Published:Updated:

`ஆழ்துளைக் கிணறு மீட்புப் பணி' - தேசிய அளவில் கவனம் ஈர்த்த கரூர் அரசுப்பள்ளி மாணவர்கள் படைப்பு!

கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா
கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா

இந்தப் பள்ளியில் பத்தாவது படிக்கும் நவீன்குமார் மற்றும் காவ்யா ஆகிய இருவரும் சேர்ந்துதான், ஆழ்துளைக் கிணறு மீட்புப்பணி என்ற தலைப்பில் உருவாக்கிய படைப்பு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, தென்னிந்திய மற்றும் தேசிய அளவிலான கண்காட்சிகளில் பங்குபெற தேர்வாகி இருக்கிறது.

கரூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மோட்டார் மற்றும் குழந்தைகளை மீட்பது சம்பந்தமாக உருவாக்கியுள்ள படைப்பு, தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வாகி, பல தரப்பிலும் கவனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா
கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, குரும்பபட்டி. இந்தக் கிராமத்தில் இயங்கி வருகிறது, அரசு உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர், செந்தில் முருகன்.

Vikatan

இவரின் வழிகாட்டுதலோடு இந்தப் பள்ளியில் பத்தாவது படிக்கும் நவீன்குமார் மற்றும் காவ்யா ஆகிய இருவரும் சேர்ந்துதான், `ஆழ்துளைக் கிணறு மீட்புப்பணி' என்ற தலைப்பில் உருவாக்கிய படைப்பு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, தென்னிந்திய மற்றும் தேசிய அளவிலான கண்காட்சிகளில் பங்குபெற தேர்வாகி இருக்கிறது. இதுகுறித்து, நவீன்குமார் மற்றும் காவ்யா ஆகிய இருவரிடம் பேசினோம்.

கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா
கண்டுபிடிப்போடு நவீன்குமார், காவ்யா

``எங்க பகுதியே மிகவும் வறட்சியான பகுதி. இங்கு 900 அடிகளுக்கு மேல் போர்வெல் போட்டால்தான், தண்ணீர் வரும் என்கிற நிலைமை. பல விவசாயிகள் போட்ட போர்வெல்களில் மோட்டார் கீழே போவது, கேபிள்கள் கீழே போவதுனு பல பிரச்னைகளால், அந்த போர்வெல்களை அப்படியே விட்டுட்டு, புதுசா போர்வெல்கள் போட ஆரம்பிச்சுடுறாங்க. உள்ளே விழுந்த மோட்டாரையோ அல்லது கேபிள்களை எடுக்க அதிக செலவாகும்ங்கிறதால, அதை அப்படியே விட்டுட்டு புதுசா போர்வெல்கள் போடுறாங்க.

அதேபோல், போர்வெல் குழாய்களில் வேர்கள் வந்தால், அதனால் போர்வெல் பாதிக்கப்பட்டு, அந்த போர்வெல் குழிகளை அம்போனு விடுறாங்க. இதுமாதிரி மூடப்படாமல் விடப்படும் காலி போர்வெல் குழிகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் கொடுமையும் நடக்குது. அதனால், இதுமாதிரி பாதியில் பயன்பாடில்லாமல் போர்வெல்கள் குறைந்தசெலவில் சரிசெய்து மீண்டும் பயன்படுத்த வைக்க நாங்க ஏதாச்சும் கருவிகளை உருவாக்கணும்னு நினைச்சோம்.

எங்க அறிவியல் வழிகாட்டி ஆசிரியர் செந்தில் முருகன் சார்கிட்ட சொன்னப்ப, அவர் அதற்கு சப்போர்ட் பண்ணினார். அவரின் ஆலோசனையோடு போர்வெல் குழிக்குள் விழுந்த மோட்டார் மற்றும் கேபிள்களை மீட்க ஒரு கருவி, போர்வெல் குழிக்குள் வரும் வேர்களை அகற்ற ஒரு கருவி, போர்வெல் குழிக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்க ஒரு கருவினு மூணு கருவிகளை வடிவமைத்தோம். போர்வெல் குழிக்குள் விழுந்த மோட்டாரை தூக்க சிறிய அளவில் கிரேன் மாதிரியான கருவியை வடிவமைத்துள்ளோம். அதை உள்ளே இறக்கி, அதன்மூலம் மோட்டாரை வெளியே எடுக்கும் டெக்னிக் அது. அதேபோல், போர்வெல் குழிக்கு குறுக்கே வரும் வேர்களை அகற்ற ஆங்கர் மாதிரி ஒரு அமைப்பை வடிவமைத்தோம். அதை உள்ளே இறக்கி, வேர் உள்ள பகுதியில் நிறுத்தி, சுழற்றினால் வேர் அதோடு வந்துவிடும். அதேபோல், கம்பியின் கீழ் அமைக்கப்படும் ராடு போன்ற பகுதியை உள்ளே இறக்கி, குழிக்குள் விழுந்த குழந்தை மேற்கொண்டு கீழே போகாமல் தடுக்கமுடியும். அதன்பிறகு, குழந்தையை எளிதாக மீட்கலாம். எங்களின் இந்தப் படைப்புதான் தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வாகி இருக்கு" என்றார்கள், மகிழ்ச்சியாக!

அடுத்து பேசிய வழிகாட்டி ஆசியரான செந்தில் முருகன், ``சமீபத்தில் மணப்பாறை அருகில் உள்ள கிராமத்தில் சுஜித் என்ற சிறுவன் போர்வெல் குழிக்குள் விழுந்து இறந்தான். அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் சூரிப்பாளிங்கிற கிராமத்துல அப்படி ஒரு சிறுமி போர்வெல் குழிக்குள் விழுந்து இறந்தார். இப்படி தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் போர்வெல் குழி மரணங்களுக்கு எங்க பள்ளி மாணவர்கள் முற்றுப்புள்ளி வைக்கும்விதமா இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டுபிடிச்சுருக்காங்க. எங்க பள்ளியில் 10 அடியில் தோண்டப்பட்ட போர்வெல் குழியில் இந்த மூன்று விஷயங்களையும் செய்து பார்த்தோம். வெற்றி கிடைத்தது. கண்காட்சி நடந்த அத்தனை இடங்களிலும் இதைச் செய்து காட்டி, 100 சதவிகிதம் வெற்றியைக் கொடுத்தோம்.

ஆசிரியர் செந்தில் முருகன்
ஆசிரியர் செந்தில் முருகன்

அதனால், இந்தப் படைப்பு, மத்திய, மாநில அரசுகள் நடத்திய 46 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழாவின் கரூர் கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் இடம்பெற்றது. தொடர்ந்து, கரூர் மாவட்ட அளவில் முதலிடம் வந்தது. அதைத்தொடர்ந்து, மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில் மூன்றாமிடம் பெற்றது. அதோடு, வரும் 18-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் பெருவிழாவில் கலந்துக்க எங்க மாணவர்களின் இந்தப் படைப்பு தேர்வாகி இருக்கு. அதேபோல், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் பெருவிழாவில் பங்கேற்கவும் எங்க படைப்பு தேர்வாகி இருக்கு. தங்கள் பகுதி மக்களின் பிரச்னையை தீர்க்க எங்க பள்ளி மாணவர்கள் யோசித்த விஷயம், தேசிய அளவில் தேர்வாகி இருப்பது மகிழ்வைத் தருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு