Published:Updated:

எப்போதுமே இளமையுடன் வாழ முடியுமா? ஆராய்ச்சி சொல்லும் பதில் என்ன? 

தடையை உடைத்துச் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அணுக்களைச் சீரமைக்க முடியும். அப்படிச் செய்துவிட்டால், முதுமையற்ற வாழ்வை மட்டுமல்ல அழிவற்ற வாழ்வை அதாவது சாகாவரம் கூடப் பெறமுடியும்.

மனித இனம் உடலளவில் வெளிப்படையான பரிணாம வளர்ச்சியடைந்து முடிந்து 2,00,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், நம் அறிவு இன்னும் பரிணாம வளர்ச்சியை நிறுத்தியபாடில்லை. ஏன் என்ற கேள்வியில் தொடங்கி, எப்படி என்று ஆராய முற்பட்டதிலிருந்து மனித அறிவின் பரிணாம வளர்ச்சி பல்வேறு கட்டங்களைத் தாண்டிவிட்டது. அத்தனை கட்டங்களிலும் மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளிலும் பரிசோதனைகளிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துவருவது, முதிர்ச்சி குறித்த ஆராய்ச்சிகள்.

மூளையில் மொத்தம் 1,00,000 மில்லியன் நியூரான்கள் ஒன்றுக்கொன்று இணைப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு நியூரான் 1,000 நியூரான்களோடு தொடர்புகொண்டிருக்கும்.

பரிணாமவியலின்படி இயற்கையின் படைப்பில் அனைத்துமே மாற்றங்களுக்கு உட்பட்டவை. இயற்கையில் எதுவும் நிரந்தரமில்லை. காலப்போக்கில் அனைத்துமே தேய்ந்தும் நைந்தும் போகத்தான் செய்யும். ஆகவே, மனித உடலும் தேய்ந்து முதுமை அடைவதையும் அதன் செயல்பாடுகள் பலவீனமடைவதையும் தவிர்க்கமுடியாது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத மனித இனம், மீண்டும் மீண்டும் அந்த இயற்கைச் சுழற்சியை வெல்லவே முயன்றுகொண்டிருக்கிறது. பரிணாம வளர்ச்சி மனிதனுக்குக் கொடுத்த மறுக்க முடியாத சாபம், ஆசைகள். அந்த ஆசைகளே, இந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லலாம்.

ககடுவார் வம்சத்து அரசன் ஜெயசந்திரனின் அரசவைக் கவி ஸ்ரீஹர்ஷனின் காவியங்களில் சொல்லப்பட்டிருக்கும், முதுமையைத் தள்ளிப்போடும் மருத்துவர் சக்கரபாணியின் ஜீவரசம் தொடர்பான குறிப்புகள் மூலம், அந்தக் காலத்திலிருந்தே முதுமை குறித்த ஆய்வுகளை மனிதன் செய்துகொண்டிருப்பது தெரிகிறது.

முதிர்ச்சி குறித்துச் சிந்திக்கத் தொடங்கினால் இரண்டு கேள்விகள் மனதில் எழலாம்.

1.முதுமை ஏன் வருகிறது?                                                        2. முதுமை எப்படி வருகிறது?

பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி
Pixabay

மனிதர்களின் 20 வயதில் தொடங்குகிறது உடல் உறுப்புகளின் தேய்மானம். உறுப்புகளின் செயற்பாடுகள் வருடத்துக்குச் சில சதவிகிதம் என்ற விகிதத்தில் குறைந்துகொண்டே போகும். முதுமையை எய்தும்போது உயரம் குறைதல், கண் பார்வைக் குறைபாடு, ஞாபக மறதி, தோல் சுருக்கங்கள் போன்ற சில பலவீனங்கள் வெளிப்படையாகவே தெரியத்தொடங்கும். அவை எப்படி ஏற்படுகின்றன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலும்புக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உற்பத்தி செய்வது அங்கிருக்கும் அணுக்களே. வயது ஆகஆக அந்த அணுக்களின் மறுசீரமைப்புத் திறன் பாதிக்கப்படும். பொதுவாக முதுகுத் தண்டிலிருக்கும் எலும்புகளுக்கு இடையே இடைவெளி காணப்படும். அந்த இடைவெளிகளில் அமைந்திருக்கும் வட்ட எலும்புகள் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் வலிமையிழந்து உடல் பாரத்தைச் சுமக்க முடியாமல் அதிக அழுத்தம் பெறுகிறது. அழுத்தம் காரணமாக இடைவெளி குறைந்து முதுகெலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன. அதனால்தான் முதுமையில் உயரம் குறைகிறது.

முதியவர்கள் பார்த்துச் சில நொடிகள் கடந்தபிறகே அதற்கான எதிர்செயலாற்றுவதை நாம் பார்த்திருப்போம். தகவல் மூளையைச் சென்றடைய அதிக நேரமெடுப்பதே அதற்குக் காரணம்.

கருவிழிகள் என்று கூறப்படும் பகுதி அனைவருக்கும் கறுப்பு நிறத்திலேயே இருப்பதில்லை. ஆனால், அதன் நடுவே இருக்கும் மற்றுமொரு சிறுவிழி (Pupil) அனைவருக்கும் கறுப்பு நிறத்தில் தானிருக்கும். அப்போதுதான் ஒளி பிரதிபலிக்காமல் கடந்துசெல்லும். கண்களில் விழும் ஒளியின் தூரத்தைக் கணக்கிட்டுப் பொருளின் முழு அளவையும் கண்மணி வழியாகச் செலுத்தி, அதற்குப் பின்னாலிருக்கும் விழித்திரையில் (Retina) விழச்செய்யும். விழித்திரையில் படும் ஒளி அங்கிருக்கும் நியூரான்களின் மூலமாக மூளைக்கு அனுப்பப்படும். உதாரணத்துக்கு, வெளிச்சத்தில் நிற்கும்போது சிறுவிழியின் விட்டம் அதிகமாவதையும் இருளில் விட்டம் குறைவதையும் நம்மால் காணமுடியும். நாம் பார்க்கும் பொருளைப் பற்றிய தகவலை, மின்சாரத்தைக் கடத்தும் செம்புக் கம்பியைப்போல் இந்த நியூரான்களின் வழியாக அவை கடத்துகின்றன.

Vikatan

பொருள்களின் அளவைச் சரியாகப் பதிய வைக்கும் சிறுவிழி மற்றும் கண்மணி வயதாகும்போது தூரத்துக்குத் தகுந்தாற்போல் வளைந்து உள்வாங்கும் திறனை இழந்துவிடும். அதனால் ஒளி சரியாக விழித்திரையில் விழாமல் தோராயமாகப் பதிவாவதால் பார்வைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அத்தோடு விழித்திரையின் திசுக்கள் பலவீனமடைவதால் தகவலை மூளைக்குக் கொண்டுசேர்க்கவும் நேரமாகிறது. முதியவர்கள் பார்த்துச் சில நொடிகள் கடந்தபிறகே அதற்கான எதிர்செயலாற்றுவதை நாம் பார்த்திருப்போம். தகவல் மூளையைச் சென்றடைய அதிக நேரமெடுப்பதே அதற்குக் காரணம்.

முதிர்ச்சியடையும் காலங்களில் பொதுவாக அனைவரிடமும் காணப்படுவது ஞாபக மறதி. மூளையில் தகவல்களைப் பெறுவதும் அவற்றைச் சேகரித்து வைப்பதும் நியூரான்கள். மின்சாரத் தூண்டுதல்களின் மூலமாகச் செய்திகளை உடல் முழுவதும் பரப்பிக்கொண்டேயிருப்பவை நியூரான்களே. அதில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.

உட்செலுத்தும் நியூரான்கள் (Afferent neurons): தகவல்களை மூளைக்குக் கொண்டுசேர்க்கின்றன.
வெளியேற்றும் நியூரான்கள் (Efferent neurons): தகவல்களை உடலின் மற்ற பகுதிகளுக்குக் கடத்துகின்றன.

மூளையில் மொத்தம் 1,00,000 மில்லியன் நியூரான்கள் ஒன்றுக்கொன்று இணைப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு நியூரான் 1,000 நியூரான்களோடு தொடர்புகொண்டிருக்கும். மிக நுட்பமான இணைப்புகளைக் கொண்டுள்ள இவை மூளையின் 10% மட்டுமே. ஆனால், மனிதனின் மொத்த தகவல்களும் அவற்றில்தான் பதிந்துகிடக்கின்றன. இவையே மத்திய நரம்பு மண்டலத்தின் (Central nervous system) செயல்பாட்டுக்கு அடிப்படையானது. மற்ற அணுக்களைப்போல் நியூரான்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதில்லை. வயது அதிகமாகும்போது, மற்ற உறுப்புகளைப் போலவே மூளையும் பாதிக்கப்படும். அதனால் நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கத் தொடங்கும். நியூரான்கள் செயலிழக்கும்போது அவற்றின் தொடர்புகளும் ஆங்காங்கே தடைப்படுவதால், தகவல் சேமிக்கும் திறனும் குறையத்தொடங்கும். அதுவே முதிர்ச்சியில் ஞாபக மறதி வருவதற்கான காரணம். நியூரான்களைச் செயற்கையாகப் புதுப்பிக்கப் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தலைமுடியின் கருமை நிறத்துக்குக் காரணம், மெலனின் எனப்படும் நிறமி அணுக்களே. ஆண்கள் 30 வயதையும், பெண்கள் 35 வயதையும் கடந்தபிறகு நிறமிகள் பலவீனமடையத் தொடங்குவதால் முடியின் நிறமும் மாறத்தொடங்குகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் தற்போதைய தலைமுறையினர் இளமையிலேயே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் சருமங்களின் பளபளப்பு மற்றும் மிருதுத் தன்மைக்குக் காரணம் கோலாஜென் (Collagen). அமினோ அமிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அணுக்கள் மற்றும் திசுக்களின் கூட்டுதான் இந்த கோலாஜென். சருமம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.

Homosapien
Homosapien
Pixabay

புறணி (Epidermis) என்றழைக்கக்கூடிய வெளிப்படையாகத் தெரியக்கூடிய மேல்தோல் மற்றும் புறணிக்குக் கீழேயிருக்கும் அடித்தோல் டெர்மிஸ் (Dermis) என்றழைக்கப்படும் வெளித்தோல்.

டெர்மிஸில்தான் கோலாஜென்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வயதாகும்போது கோலாஜென்களின் உற்பத்தி குறைவதால், சருமத்தின் தடிமன் குறைந்து மெல்லியதாகிவிடும். அதனால் எளிதில் காயமாகக்கூடிய அளவுக்குச் சருமத்தின் வலிமையும் குன்றிவிடும். அதோடு கோலாஜென் குறைபாடு தோல் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது.

அனைத்தும் அணுக்களே...

ஆக, நிறம், ஞாபகத்திறன், பார்வை, எலும்புகளுக்கான ஊட்டச்சத்து என்று உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலமாக இருப்பது அணுக்களே. அவை தம்மைப் புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தினால் ஓர் உறுப்புகூட செயல்படாது. அந்தப் புதுப்பித்தல் திறன் குறைவதால் தான் முதுமையை எய்துகிறோம். அந்தத் திறனையும் புதுப்பிக்க முடிந்தால்? ஆம், முதுமையற்ற வாழ்வை வாழலாம். முடியுமா?

அணுக்கள்
அணுக்கள்
Pixabay

நமது மரபணுக்கள் நீளமான அமைப்புகொண்டவை. அதை நுண்ணோக்கியில் கவனித்தால் இரண்டு பக்கங்களிலும் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் ஒன்று தெரியும். அதுதான் டெலோமியர் (Telomere). மரபணுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பதும் இதே டெலோமியர்கள்தான். மற்ற அணுக்களைப் போலவே மரபணுக்களும் தொடர்ந்து செயல்படுவதால் தேய்மானம் அடையக்கூடியதே. ஆனால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் மரபுசார் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. டி.என்.ஏ-க்கள் சேதமடைந்தால் அவற்றுக்குச் சிகிச்சையளித்து பாதுகாக்கக்கூடிய திறன்மிக்கவை இந்த டெலோமியர்கள். ஆனால், வயதாகும்போது மற்ற அணுக்களைப் போலவே இந்த டெலோமியர்களும் பலவீனமடையக் கூடியவையே. அப்படி, அவை வலிமையிழந்து டி.என்.ஏ-வை அழிவிலிருந்து காக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும்போது டி.என்.ஏ க்களைக் காப்பாற்றுவதுதான் டெலொமிரேஸ் (Telomerase) என்ற என்ஸைம்.

Vikatan

இந்த டெலோமிரேஸ்கள் டி.என்.ஏ அழியும் நிலைக்குத் தள்ளப்படும்போது அதன் தன்மையோடு அருகே இருக்கும் ஒரு ஆர்.என்.ஏ-வைத் தேர்வுசெய்து அதன் ஒருபுறத்தில் ஒட்டிக்கொண்டு அழியப்போகும் டி.என்.ஏ-விலிருக்கும் தகவல்களைக் கடத்தி ஒரு புது டி.என்.ஏ-வை உருவாக்கும். அதாவது ஆர்.என்.ஏ-வை அச்சாகப் பயன்படுத்தி டி.என்.ஏ-வை நகலெடுக்கும். ஓரளவுக்குக் கிட்டத்தட்ட மடிக்கணினியில் பென் டிரைவைச் செருகி, தகவல் பரிமாற்றம் செய்வதுபோலத்தான். ஆனால், இங்கு மடிக்கணினியும் பென்டிரைவும் ஒரே அளவில், கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் வெவ்வேறு உருவங்கள். உதாரணத்துக்கு, மடிக்கணினிதான் ஆர்.என்.ஏ. என்று வைத்துக்கொள்வோம். பென் டிரைவ்தான் டி.என்.ஏ. அது அழியும் தறுவாயிலிருப்பதால், மடிக்கணினியோடு தன்னை இணைத்துக்கொண்டு அதனிடமிருக்கும் தகவல்களை மடிக்கணினியிடம் பரிமாற்றுகிறது. இது நடக்கும் சமயத்திலேயே, மடிக்கணினி என்ற ஆர்.என்.ஏ-வைப் பிடித்திருக்கும் பென் டிரைவ் என்ற டி.என்.ஏ-விலிருக்கும் இந்த டெலோமிரேஸ்கள், மடிக்கணினியே டி.என்.ஏ-வாக உருமாற்றத் தொடங்கிவிடும்.

புற்றுநோய் அணுக்களோடு சேராமல் டெலோமிராஸ்களைத் தடுக்க முடியுமானால், மற்ற அணுக்களோடு அவற்றை ஏன் சேர்க்க முடியாது?

அழியும் டி.என்.ஏ-விலிருக்கும் அனைத்துத் தகவல்களும் புதிய டி.என்.ஏ-வாக மாறிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ஏ-விற்குள் கடத்தப்படும்வரை இரண்டையும் இணைத்துப் பிடித்துக்கொண்டு கச்சிதமாகப் புதிய மரபணுவை உருவாக்கிவிடும் திறன்கொண்டவை இந்த டெலோமிரேஸ்கள். ஆகவே, எந்தக் காலத்துக்கும் உடலின் டி.என்.ஏ-க்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

அழிவற்ற இந்த டெலோமிரேஸ்கள், இது உடலின் அனைத்து அணுக்களிலும் செயல்படுவதில்லை. மரபணுக்கள் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உயிரணுக்களில் மட்டுமே அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏதோவொரு காரணத்தால் மற்ற சாதாரண அணுக்கள் இந்த டெலோமிரேஸ்களைத் தங்களுக்குள் அனுமதிப்பதில்லை. ஆனால், புற்றுநோய் அணுக்கள் இவற்றை அபரிமிதமாக ஏற்றுக்கொள்வதால் அவை சுலபமாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.

சிகிச்சையின் மூலமும், மருந்துகளின் மூலமும் டெலோமிரேஸ்கள் புற்றுநோய் அணுக்களோடு சேர்வதைத் தடைசெய்தால், அவற்றின் வளர்ச்சியைத் தடுத்து அழித்துவிடலாம். அதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேலும் எளிமைப்படுத்த முடியும். இதைப்பற்றிய ஆராய்ச்சியின்போது மருத்துவர்கள் மற்றுமொரு பரிசோதனையும் முயற்சி செய்தனர். அதுதான் முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது. புற்றுநோய் அணுக்களோடு சேராமல் டெலோமிராஸ்களைத் தடுக்க முடியுமானால், மற்ற அணுக்களோடு அவற்றை ஏன் சேர்க்க முடியாது?

DNA
DNA
Pixabay

அமெரிக்காவின் அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் யினான் சென் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகின. அந்த ஆய்வில், டெலோமிராஸ்களைத் தடுக்கவும் முயற்சிசெய்து பார்த்தார்கள். சாதாரண அணுக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணித்து ஆய்வுசெய்ததில் அவை அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டன. ஆனால், அது ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் இந்த ஆராய்ச்சி முழுமையடையாது. அது ஏனென்று தெரிந்தால்தான், அந்தத் தடையை உடைத்துச் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அணுக்களைச் சீரமைக்க முடியும். அப்படிச் செய்துவிட்டால், முதுமையற்ற வாழ்வை மட்டுமல்ல அழிவற்ற வாழ்வை அதாவது சாகாவரம் கூடப் பெறமுடியும் என்று சொல்கிறார்கள்.

டெலோமிரேஸ்கள் மூலம் இளமையைத் தக்க வைக்க முடியும் என்றும் இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்றும் நிரூபித்த அவர்களுடைய ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து மரபணு ஆராய்ச்சித் துறையில் இதுகுறித்த ஆய்வு தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இதே ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் எலிகளின் டி.என்.ஏ-க்களில் செலுத்திச் செய்த பரிசோதனையில், எலிகளுடைய அயுட்காலம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அக்டோபர் 17-ம் தேதி நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் அதுகுறித்த ஆய்வுக்கட்டுரையும் வெளியாகியுள்ளது.

உண்மையில் சாகாவரம் என்பது சாத்தியமா? பொறுத்திருந்து பார்ப்போம். கேள்விகள் உண்டென்றால் விடைகளும் இருக்கத்தானே செய்யும். ஆனால், அந்த விடை நம் எதிர்காலத்திற்கு நல்லதா, என்ற துணைக் கேள்விக்கும் விடை தேடியாக வேண்டும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு