Published:Updated:

அமெரிக்காவின் ஏரியா 51... இந்த மர்மதேசத்துக்குள் அப்படி என்னதான் இருக்கிறது?!

இங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் தாண்டி ஒரு பப்ளிசிட்டிக்காகவே "Storm Area 51'', “They Can't Stop All of Us", “Raid Area 51” என்கிற ஹேஷ்டேகை எல்லாம் டிரெண்ட் ஆக்கி 2019, செப்டம்பர் 20-ல் இவ்விடத்தை முற்றுகை இட முடிவு செய்தது ஒரு கும்பல்.

அடுத்தவர் ரகசியங்களை அறிந்து கொள்வதில் என்றுமே மனிதர்களுக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. உலகமே தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒரு ரகசியம் ஒரு வல்லரசுக்குள் புதைந்திருக்குமானால் அது சார்ந்த ஆவலும் எதிர்பார்ப்பும் இரட்டிப்பாக எகிறும் இல்லையா?

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலை ஒட்டி நடந்த கலவரங்கள் வரை அமெரிக்கா என்றாலே பரபரப்புக்களுக்குப் பஞ்சமில்லை. "சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..." என்று பல வருடங்களாக மக்கள் அமெரிக்காவைப் பார்த்து கேட்கும் கேள்வி, "அப்படி என்னதான் இருக்கிறது ஏரியா 51-க்குள்?"

Area 51
Area 51
AP

மர்மமான ஒன்று இருக்கும்போது அதைச் சுற்றி பல கற்பனைகளும் கதைகளும் கட்டி விடப்படும். அமெரிக்க ராணுவம் இந்த இடத்தில் ரகசிய ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகவும், அமெரிக்கா அரசு வேற்றுகிரகவாசிகள் குறித்த சோதனைகளை ரகசியமாக செய்து வருவதாகவும், வேற்றுகிரக UFO-க்கள் வந்து இறங்குவதாகவும் பல மர்மக் கதைகள் இதைச் சுற்றி உள்ளன.

24 ஜூலை 1952-ம் ஆண்டு இரண்டு விமானப்படை அதிகாரிகள் நெவாடாவில் கார்சன் சிங்க் என்னும் பகுதியில் மூன்று டெல்ட்டா விங் எனும் அசாதாரண விமானம் V வடிவத்தில் வானில் பறப்பதைப் பார்த்தாகச் சொல்லி பரபரப்பை பற்றவைத்தார்கள். அமெரிக்க கடற்படை வீடியோ ஒன்றில் வானில் சுழலும் ஒரு வட்டவடிவ UFO ஒன்றும் பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாது ஏரியா 51-க்கு அருகில் பொதுமக்கள் பார்த்த பல UFOக்கள் பற்றிய தகவல்கள் கூட பதிவாகி உள்ளன. எது எவ்வாறாயினும் இதுவரை இந்த இடம் பற்றிய எந்த ஓர் அதிகாரப்பூர்வமான தகவல்களும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் வடமேற்கில் சுமார் 120 மைல் தொலைவில், நெவாடாவின் (Nevada) Extraterrestrial Highway என அழைக்கப்படும் 'வேற்று கிரக நெடுஞ்சாலை' வழியாக எந்த விதப்பெயர் அடையாளங்களும் குறிப்பிடப்படாத ஒரு புழுதி பறக்கும் சாலைக்கு நடுவில் செல்கிறது இந்த மர்ம பூமி. கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் நீளும் இந்த நெடுஞ்சாலையின் இடையே எந்தவொரு கடைகளோ, பெட்ரோல் பங்க்கோ, நின்று நிறுத்தி இளைப்பாறும் இடமோ எதுவுமே இல்லை. தடித்த சங்கிலிகளால் வளைத்து மூடப்பட்ட இந்த தரிசு நிலத்துக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு எறும்பின் அசைவும் கூட சுற்றி வளைத்து கண்காணிப்படுகின்றது. சுற்று வட்டாரத்தில் மட்டுமல்ல அதன் மேலுள்ள வான் பரப்பிலும் அனுமதி இல்லாமல் எந்தவொரு விமானமும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பறவையின் நிழல் தெரிந்தால்கூட செக்கியூரிட்டி கேமராக்கள் அலர்ட் ஆகின்றன.

(Nevada) Extraterrestrial Highway
(Nevada) Extraterrestrial Highway
AP

உலகின் மிகப்பெரிய பலம் வாய்ந்த விமானப்படையாகக் கருதப்படும் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி நிலமாக, நோவேடா பாலைவனத்தின் வறண்ட பெருநிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது இந்த மர்ம தேசம். இதற்கு உள்ளே என்னதான் நடக்கிறது என்பது இன்றுவரை மிகவும் ரகசியமாகவே உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள விரும்பும் பொது மக்கள், போலீஸாரால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்து துரத்தப்படுகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை இந்த நிலப்பரப்பு வெறும் பாலை நிலமாகவே இருந்துள்ளது. 1864-ம் ஆண்டில், இதனருகே உள்ள Groom Lake salt flat-ஐ சுற்றி வெள்ளி மற்றும் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் Patrick Sheahan என்ற நபர் அந்த இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி 1889-ம் ஆண்டில் Groom Mine எனப்படும் ஒரு சுரங்கத்தை நிறுவியுள்ளார். 1905 வரை லாஸ் வேகாஸ் ஒரு நகரமாகக்கூட நிறுவப்படவில்லை. அதன்பின் 1941-ம் ஆண்டு இந்த இடம் அமெரிக்க அரசினால் குண்டுவீச்சு விமானங்களுக்கான பயிற்சித் தளமாகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போரில் இவை இரண்டும் மாறி மாறி ஒன்றை ஒன்று உளவு பார்த்துக்கொண்டு இருந்தன. அப்போது அமெரிக்காவின் இரண்டு CIA வீரர்கள் சோவியத் யூனியனின் வளர்ந்து வரும் அணு ஆயுத திட்டத்தினை கண்காணிக்கக் கூடிய புதிய உளவு விமானங்களை உருவாக்க பொருத்தமான ஒரு மறைவிடத்தை தேடிச்சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த இடம்தான் ஏரியா 51. அதன்பின், உளவுத்துறை மற்றும் அமெரிக்க ராணுவம், CIAக்கு பொருத்தமான ஓர் இடமாக இதை முடிவு செய்தது.

1955-ல் இது உருவாக்கப்பட்ட போதிலும் 2003-க்குப் பிறகுதான் CIA (Central Intelligence Agency) அது தங்களுக்கு சொந்தமான ஒரு இடம் எனப் பகிரங்கமாக உறுதி செய்தது.
Area 51
Area 51
Pixabay

1955-களில் U-2 உளவு விமான (U-2 spy plane) ஆராய்ச்சியுடன் ஆரம்பித்த இந்த ஏரியா 51 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மிகக் குறைவாக இருந்தாலும், பல அதிநவீன விமானங்களையும், போர் ஆயுதங்களையும் உருவாக்க அமெரிக்க இராணுவம் ஏரியா 51-ஐ தொடர்ந்து பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. சுமார் 1,500 பேர் அங்கு பணியாற்றுவதாகவும், எவ்விதத்தரைவழி போக்குவரத்தும் இல்லாத அவ்விடத்திற்கு லாஸ் வேகாஸிலிருந்து சார்டர் விமானங்கள் மூலமாக விமானப்படை வீரர்கள் சென்று வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இன்றும் இது அமெரிக்க விமானப்படையின் பயிற்சி மையமாகவே செயல்படுகிறது.

அமெரிக்க வரைப்படத்தில் அந்த இடத்தை குறிக்கும் எண்ணாக 51 பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதற்கு ஏரியா 51 என்கிற பெயர் வந்தது என்கிறார்கள்.

இந்த ஏரியா 51-லிருந்து சுமார் 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு முன்பே பொதுமக்களின் நடமாட்டம் நிறுத்தப்படுகிறது. எவ்வித வாகனங்களும் அதைத்தாண்டி உள்ளே பயணிக்க முடியாது. இதன் சுற்று வட்டாரத்திற்குள் மக்கள் கொண்டு வரும் கேமரா, செல்போன் போன்ற எல்லாமே இவ்விடத்தை நெருங்க நெருங்க செயல் இழந்து விடும். எனவே எவருக்குமே உள்ளே சூழல் எப்படி இருக்கும் என்று இதுவரை தெளிவாகத்தெரியவில்லை. ஆனால் செயற்கை கோள்கள் எடுத்த படங்களில் அந்த இடத்தின் அடித்தளத்தில் 12,000 அடி நீளத்திற்கு பாதை ஒன்று நீண்டு செல்வதாகத் தெரியவந்திருக்கிறது.

Area 51 Satellite Image
Area 51 Satellite Image
NASA Landsat | NASA

ஒரு ஈ எறும்புக்கு கூட உள்ளே போக அனுமதி கிடையாது. அத்துமீறி உள்ளே நுழைவோர் கேள்விகள் இன்றி கைது செய்யப்படுவர். மேலும் இவ்விடத்தை பாதுகாக்கும் காவலர்கள் 'Cammo Dudes' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ராணுவத்தையோ, காவல்துறையையோ சேர்ந்தவர்கள் அல்ல. ரகசியப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றி இன்றளவும் தகவல்கள் தர அமெரிக்கா அரசு மறுத்து வருகிறது. வேற்றுகிரகவாசிகளோ, அணு ஆயுத பரிசோதனையோ, விமானப்படை தளமோ, இல்லை இது அனைத்தையும் தாண்டிய வேறு ஏதோவொன்றோ, எதுவாயினும் அங்கு இருப்பது உண்மையில் என்னவென்பது அமெரிக்கா அரசுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

இப்படி ஓர் இடத்தை ஆர்வக்கோளாறு ஆளுமைகள் எப்படி விட்டு வைப்பார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் தாண்டி ஒரு பப்ளிசிட்டிக்காகவே "Storm Area 51'', “They Can't Stop All of Us", “Raid Area 51” என்கிற ஹேஷ்டேகை எல்லாம் டிரெண்ட் ஆக்கி 2019, செப்டம்பர் 20-ல் இவ்விடத்தை முற்றுகை இட முடிவு செய்தது ஒரு கும்பல்.

ஒரு இளைஞன் விளையாட்டாக போட்ட இந்த Hashtag பல மில்லியன் மக்களின் ஆதரவு பெற்று வைரல் ஆகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இதற்கு சமூகவலைத்தளங்களில் அலை அலையாகத் திரண்ட மக்கள் ஆதரவைப் பார்த்து உஷாரான அமெரிக்க ராணுவம் உடனடியாக சுதாகரித்து ஓர் அறிக்கை ஒன்றை விட்டது. அதில் இந்த ஏரியா -51 எல்லைக்குள் நுழைபவர்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.

Storm Area 51 Event
Storm Area 51 Event
AP

சரி... கடைசியில் என்னதான் நடந்தது? இந்த சமூக வலைதளப் போராளிகள் உள்ளே சென்று சாதித்தார்களா?

இரண்டு மில்லியன் மக்கள் ஆதரவு தெரிவித்த இந்தப் புரட்சிக்கு கடைசியில் சென்றது வெறும் இருநூறு பேர் மட்டுமே. இதில் உச்சம் என்னவென்றால் இதை ஆரம்பித்த நபரே கடைசியில் “யாரும் தயவுசெய்து அங்கே போக வேண்டாம்” என கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் விடாப்பிடியாக அங்கு சென்ற அந்த 200 ஆர்வலர்களையும் அமெரிக்க ராணுவம் சிறப்பானமுறையில் எலும்புகளை எல்லாம் எண்ணி அனுப்பியது. அவர்களின் மூச்சு காற்று கூட ஏரியா 51 பக்கம் படவில்லை.

ஆமாம்... ஏரியா 51-ல் அப்படி என்னதான் இருக்கும்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு