையால் மூடியபடியும் கண்களுக்குக் கண்ணாடி அணிந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு காவல் துறை எச்சரித்துள்ளது.

கடைசியாக இப்படிப்பட்ட ஒரு பேரிடர் பாதிப்பு வெள்ளைத்தீவில் பள்ளச் சுவர் விரிவடைந்ததால் ஏற்பட்டது. அது விரிவடைந்தபோது வெறும் மண்சரிவு மட்டுமே உண்டானது. அதில் கந்தகச் சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 10 பணியாளர்கள் இறந்தனர். இதற்குப் பின், தற்போதுதான் எரிமலையால் மிகப்பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது. இப்போது நடைபெறும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை நியூசிலாந்து அரசு காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எரிமலை வெடித்து உருவானதா தக்காண பீடபூமி? ஒரு சுவாரஸ்ய வரலாறு! பகுதி-1
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு