Published:Updated:

இந்தியர்களின் காப்புரிமை பற்றி `ஹீரோ' படம் சொல்லும் கணக்கு சரிதானா? விரிவான அலசல்!

ஜப்பான் 2 லட்சம்; இந்தியா 12 ஆயிரம் - ஹீரோ படத்தில் அர்ஜுன் சொல்லும் காப்புரிமைக் கணக்கு சரியா?

Patent
Patent
"ஜப்பான்ல 2 லட்சம் பேடன்ட் (patent) வாங்குறாங்க, ஆனா இந்தியாவுல வெறும் 12,000 பேடன்ட்தான் வாங்கியிருக்கிறோம்."
ஹீரோ படத்தின் வசனம்
WIPO Report
WIPO Report

மேற்கண்ட வசனத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஹீரோ' படத்தில் அர்ஜுன் பேசியிருப்பார். இந்தியாவில் கண்டுபிடிப்புகள் என்பது மிகக் குறைந்த அளவுதான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், 136 கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில் வெறும் 12,000 கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வாங்கப்படுகிறது என்று சொல்லப்படும் கணக்கு சரியா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள World Intellectual Property Organisation அமைப்பின் 2018-ம் ஆண்டின் அறிக்கையைப் புரட்டினோம். அந்த அறிக்கையில் 2017-ம் ஆண்டு நாடு வாரியாக எவ்வளவு காப்புரிமைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு காப்புரிமைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய டேட்டாக்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

காப்புரிமை என்றால்..?

இந்தியாவில் எவ்வளவு காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பின்னர் பார்க்கலாம். முதலில், காப்புரிமை என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமை என்ற பிரிவின் கீழ் வருகிறது. தொழில்நுட்ப பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற முடியும். ஒரு கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கும் முன்பே அது ஏற்கெனவே வேறு எவராலும் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் காப்புரிமை இணையதளமான www.ipindia.nic.in தளத்தில் ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள காப்புரிமை இணையதளங்களிலும் இதைத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

``எனக்குள்ள இருக்கிற வருத்தம்தான் `ஹீரோ'வின் கதை; ஏன்னா..." - இயக்குநர் மித்ரன்
தென்னிந்திய தலைமை அலுவலகம்
சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காப்புரிமை அலுவலகம்தான் தென்னிந்தியா முழுமைக்குமான தலைமை அலுவலகம்.

காப்புரிமை பெறுவது எப்படி?

ஒரு கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெறுவதற்கு முதலில் அந்தக் கண்டுபிடிப்பு பற்றி முழுமையாக எழுதி காப்புரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கண்டுபிடிப்பு, விண்ணப்பித்த நபருடையதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள, காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரிகள் கண்டுபிடிப்பு மேற்கொண்ட நபரிடம் டெக்னிக்கல் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தெரிந்துகொள்வார்கள். பின்னர் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்த்து அதற்குக் காப்புரிமை வழங்கலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள். இந்தச் செயல்முறைகளெல்லாம் முடிந்த பின்பு, சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து காப்புரிமை இணையதளத்தில் அந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய முழு விவரங்களும் பதிவேற்றப்படும். அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் எழாத பட்சத்தில் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் எவரேனும் உரிய ஆதாரங்களோடு எதிர்ப்பு தெரிவித்தால் காப்புரிமை ரத்து செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Patent
Patent
Arkadi Bojaršinov

20 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை செல்லுபடியாகும். அதன் பின்னர் காப்புரிமையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காப்புரிமை பெற்ற பின்பு தங்கள் கண்டுபிடிப்பையும் காப்புரிமையையும் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் அல்லது அடமானமாகக்கூட வைக்கலாம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியா வெறும் 0.7 சதவிகிதத் தொகை மட்டுமே செலவிடுகிறது.
Organisation For Economic co-Operation And Development

ஹீரோ படத்தில் சொல்வதைப்போல இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 12,000 கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. 2017-ல் மட்டும் 46,582 காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட 12,387 காப்புரிமைகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெறப்படும் 5 காப்புரிமைகளில் 4 வெளிநாட்டவர்களுடைய காப்புரிமைகள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில் விண்ணப்பிக்கப்படும் 80% காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டினருடையதாகவே இருக்கின்றன. 2017-ம் ஆண்டில் அதிகபட்சமாக சீனாவில் 4,20,144 காப்புரிமைகளும் அதற்கடுத்தபடியாக அமெரிக்காவில் 3,18,829 காப்புரிமைகளும் ஒப்புதல் பெற்றுள்ளன என்று 'World Intellectual Property Organisation' அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Patents
Patents
Vikatan Infographics

தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். கடைசி செமஸ்டரில் கொடுக்கப்படும் புராஜெக்ட்களில் 10 சதவிகிதம் பேர் நல்ல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டாலே 30,000 கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். ஆனால், ஆண்டு தோறும் இந்திய அளவிலான காப்புரிமைகளுக்கே சுமார் 46,000 கண்டுபிடிப்புகள் மட்டுமே விண்ணப்பிக்கப்படுவது என்பது வருத்தமளிக்கிற விஷயம்தான். அதிலும் பெரும்பாலான விண்ணப்பங்கள் வெளிநாட்டு மொபைல் நிறுவனங்களால்தான் சமர்ப்பிக்கப்படுகின்றன.

தென் மத்திய ரயில்வே, மத்திய ஆயுர்வேத அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு - பட்டதாரிகள், 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
காப்புரிமைக்காக விண்ணப்பித்த நிறுவனங்கள்
காப்புரிமைக்காக விண்ணப்பித்த நிறுவனங்கள்
Vikatan Infographics

இந்தியாவில், 2018-19-ம் ஆண்டில் செல்போன் உபகரணங்கள் தயாரிக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'குவால்காம்' நிறுவனம்தான் அதிக காப்புரிமைகளுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது என்கிறது 'இந்தியக் காப்புரிமை அலுவலக'த்தின் அறிக்கை. மொத்தம் 1,559 காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது குவால்கம். அதைத் தொடர்ந்து தென்கொரியா நாட்டின் செல்போன் நிறுவனமான 'சாம்சங்' நிறுவனம் 1,320 காப்புரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 557 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக சண்டிகர் பல்கலைக்கழகம் 336 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

ஒவ்வொரு நாடும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதவிகிதம் செலவிடுகிறது என்பதைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது 'Organisation For Economic co-Operation And Development' அமைப்பு. அந்த அறிக்கையில், 2017-ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆராய்ச்சி மட்டும் மேம்பாட்டுக்காக ஜப்பான் நாடு 3.2 சதவிகிதம் செலவிட்டுள்ளது என்றும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே 2.8 மற்றும் 2.1 சதவிகிதம் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே செலவிட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது இந்த அறிக்கை.

Research and developement
Research and developement
Vikatan Infographics
`நிலவில் ஆர்கான் 40 வாயு' - சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்பு!

கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுகள் நடத்தவும், கண்டுபிடிப்புகளுக்குச் சரியான வழிகாட்டியாக இயங்குவதற்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்' என்ற அரசாங்க நிறுவனம் 2000-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு பற்றிய சரியான விழிப்புணர்வைக் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுத் தொகையை அதிகப்படுத்துவதன் மூலமும் காப்புரிமைகள் பெறும் இந்தியக் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.