Published:Updated:

''அஞ்சு ரூபாய் போடு - மாஸ்க் எடு''- சென்னை இன்ஜினீயர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

மனிதனின் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது முகக்கவசம். இந்த மாஸ்க் தேவையை மிக எளிதாகத் தீர்க்க புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் விஜயராகவன் மற்றும் கிருஷ்ண பிரியதர்ஷினி.

கொரோனா தொற்றால் உலகம் அல்லலுற்று கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் சுயபாதுகாப்பு விதிமுறைகளை பாதுகாக்க சொல்லி வலியுறுத்தப்படுகிறது. மனிதனின் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது முகக்கவசம். 'தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பது தினம் தினம் நிரூபிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. மாஸ்க் தேவையை மிக எளிதாக தீர்க்க புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் விஜயராகவன் மற்றும் கிருஷ்ண பிரியதர்ஷினி.

விஜயராகவன் - கிருஷ்ண பிரியதர்ஷினி
விஜயராகவன் - கிருஷ்ண பிரியதர்ஷினி

'இன்ஸ்டாமாஸ்க்' எனும் இவர்களின் புதிய கண்டுபிடிப்புதான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் குட்டி ஆச்சர்யம். ஐந்து ரூபாய் நாணயத்தை இவர்கள் கண்டுபிடித்த இயந்திரத்தில் செலுத்தினால், சீல் செய்யப்பட்ட முகக்கவசம் இயந்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கிறது. வெளியே செல்கையில் ஒரு மாஸ்க் வாங்க வேண்டும் என்றால் மருந்து கடைகள் தேடி, கடையில் கூட்டத்தில், வரிசையில் நின்று, பணம் செலுத்தி சில்லறை பெற்று இப்படி ஒரு மாஸ்க் வாங்க நீண்ட நேரம் செலவிட வேண்டாம். இயந்திரத்தில் நாணயம் செலுத்திய ஐந்தாவது நொடியில் மாஸ்க் உங்கள் கைகளில் இருக்கும். வெளிநாடுகளில் இதுபோன்ற 'வெண்டிங் மெஷின்' எனும் 'பொருள் தரும் தானியங்கி இயந்திரம்' மிகவும் பிரபலம். சாக்லேட், சிப்ஸ், ஜூஸ் எனத் தொடங்கி பல்வேறு பொருட்களை இந்த இயந்திரத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள். பணம் செலுத்தி, வேண்டிய பொருளுக்கு பட்டன் அழுத்தினால் அது வெளியே வரும். தமிழகத்தில் கூட சென்னை மெட்ரோ நிலையங்கள் உட்பட சில இடங்களில் இந்த இயந்திரங்களை காணலாம்.

இந்த இயந்திரம், வாடிக்கையாளர்களின் பொருள் வாங்கும் வேலையை குறைக்கிறது. அவசர தேவைகளுக்கு உடனடி தீர்வாக இருக்கிறது. அதுவும் கோயம்பேடு பேருந்து நிலையம் போல எந்நேரமும் அதிக மக்கள் பயன்பாடு இருக்கும் இடங்களில் இது பலருக்கு பயன்படும்.

இன்ஸ்டா மாஸ்க்
இன்ஸ்டா மாஸ்க்

இதை மனதில் வைத்துத்தான் இந்த மாஸ்க் வழங்கும் 'இன்ஸ்டா மாஸ்க் ' இயந்திரத்தை அரசு அனுமதியோடு பேருந்து நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் விஜயராகவன் மற்றும் கிருஷ்ண பிரியதர்ஷினி. "நாங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னாள் இந்த இயந்திரத்தை உருவாக்கினோம், முதலில் தானியங்கி முறையில் மக்களுக்கு இளநீர் வழங்கும் இயந்திரமாகத்தான் இதை வடிவமைத்தோம். அதில் வெற்றிகாண்பதற்கு முன் கொரோனா சூழல் வந்தது. அப்போதுதான் இந்த பெருந்தொற்று காலத்தில் பயனுள்ளதாக இதை மாற்றுவோம் என எண்ணம் தோன்றியது. அதன் பிறகு, மக்களின் அத்தியாவசிய தேவையாக இன்று மாறியிருக்கும் மாஸ்க் குறைந்த விலையில், எளிதாக மக்களை சென்றடைய இது பயன்படும் எனத் தோன்றியது. அதன்படியே இதை வடிவமைத்தோம். மொத்த விலைக்கு மாஸ்க் தயாரிப்பாளர்களிடம் வாங்குவதால் எங்களால் மற்ற இடங்களை விட குறைவான விலையில் இதை கொடுக்க முடிகிறது" என்றார் விஜயராகவன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரை தொடர்ந்து பேசிய கிருஷ்ண பிரியதர்ஷினி," இந்த இயந்திரத்தை மக்கள் பின்னூட்டங்களை கொண்டு தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். முதலில் சோதனை முயற்சியாக ஒரு மருத்துவமனையில் இதை பயன்படுத்த முடிந்தது. அதன் பிறகுதான் இதை அதிக மக்கள் கூடும் இடத்தில பயன்படுத்த தோன்றியது. அரசை அணுகினோம். எங்கள் இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 500 மாஸ்க் இருப்பு வைக்க முடியும். ஒரு நாளில் சராசரியாக 150 மாஸ்குகள் விற்பனையாகும். இதுவரை நாங்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 40,000 மாஸ்குகள் இதன்மூலம் விநியோகம் செய்திருக்கிறோம்" என்றார்.

`கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 6-8 வாரங்கள் ஊரடங்கு வேண்டும்’- ஐசிஎம்ஆர் தலைவர் சொல்வது என்ன?

பொதுவாகவே இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தயங்கும் எளிய மனிதர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கும் இதுகுறித்து கற்றுக் கொடுத்து பயன்படுத்த வைக்கிறார்கள் இவர்கள்.

சிறு துரும்பும், பெருந்தொற்று காலத்தில் உதவும். இவர்களின் முயற்சியும் அந்த ரகம் தான். அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

- படங்கள் : சுரேஷ் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு