கம்ப்யூட்டர் செயல்பாடுகளுக்கு முக்கிய மூளையாக இயங்கக்கூடிய சிபியு-க்கள் பெரும்பாலும் பெரிய வடிவத்திலும் கனமானதாகவும் இருப்பதுதான் வழக்கம். இதனை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்வதென்பது சற்று சிரமமான காரியமாக உள்ளது. இந்நிலையில்தான் திருவாரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர், கையடக்க சிபியு-வை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவரான எஸ்.எஸ்.மாதவ், தனது தொடர் முயற்சியாலும், கணினியை பற்றிய நுட்பமான கற்றலாலும் கையடக்க சிபியு ஒன்றை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தான் உருவாக்கிய, சிபியு (Central Processing Unit - CPU) என அழைக்கப்படும் கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தில் உள்ள கலைஞர் நகரில் வசிப்பவர், சேதுராசன். இவரது மகன் எஸ்.எஸ்.மாதவ் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டரில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், ஜாவா, பைதான், C, C++, கோட்லின் உள்ளிட்ட கணினி மொழிகளைப் பயின்றுள்ளார். கொரோனா ஊரடங்குக் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கையடக்க கணினி மைய செயலாக்க கருவி (மினி சிபியு) உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார் மாணவர் மாதவ். ஊரடங்குக் காலத்தில் இதில் முழு கவனம் செலுத்தியிருந்தாலும் கூட, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்தே இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தனது கடுமையான உழைப்பாலும் தொடர் முயற்சியினாலும் தற்போது இதில் வெற்றிப்பெற்றுள்ளதாக மகிழ்ச்சியோடு பேசும் மாணவர் மாதவ்வை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதனை அனைவரும் எளிதாக வாங்க, ‘டெராபைட் இந்தியா சிபியு தயாரிப்பு கம்பெனி’ என்ற பெயரில் இதற்கென ஒரு நிறுவனத்தையும் உருவாக்கி, இணையதளம் வாயிலாக குறைந்த விலைக்கு விற்பனைசெய்து வருவதாக மாணவர் மாதவ் தெரிவித்துள்ளர்.
தலைமைச் செயலகத்துக்கு மாதவ்வை நேரடியாக வரவழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’கணினிதொடர்பான இந்த மாணவனின் உயர் படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்" என உறுதி அளித்துள்ளார்.