Published:Updated:

`கோவளம் கடற்கரையில் புதிய நெமர்டியன் புழு இனம்’ - தமிழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

புதிய இனம்
புதிய இனம் ( Mohandhas S Vignesh / researchmatters )

தமிழகத்தின் கோவளம் கடற்கரையில் புதிய நெமர்டியன் புழு இனத்தை, சென்னை சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், ரஷ்ய அறிவியல் அகாடமி, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், ஸ்மித்சோனியன் நிறுவனம் ஆகியவை இணைந்து முதுகெலும்பில்லாத ஒரு புதிய கடல் புழு உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய உயிரினம் ஒரே நேரத்தில் ஹவாய் மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு டெட்ராஸ்டெம்மா ஃப்ரீயா (Tetrastemma freyae) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவளம்
கோவளம்

இந்தியாவில் குறிப்பாகச் சென்னை கோவளத்தின் பாறைகள் நிறைந்த இடத்தில் இந்த நெமர்டியன் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி அறிக்கை நியூசிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மதிப்பாய்வு பத்திரிகையான ஜூடாக்சாவில் வெளியிடப்பட்டுள்ளது. சத்யபாமாவின் காலநிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரகாஷ், இது தொடர்பாகப் பேசும்போது, ``எம்.டெக் படிக்கும் விக்னேஷ் மற்றும் ருச்சி ஜெயின் ஆகிய இரு மாணவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக கடற்கரையில் கடல்பாசி சேகரித்து வந்தனர். அவர்கள்தான் இந்தப் புதிய இனத்தை வரிசைப்படுத்தினர்.

முதன்முறையாக எங்கள் ஆய்வகத்தில் நெமர்டீயாவுக்கான டி.என்.ஏவை வரிசைப்படுத்தினோம். அதேபோல் ஸ்மித்சோனியனை சேர்ந்த ஆராய்ச்சியாளரும் டி.என்.ஏவை வரிசைப்படுத்தினார். இரண்டு இனங்களுக்கிடையில் அதிக வேறுபாடு இல்லை அதனால்தான் எங்கள் கண்டுபிடிப்பு கூட்டாக வெளியிடப்பட்டது. இது இல்லாமல் மேலும் இரண்டு உயிரினங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் அவை ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

ஆய்வு
ஆய்வு
மாதிரிப் புகைப்படம்

“டெட்ராஸ் டெம்மா இனத்தின் கீழ் உள்ள நெமர்டியன் புழுக்கள் உலகில் 110-க்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் பன்முகத்தன்மை இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளன. தமிழக கடற்கரையில் சேகரிக்கப்பட்ட இந்த இனங்கள் மற்றும் இவற்றின் மாதிரிகள் பற்றிய விரிவான களப்பணி சோதனைகளைச் செய்து முடிக்க எங்களுக்கு 2 ஆண்டு்கள் ஆனது” என இந்த இனத்தைக் கண்டறிந்த விக்னேஷ், ருச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய இனம் வெளிர்-மஞ்சள் நிறத்தில் தலையில் கருப்பு நிறமி மற்றும் வட்டமான வால் கொண்டவை. அவை வைர வடிவ தலையுடன் சுமார் 2-5 செ.மீ நீளத்தில் இருக்கும். இது இறந்த, அழுகும் பொருள்களை உணவாக எடுத்துக்கொள்கிறது. ஆராய்ச்சியாளர்கள் புதிய இனங்களை அதன் உள் மற்றும் வெளிப்புற உருவவியல் மற்றும் டி.என்.ஏ பகுப்பாய்வு அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளனர்.

டெட்ராஸ்டெம்மா கண்டுபிடிப்பு தொடர்பாகப் பகிர்ந்துள்ள ரஷ்ய சயின் அகாடமியின் பேராசிரியர் அலெக்ஸி, ``டெட்ராஸ்டெம்மா சில சிக்கலான நெமர்டியன் இனங்களைச் சேர்ந்தவை. எங்களிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் டெட்ராஸ் டெம்மா வெப்பமண்டல கடல்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு