Published:Updated:

Oviraptor: 66-72 மில்லியன் ஆண்டுகள் பழைமை - பாதுகாக்கப்பட்ட நிலையில் கருவுடன் கிடைத்த டைனோசர் முட்டை

மருஉருவாக்கம் செய்யப்பட்ட டைனோசர் முட்டையின் புகைப்படம்
News
மருஉருவாக்கம் செய்யப்பட்ட டைனோசர் முட்டையின் புகைப்படம்

தலை முதல் வால் வரை இந்த குட்டி டைனோசரின் நீளம் 27 செமீ இருக்கலாம் என அனுமானிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த 100 ஆண்டுகளில் பல இடங்களில் டைனோசர் முட்டைகள் மற்றும் கூடுகள் கிடைத்திருந்தாலும், கருவில் இருக்கும் டைனோசருடன் முட்டைகள் கிடைத்ததில்லை. அப்படியான டைனோசர் முட்டைகள் அரிது. அப்படிப் பாதுகாப்பாகக் கருவுடன் இருக்கும் டைனோசர் முட்டை ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியான்ஷிங் மாகாணத்தில் உள்ள கான்சௌ என்ற நகரில்தான் இந்த டைனோடர் முட்டை கிடைத்திருக்கிறது. படிம நிலையில் சுமார் 17 செமீ நீளமுள்ள டைனோசர் முட்டையின் உள்ளே கருவில் இருக்கும் குட்டி டைனோசரின் எலும்புக் கூடு இருக்கிறது. தலை முதல் வால் வரை இந்த குட்டி டைனோசரின் நீளம் 27 செமீ இருக்கலாம் என அனுமானிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருவாக இருக்கும் ஓவிராப்டாரசார்
கருவாக இருக்கும் ஓவிராப்டாரசார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த முட்டை கான்சௌ நகரத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில்தான் இருந்திருக்கிறது. பின்பு இந்த முட்டைக்குள் எலும்புகள் இருப்பது போல் தென்பட்டதால் இதனை ஆராய்ந்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில்தான் கிட்டத்தட்டப் பொரிக்கும் தறுவாயில் ஒரு குட்டி டைனோசர் படிம நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டைனோசர் தன்னுடைய முதுகை நன்றாக வளைத்து, தலையைக் குனிந்து நிலையில் இருக்கிறது. பொதுவாகப் பறக்கும் வகையைச் சேர்ந்த பறவைகள்தான் பொரிப்பதற்கு முன்பே இப்படியான நிலையில் இருக்கும். இந்த நிலை, முட்டை பொரிக்கும் தருணத்தில் ஏற்படும் அதிர்வைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தக் குட்டி டைனோசரின் வயது 66 முதல் 72 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். இந்த குட்டி டைனோசரானது பற்கள் இல்லாத தெரோபாட் டைனோசர் வகையைச் சேர்ந்த ஓவிராப்டாரஸார் எனக் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவிராப்டாரசார்கள் 145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளான காலகட்டத்தில் ஆசிய மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்தவை. இந்த டைனோசர் குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான ஃபியோன் வைசம் மா (Feon waisum ma) என்பவர் கூறுகையில், "இந்த குட்டி 'பேபி யிங்லியாங்' (முட்டைக்குள் இருக்கும் குட்டி டைனோசரை இந்தப் பெயரில்தான் அழைக்கின்றனர்) கண்டறியப்பட்டது மிகவும் பரவசமாக இருக்கிறது.

டைனோசர் முட்டை
டைனோசர் முட்டை

பொதுவாக இது போன்ற கருவுடன் இருக்கும் முட்டைகள் கிடைத்தாலும், அவற்றின் எலும்புக்கூடுகள் உடைந்தோ அல்லது இடம்பெயர்ந்தோதான் இருக்கும். இந்த முட்டை இடப்பட்டு 65 மில்லியன் வருடங்களுக்கு மேல் இருந்தாலும் நன்றாக மண்ணுக்குள் புதைந்து போய் இருந்ததால் இந்தக் குட்டி டைனோசரின் உருவ அமைப்பில் பெரிசாக எந்த வித சேதமும் இல்லாமல் இருக்கிறது. அது அமர்ந்திருக்கும் நிலை தற்கால பறவைகள் பொரிக்கும் சமயத்தில் இருக்கும் நிலை போலவே உள்ளது. இது கருவாக உருவாகிப் பொரிக்கும் சமயத்தில் இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது." என்றார்.

ஏற்கெனவே சீனாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பறவைகள் அடைகாப்பது போலவே முட்டைகளை அடைகாக்கும் நிலையில் ஒரு ஓவிராப்டாரசாரின் புதைபடிமம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.