Published:Updated:

`விண்வெளி நம்மை ஒன்றிணைக்கிறது!' - முதல் இரான் - அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஜாஸ்மின்

 ஜாஸ்மின் மொக்பெலி
ஜாஸ்மின் மொக்பெலி

சிறு வயதிலிருந்தே விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். தன் கனவுக்காக சிறுவயதிலிருந்தே உழைக்கத் தொடங்கியிருந்தார் ஜாஸ்மின்.

இரான் - அமெரிக்காவுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் முதல் இரானிய-அமெரிக்க விண்வெளி வீரரான ஜாஸ்மின் மொக்பெலி (Jasmin Moghbeli ), `விண்வெளி ஆய்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜாஸ்மின் மொக்பெலியின் பூர்வீகம் இரான்தான். 1979-ம் ஆண்டு இரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியின்போது ஜாஸ்மின் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தனர்.

 ஜாஸ்மின் மொக்பெலி
ஜாஸ்மின் மொக்பெலி

ஜாஸ்மின் அவரின் சகோதரர் பிறந்தது ஜெர்மனியில்தான். ஜாஸ்மின் வளர்ந்தது எல்லாம் நியூயார்க்கில். நியூயார்க்கைத்தான் ஜாஸ்மின் தன் தாய் மண்ணாகக் கருதுகிறார். சிறு வயதிலிருந்தே விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். தனது 15 வது வயதில் ஒரு மேம்பட்ட விண்வெளி முகாமில் கலந்துகொண்டார். தனது கனவுக்காக சிறுவயதிலிருந்தே உழைக்கத் தொடங்கியிருந்தார் ஜாஸ்மின்.

`நம்பர் 4’ நான் பார்த்துக்குறேன்! -   ஆஸ்திரேலியா தொடருக்கு கோலியின் புது பிளான்

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு. ஜாஸ்மின் பெற்றோர் அவரை ஒரு ராணுவ விமானியாகப் பார்க்க ஆசைப்பட்டனர். நாசாவில் 2005-ம் ஆண்டு ஜாஸ்மின் சேர்ந்தார்.`செப்டம்பர் 11’ தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தங்கள் மகள் எதுமாதிரியான கொடுமைகளை எதிர்கொள்ளக் கூடும் என அவரின் பெற்றோருக்கு அச்சம் இருந்தது. நாசாவில் அவருக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. நாசாவில் ஜாஸ்மினுக்கு உதவியவர்கள்தான் அதிகம். ``நான் நாசாவில் சேர்ந்தவுடன் அங்கிருந்தவர்கள் எனக்கு முழுமையான ஆதரவு கொடுத்தார்கள்" என ஜாஸ்மின் ஒருமுறை பேசியிருந்தார்.

 ஜாஸ்மின் மொக்பெலி  குடும்பத்தினருடன்
ஜாஸ்மின் மொக்பெலி குடும்பத்தினருடன்

நாசாவில் இருந்து விண்வெளி வீரராகப் பட்டம் பெற்ற பின்பு பேசிய ஜாஸ்மின், ``எல்லோருக்கும் ஓர் உதாரணமாக இருப்பதை நான் விரும்புகிறேன். ஆனால், உங்களைப் போலவே தோற்றமளிக்கும் அல்லது உங்களுடன் பொதுவான ஒன்றை கொண்ட ஒருவருக்கு ஓர் உதாரணமாக அமைவது கொஞ்சம் எளிதானது. அந்த வகையில் நான் இருக்கிறேன்" என்றார்.

இவருக்கு `ஜாவ்ஸ்’ என்ற செல்லப்பெயரும் இருக்கிறது. துப்பாக்கிகளால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களில் ஆஃப்கானிஸ்தானில் 150-க்கு மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவரது கடுமையான உழைப்பை பாராட்டி 'ஜாவ்ஸ்' எனும் பட்டப் பெயரை இவருக்கு அளித்தனர். 36 வயதாகும் ஜாஸ்மின் கடந்த சில மாதங்களுக்கு முன் சாம் என்பவரை மணந்துகொண்டார்.

 ஜாஸ்மின் மொக்பெலி  சக வீரர்களுடன்
ஜாஸ்மின் மொக்பெலி சக வீரர்களுடன்

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது இரானுடன் ஒரு குறுகிய காலம் நல்லிணக்கம் தொடர்ந்தது. தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரானுடன் போர் தொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இரானைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரான் தளபதி சுலைமானி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இது இருநாடுகள் இடையிலான பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஆனால், ஜாஸ்மின் தனது பணிக்காலத்தில் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அரசாங்கத்தால் எந்த பிரச்னையையும் எதிர் கொள்ளவில்லை என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு