Published:Updated:

மக்கள் நலன் காக்கும் நாட்டின் நவீன கண்டுபிடிப்பு! | My Vikatan

Switzerland
News
Switzerland

ஹீரோக்களால் மட்டுமே திரைப்படங்கள் முழுமை பெறுவதில்லை. வில்லன்களும் வரும்போதுதான் ஆரவாரங்கள் தியேட்டரை அதிரச் செய்வது போலவே, உலக நாடக மேடை இரு பாலாராலும் நிரப்பப்பட்டுள்ளது.

‘அரிது அரிது மானிடராய்ப்

பிறத்தல் அரிது

அதனினும் அரிது

கூன்,குருடு,செவிடு,பேடு

நீங்கிப் பிறத்தல்’

- மனிதப் பிறவியின் மாண்பினை இப்படி உலகுக்கு உணர்த்துவார் ஔவையார். அஃறிணை தொடங்கி ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை உலகில் பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தாலும்,உயர் இடத்தில் இருப்பது மனித இனமே. சிந்திக்கவும்,சிரிக்கவும் தெரிந்த உயிர் வாழினம் மானிடப் பிறவியே.வலியையும் வருத்தத்தையும் உணரும் மற்ற விலங்குகளால்,சிந்தித்துச் செயலாற்ற முடிவதில்லை.

‘சிந்திக்கத் தெரிந்த மனிதனாலேயே உலகில் சிரமங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன’என்று நீங்கள் முனகுவது, எனக்கும் கேட்கத்தான் செய்கிறது. என்ன செய்வது? பூமியில் எல்லோரும் நல்லவர்களாகவே இருந்து விட்டால்,சுவாரஸ்யம் குன்றிப் போய் விடும் என்றே இயற்கை கெட்டவர்களையும் படைத்துள்ளது போலும். ஹீரோக்களால் மட்டுமே திரைப்படங்கள் முழுமை பெறுவதில்லை.வில்லன்களும் வரும்போதுதான்

ஆரவாரங்கள் தியேட்டரை அதிரச் செய்வது போலவே, உலக நாடக மேடை இரு பாலாராலும் நிரப்பப் பட்டுள்ளது. மனித வாழ்வில் என்னதான் இன்னல்களும் சங்கடங்களும் வந்தபோதும் நீண்ட நாள் வாழ்வதையே வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறார்கள் மக்கள். நமது சித்தர்களும் 120 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்வதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, அதனைச் சொல்லியும் சென்றார்கள். ’அட போங்க சார்.கொரோனாவும்,ஒமிக்ரானும் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் இந்த நேரத்தில் 120 அது, இதுவென்று நீங்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்களே’ என்று நீங்கள் திட்டத்தான் செய்வீர்கள். ’இதுவும் கடந்து போகும்’ என்பதே நமது தாரக மந்திரம். பெரியம்மை, காலரா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று எத்தனையோ பார்த்து விட்டோமே.

எங்கள் ஊரில்,1960 களில் ஒரு மழைக் காலத்தில் காலரா பரவியபோது, நான்கைந்து நாட்களில் பத்துப் பன்னிரண்டு பேர் இறந்து போயினர். ஊரே மயான அமைதியில் இருக்கும்.மாலை ஆனதுமே தெருக்களில் நடமாட்டம் குறைந்து விடும். அந்த ஒரு வேளையில்தான் எங்கள் ஊர் சுடுகாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு பிணங்களை எரித்ததாக வரலாறு சான்று கூறும்.சுடுகாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இறந்த உடல்களை வைத்து எரியூட்டுவார்கள். அந்த நேரத்தில் மட்டும் மற்றொரு இடத்திலும் எரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம்.

Omicron
Omicron

‘ஒமிக்ரான் என்பது கொரோனாவின் கடைசி உருமாறியாக இருக்கலாம் என்றும், இதோடு கொரோனாவே முழுமையாக உலகிலிருந்து விடை பெறக்கூடும்’ என்றும் ஒரு மருத்துவர் கூறியுள்ளார்.அது அவ்வாறே நடக்க வேண்டுமென்று நாமும் பிரார்த்திப்போம்.

இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உழலும் மனித வாழ்க்கையில்தான் எத்தனை இன்பங்கள்.. எவ்வளவு துயரங்கள்.இன்பங்களை அனுபவிக்கும் மனிதர்களில் பெரும்பாலானோரால் துன்பங்களைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. உடனே தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்கள்.இது உலக நாடுகள் அனைத்திலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ‘தன்னம்பிக்கை குறைவும்’, ’குற்றங்களுக்குத் தன் தவறே காரணம் என்ற ஆற்றாமையும்’, ’சமுதாயம் தன்னைத் தூற்றுமோ என்ற பயமும்’ போன்ற பல காரணங்களே தற்கொலைக்கு வழி செய்கின்றன. இவ்வளவுக்கும் நமது சாஸ்திரங்களும் சட்டங்களும் தற்கொலையை ஏற்றுக்கொள்வதில்லை.முன்னது, தற்கொலை செய்து கொள்வது பாவமென்றும், சந்ததியினரைப் பாதிக்குமென்றும் கூற,பின்னதுவோ அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில்,நமது நாட்டைப்போலவே, தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது. இதற்கு விதிவிலக்கான நாடுகளும் உண்டு.

நமது நாட்டில் ஒரு நாளைக்குச் சராசரியாக 381 தற்கொலைகள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் விபரம் தருகிறது.ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் 16 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.அது மட்டுமின்றி ஆண்டுக்காண்டு தற்கொலைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவதாகவும் அது மேலும் கூறுகிறது.

  • 2017-ம் ஆண்டு: 129887 தற்கொலைகள்

  • 2018-ம் ஆண்டு:134516 தற்கொலைகள்

  • 2019-ம் ஆண்டு:139123 தற்கொலைகள்

இதுவே காப்பகம் தரும் கணக்கு. தற்கொலை செய்து கொள்வோரில் பாதிக்கு மேலான சதவிகிதத்தினர் (53.6)தூக்கிட்டும், கால் பகுதியினர் (25.8) விஷமருந்தியும், குறைவான விழுக்காட்டினர் (5.2) நீரில் மூழ்கியும், பிற வழிகளில்(15.4) மற்றையோரும் தங்களுக்குத் தாங்களே இறுதி முடிவைத் தேடிக் கொள்கிறார்களாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தீராத நோய், அதன் காரணமாக உடலில் ஏற்படும் தாங்க முடியாத வலி ஆகியவற்றிலிருந்து நிரந்தர விடுதலை பெற விரும்புவோர்க்கு ‘கருணைக் கொலை’யைச் சட்ட பூர்வமாகப் பல நாடுகள் ஆதரித்து வருகின்றன.

‘தாய் அணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு

என்னைத் தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு

தென்னை, பனை ஏறிடவும் ஒரு கயிறு

இங்கு தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு!

நான் ஏறாத மரங்களே இல்லை ஐயா

எதிர்வரும் தூக்கு மரம் துரும்பே ஐயா’

என்ற திரைப்படப் பாடல்தான் இங்கு ஞாபகத்திற்கு வருகிறது. தண்டனை பெற்ற குற்றவாளிகளும் இங்கு தூக்குக் கயிறு மூலமே தண்டிக்கப்படுகிறார்கள்.கயிறு மட்டுமல்லாது, சேலை, துப்பட்டா, வேட்டி,துண்டு என்று கயிற்றின் இடத்தைத் தற்போது மற்றவையும் பிடித்து விட்டன. மரங்களிலும்,வீட்டு உத்திரங்களிலும் தூக்குப் போட்டு இறந்த நிலை மாறி, படுக்கையறை மின் விசிறிகளிலேயே தூக்குப் போட்டு இறப்பது தற்போது சர்வ சாதாரண நிகழ்வாகி வருவது, வருத்தம் அளிப்பதாகும். கண நேர உணர்ச்சிப் பெருக்கே தற்கொலைகள் நிகழக் காரணமாகி விடுகிறது.

டெல்டா மாவட்டங்களில்,நெல் பயிர்களில் பரவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஃபாலிடால்’ மற்றும் ‘என்ட்ரின்’ போன்ற மருந்துகளைக் குடித்துப் பலர் இறந்தார்கள். எலி மருந்தை உட்கொண்டு இறப்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் அரளிச் செடியின் விதையை அரைத்துக் குடித்துப் பலர் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். வயதானவர்களில், நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்படுபவர்களும், ஆறு,ஏரி,குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் வசிப்பவர்களும் நீரில் குதித்து இறந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில், தற்கொலையைச் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளும் உண்டு. கனடா, பெல்ஜியம், லக்சம்பர்க், அமெரிக்காவின் சில பகுதிகள், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் மருத்துவரின் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. தீராத நோய், அதன் காரணமாக உடலில் ஏற்படும் தாங்க முடியாத வலி ஆகியவற்றிலிருந்து நிரந்தர விடுதலை பெற விரும்புவோர்க்கு ‘கருணைக் கொலை’யைச் சட்ட பூர்வமாகப் பல நாடுகள் ஆதரித்து வருகின்றன. அந்த நிலையில் 1942-ம் ஆண்டிலிருந்தே,சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

suicide
suicide

மனித வாழ்வுக்கு மிகவும் உகந்த முதல் 10 நாடுகளில் எப்பொழுதும் இடம் பெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து.இந்நாட்டின் தட்ப வெப்ப நிலையும்,மக்கள் அனைவரும் அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழ அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளும்,அதற்கு அனைத்து மக்களும் மனமுவந்து கொடுத்து வரும் ஆதரவும், சிறப்பானவை.  பின்னிரவு நேரங்களில் விமான நிலையங்களில்,விமானப் போக்கு வரத்து கிடையாது. நாட்டு மக்கள் அமைதியாக உறங்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்களாம்.

சாலைகளில் ‘பெடஸ்ட்ரியன் க்ராசிங்’ கோடுகளுக்கு அருகில் நாம் சென்றாலே வாகனங்களை நிறுத்தி, வழி விடுகிறார்கள்.காரணம்,மிகக் கடுமையான சட்டங்கள். ஒரே தவறை ‘காஸ்ட்லி’ காரில் செல்பவரும்,சாதாரணக் காரில் செல்பவரும் செய்தால்,காஸ்ட்லி கார்க்காரருக்கு அபராதம் அதிகம்.அதாவது பொருளாதார அடிப்படையில் ஃபைன்-மீண்டும் அந்தத் தவறைச் செய்யக்கூடாது என்பதற்காக. சாலைகளின் தரமோ…அப்படியே அதன் மேல் சோற்றைப்போட்டுக் குழம்பை ஊற்றிச் சாப்பிடலாம் என்று நம்மூரில் சொல்வார்களே… அதைப்போல. அவ்வளவு தரம்… அவ்வளவு சுத்தம்.  

இங்குள்ள பெரும்பாலான மக்கள் நகர வாழ்க்கையை விரும்புவதில்லை. கிராமங்களில், இயற்கையை ரசித்தபடி வாழ்வதையே விரும்புகிறார்கள்.  வயதானவர்களும், தினமும் ‘வாக்கிங்’ போவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரண்டு கைகளிலும்,ஊன்றிக் கொள்ள இரும்புக் கைத்தடிகளைப் பிடித்தபடி,அவர்கள் நடந்து செல்வதே அழகு. எதிர்ப்படும் அனைவருக்கும் ஜெர்மன் மொழியில் புன்னகை தவழும் முகத்துடன் வணக்கம் சொல்லியபடி கடந்து போகிறார்கள்,நம் மனதில் கடக்க முடியாத இடத்தைப் பிடித்தபடி.

 சைக்கிள் ஓட்டுவதற்கும் நடப்பதற்கென்றுமே இங்கு தனிப்பாதைகள் உண்டு. அவற்றையும் நேர்த்தியாகப் பராமரிப்பதுடன், வழிகாட்டும் மற்றும் விபரம் தெரிவிக்கும் பலகைகளும் வைத்துள்ளார்கள். பேருந்து,ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை மிகச் சரியாக நிர்வகிக்கிறார்கள். அவை ஓரிரு நிமிடங்கள் கூடத் தாமதமாக வருவதில்லை. அட்டவணைப்படி அவை வந்து செல்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு முறையை அரசும் மக்களும் சேர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். எனவேதான் தூய்மையும் அமைதியும் இங்கு துணை சேர்ந்து வாழ்கின்றன.

நகர்ப் பகுதிக்குள்ளே ட்ராம்களும், நம்மூர் ‘வெஸ்டிப்யூல்’ போன்ற நீண்ட பஸ்களும் ஓடுகின்றன. அந்தப் பஸ்களை மின்சாரத்தால் இயக்குகிறார்கள்.  முக்கிய இடங்களிலும் ரயில் நிலையங்களிலும் பெரும் கடிகாரங்கள் வைத்துள்ளார்கள்.நான் தேடித் தேடிப்பார்த்தும், ஓடாத கடிகாரங்கள் எங்குமே இல்லை.

 வீட்டில் சேரும் குப்பையை, அதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் பைகளை வாங்கி, அவற்றுள் நிரப்பிக் கட்டி, வீடுகளுக்கு அருகிலுள்ள பெரும் இரும்புப் பெட்டிகளில் போட்டு விட வேண்டும். அந்தப் பெட்டிகளும் மூடப்பட்டே இருக்கும். பெட்டிகள் நிறைந்ததும், அதற்கென உரிய துறையைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள்.  மாதத்தில் இரண்டொரு நாட்களில், வீட்டில் சேரும் அட்டை கவர்களை பெரிய அட்டைப் பெட்டியிலோ, அல்லது கயிற்றால் நன்கு கட்டியோ அருகிலுள்ள சாலை ஓரத்தில் வைத்து விட, சுத்தம் செய்பவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள். பேப்பரையும் அது போலவே கட்டி வைத்து விட வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு முறையை அரசும் மக்களும் சேர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். எனவேதான் தூய்மையும் அமைதியும் இங்கு துணை சேர்ந்து வாழ்கின்றன.

Switzerland
Switzerland

இவ்வளவு வசதிகள் இருந்த போதும், இவற்றையும் தாண்டி மக்கள் தற்கொலை செய்து கொள்வது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றே. அதிக வயது முதிர்வு காரணமாகவும், அதையொட்டி வரும் நோய்கள் காரணமாகவுமே தற்கொலை செய்து கொள்கிறார்களாம். அவ்வாறு நிரந்தர விடுதலை பெற விரும்புவோர்க்குச் சாதகமாகவே இந்நாட்டின் சட்ட திட்டங்கள் உள்ளன. ’வாழ உரிமையுள்ளது போலவே தனி மனிதன் சாகவும் உரிமை உண்டு’ என்றே இந்நாட்டுச் சட்டங்கள் பேசுகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் எல்லாவற்றிலும் மேம்பட்டு நிற்பதைப்போலவே, இறப்பிலும் தனி மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, வலியற்று, மரண அவஸ்தையின்றி தற்கொலை செய்து கொள்ளவும் அனுமதி அளிப்பதில் வியப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதில் இன்னும் ஒரு படி மேலே போய்,சமீபத்தில் இந்நாட்டின் மருத்துவக் குழுவால் பச்சைக் கொளுத்தப்பட்ட (Green-lit) கையடக்கத் “தற்கொலைக் காப்ஸ்யூல்கள்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த காப்ஸ்யூல்கள் சர்கோ தற்கொலைக் காய்கள்(The Sarco Suicide Pods) என்றழைக்கப்படுகின்றன. எக்ஸிட் இன்டர்நேஷனல் (Exit International) என்ற நிறுவனம் தயாரித்துள்ளதாம்.

ஒருவர், உள்ளே சாய்ந்து படுத்துக் கொள்ளும் அளவுக்கு உள்ளது இந்தக் கருவி.இக் கருவிக்குள் நுழைந்ததும் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமாம். பின்னர் செயல்முறையைத் தொடங்க ஒரு பட்டனை அழுத்த வேண்டுமாம். இந்தக் கருவியின் உள்ளே ‘ஹைபோக்சியா’ மற்றும் ‘ஹைபோகாப்னியா’ மூலம் அரை நிமிடத்திலிருந்து ஒரு நிமிடத்திற்குள் மரணம் நிகழ்கிறதாம் - எவ்வித வலியோ, சிரமமோ இன்றி.அதாவது ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு அளவைக் குறைத்து மரணம் நிகழச் செய்கிறதாம் இக்கருவி. இது, நாட்பட்ட மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டு இனி உயிருடன் இருப்பதில் பயனில்லை என்று எண்ணுவோர்க்காக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Exit Capsule
Exit Capsule

கடந்த ஆண்டு ‘டிக்னிடாஸ்’ மற்றும் ‘எக்ஸிட்’ போன்ற கருணைக் கொலை அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தி 1300 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாகப் புள்ளி விபரம் கூறுகிறது.எனவே இந்தக் கருவியை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படலாம் என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் எல்லாவற்றிலும் மேம்பட்டு நிற்பதைப்போலவே, இறப்பிலும் தனி மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, வலியற்று, மரண அவஸ்தையின்றி தற்கொலை செய்து கொள்ளவும் அனுமதி அளிப்பதில் வியப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

Switzerland
Switzerland

மேலுள்ள படத்தைப் பார்த்தாலே சுவிசின் நாகரீகமும் பண்பாடும் மாறுபட்டது என்பதை உணரலாம்.எங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டு வாசலில் காணப்படுவது இது! நம்மூரில் இப்படிச் செய்தால் அடிக்க வந்து விடுவார்களே என்கிறீர்களா? உண்மைதான். இது நம்மூர் அல்லவே.

- ரெ.ஆத்மநாதன்

 காட்டிகன், சுவிட்சர்லாந்து