Published:Updated:

மனிதக்கழிவுகளை கோவையில் அகற்றும் எந்திரன்!

வருடா வருடம் விண்வெளிச் சாதனைகள் மூலம் பெருமைகொள்ளும் ஒரு நாட்டில், தொழில்நுட்பம் எட்டிக்கூடப் பார்க்காததால் நடக்கும் அவலம் இது.

திருப்பூர் அருகே ஒரு சாய ஆலையில் விஷவாயு தாக்கி நான்கு பேர் பலியாகினர். கோவையில், பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலில் பணியாற்றும் சகோதரர்கள் இரண்டு பேர் பலியானார்கள். சென்னை அருகே கிணற்றைத் தூர்வாரியபோது, விஷவாயு தாக்கி மூன்று பேர் மரணம்.

மனிதக்கழிவு
மனிதக்கழிவு

இவை கடந்த சில மாதங்களில், ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். ஊடகங்களில் வந்தும், வராமலும் மலக்குழி மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வருடா வருடம் விண்வெளிச் சாதனைகள் மூலம் பெருமைகொள்ளும் ஒரு நாட்டில், தொழில்நுட்பம் எட்டிக் கூடாத பார்க்காததால் நடக்கும் அவலம் இது.

தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்னைதான். ஆனால், துப்புரவுப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, நடக்கும் அவலங்களுக்கு எல்லாம் பொறுப்பேற்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

ரோபோ - மனிதக்கழிவு
ரோபோ - மனிதக்கழிவு

இந்த நிலையில், கோவை இருகூர் அருகே அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த Gen Robotics என்ற நிறுவனம் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ரோபோவை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கோவை மாநகராட்சிக்கு அர்ப்பணிக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

நிகழ்ச்சி
நிகழ்ச்சி

இதில், தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி கலந்துகொண்டு ரோபோவை அறிமுகம் செய்துவைத்தார்.

இதுகுறித்து ஜெகதீஷ் கிர்மானி, ``மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு இதற்குத் தடை விதித்தாலும், மரணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. இதனால், தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 174 பேரின் உயிர் பிரிந்திருக்கிறது. கோவையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோபோ
ரோபோ

நாடு முழுவதும், துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், உயிரிழப்புகளை தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தப் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். இந்த ரோபோவை கோவை மாநகராட்சிக்கு வழங்கும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்தக்கது" என்றார்.

இந்த ரோபோவை உருவாக்கியவர்களில் ஒரு மென்பொறியாளரான விமல், ``கேரளாவில் திருவனந்தபுரத்திலும், தமிழகத்தில் கும்பகோணத்திலும் ஏற்கெனவே மனிதக்கழிவுகளை தூய்மை செய்யும் ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளோம். ஆனால், திருவனந்தபுரத்தில் இருப்பது வெர்ஷன் 1.0. கும்பகோணத்தில் இருப்பது வெர்ஷன் 1.5.

ரோபோ
ரோபோ

தற்போது கோவையில் அறிமுகப்படுத்த உள்ள ரோபோ வெர்ஷன் 2.0. இந்த ரோபோ, உலகிலேயே கோவையில்தான் முதல்முறையாக அறிமுகமாக உள்ளது. இதற்கு பாண்டிகூட் (BandiCoot) என்று பெயரிட்டுள்ளோம். ரூ. 32 லட்ச ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் பல பாகங்களை, ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.

கார்பன் ஃபைபரில் தயாரித்துள்ளதால், இதன் எடை மிகவும் குறைவாகத்தான் இருக்கும் . அதே நேரத்தில், விரைவாக பணி செய்யும். குறிப்பாக, சாதாரண துப்புரவுப் பணியாளரும் கையாளும் வகையில் மிகவும், எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஒரு திரையும் அமைந்துள்ளது.

ரோபோ
ரோபோ

பழைய ரோபோவில் ஒரு சாக்கடையை தூய்மை செய்ய 45 நிமிடங்கள் தேவைப்படும். ஆனால், இந்த பாண்டிகூட், 17 நிமிடங்களில் சாக்கடையை தூய்மை செய்துவிடும். 125 கிலோ கழிவுகளை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது இது. ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தால், எட்டு மணி நேரம்வரை இதை எந்த சிரமமும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

கூகுளுடன் கனெக்ட் செய்துள்ளதால் பயன்படுத்த எளிமையாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும், இந்த ரோபோவை பயன்படுத்தும் டெமோ வீடியோவை, திரையில் காணலாம்.

ரோபோ
ரோபோ

சாஃப்ட்வேரை அப்டேட் செய்துகொள்ள முடியும். பிரச்னை ஏற்பட்டால், அதை எளிதில் சரி செய்ய முடியும்.

குறிப்பாக, விஷவாயுவை உணர்ந்து, தகவல் சொல்லும் ஆற்றலும் இதில் இருக்கிறது. முழுக்க முழுக்க, மனிதர்களின் பணிக்கு மாற்றாக இந்த ரோபோ இருக்கும்.

ரோபோ
ரோபோ

கோவையைத் தொடர்ந்து, சென்னையிலும் இந்த ரோபோவை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்றார்.

பாண்டிகூட் 2.0 ரோபோ, கோவை மாநகராட்சிக்கு காந்தி ஜயந்தியன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே, ரோபோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், விமல் பேசியதை கீழிருந்து துப்புரவுப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.

துப்புரவு பணியாளர்கள்
துப்புரவு பணியாளர்கள்

விமல் கீழே வந்ததும், அவரது கையைப் பிடித்து ஆனந்தக் கண்ணீர்விட்டபடி புன்னகைத்தனர். அந்தக் கண்ணீரில் உயிரிழப்புகளின் வலியும், எதிர்காலம் குறித்த பெருங்கனவும் தெரிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு