Published:Updated:

சிவகங்கை: `மண்பானை, வெட்டி வேர், துளசி’ - இளைஞரின் `மூலிகை ஏர்கூலர்' முயற்சி

ஏர்கூலர்
ஏர்கூலர்

``குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பயனுள்ள கருவியாக அமையக்கூடியதுதான் இந்த இயற்கை முறை ஏர்கூலர்.” - மதுரை செல்வன்

கொரோனோ தொற்றுக்கு நேரடி மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் அதனுடன் போராடும் பல மருத்துவ முறைகள் மூலம் நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். நோய் தொற்றுக்கு மருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கருவிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன.

கொரோனா
கொரோனா
Pixabay

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் `மதுரை செல்வன்’ மண்பானை, வெட்டி வேர், துளசி, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருள்களின் உதவியால் 'மூலிகை ஏர்கூலர்' ஒன்றை கண்டறிந்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

மதுரை செல்வன், ``பி.இ கம்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் பணி செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை நவீனம் மூலம் கையாளும் பணிகளைச் செய்கிறேன். தற்போது கனடாவில் என்னுடைய பணிகள் தொடர்கின்றன. விடுமுறையில் காரைக்குடியில்தான் உள்ளேன். ஊரடங்கு தொடர்வதால் கொரோனா காலகட்டத்தில் சமூக பயன்பாட்டிற்கு ஏதாவது கண்டுபிடிப்புகள் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

ஏர்கூலருடன்
ஏர்கூலருடன்

தற்போது பொது இடங்களில் ஏ.சி பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றக மூலிகை வழியாக ஏர்கூலர் ஒன்றை கண்டறிந்துள்ளேன். ஏசி பொதுவாகவே கெடுதலான ஒன்று. ஆனால், ஏர்கூலரில் உள்ள சில விசயங்களை மாற்றினால் ஆரோக்கியமான பயன்பாடாக மாற்ற முடியும் எனத் தோன்றியது.

அதனால் அதன் தத்துவத்தில் அடிப்படையில் மண்பானை உதவியால் தண்ணீரை குளுமை படுத்திவிட்டு வெட்டிவேர், வேப்பிலை, துளசி, மஞ்சள் போன்றவற்றின் பலன்களை பயன்படுத்தி இந்தக் கருவியை உருவாக்கியுள்ளேன். மண்பானை பக்கவாட்டில் வட்ட வடிவில் துவாரத்தை உருவாக்கி அதன் மேற்புறத்தில் சிறிய மண்சட்டியை சிறிய துளைகள் ஏற்படுத்தி வைக்க வேண்டும். ஏற்கெனவே தண்ணீரில் கொதிக்க வைத்த வெட்டிவேர், துளசி, மஞ்சள், வேப்பிலை ஆகிய நீர்கலவையைக் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் போதுமான அளவு தண்ணீருடன் கலந்து மண்பானையில் ஊற்ற வேண்டும். அதற்குப் பின் அதைப் பயன்படுத்தும்போது பானையுடன் பொருத்தப்பட்ட மின்விசிறி மூலம் மூலிகை நீர் வெளியேறும்.

ஏர்கூலர்
ஏர்கூலர்

இதனால் குளுமையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். நன்கு ஆராய்ந்து பின்னர்தான் இதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன். குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பயனுள்ள கருவியாக அமையக்கூடியதுதான் இந்த இயற்கை முறை ஏர்கூலர். இது கொரோனா காலகட்டம் மட்டுமல்ல எப்போதுமே பயன்படுத்தலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு