Published:Updated:

அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்... உரிய அங்கீகாரம் கிட்டுமா?!

"3 கருவிகளைக் கண்டுபிடித்துள்ளேன். எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது என்னுடைய கனவு. நடிகர் விஜய் அவர்களை பார்த்து உதவி கேட்கவேண்டும் என்பது ஆசை. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட பெண் ஆசிரியைக்கு அனிமேஷன் வீடியோவை நான்தான் செய்து கொடுத்தேன்!" - விழுப்புரம் இளைஞர்

ஒவ்வொரு மனிதரும் இங்கு ஏதோ ஒரு திறமையுடனே வாழ்கிறோம். கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம், பேச்சு, அரசியல், கலைநயம், கலைத்திறன், தொழில்திறன் போன்ற பல துறைகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திறமையை கொண்டாவது ஒரு மனிதன் திகழ்வதுண்டு. அந்தத் திறமையை கண்டறிந்து வெளியில் கொண்டுவரும் போதுதான் அம்மனிதன் பலராலும் அறியப்படுகிறான்.

அநேகமான இன்றைய இளைஞர்களிடையே தெளிவான சிந்தனையும், ஆசையும், எதிர்கால கனவுகளும் இருந்தாலும் அவர்களுக்கு முக்கிய தடைக்கல்லாக இருப்பது பொருளுதவி, வாழ்க்கைச் சூழல் போன்றவையே. அப்படியும் சிலர் முட்டி, மோதியாவது தன் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். அவர்களின் திறமைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் முறையான ஊக்கமளித்து அவர்கள் அடுத்த நிலையை அடைவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் உண்டா… என்றால் கேள்வியே மிஞ்சுகிறது.

அந்த வரிசையில், விழுப்புரத்தில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சில சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். அதை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள விழுப்புரத்திற்குப் பயணப்பட்டோம். அவரை நேரில் சந்தித்து பேசினோம்.

விழுப்புரம் இளைஞர் K.முகமது ஷாகுல் அமிது
விழுப்புரம் இளைஞர் K.முகமது ஷாகுல் அமிது

“என்னுடைய பெயர் K.முகமது ஷாகுல் அமிது. நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பையன்தான். அப்பா பெயர் கமர்தீன், அம்மா பெயர் சுபைதா பேகம். எனக்கு 3 சகோதரிகள் நான் ஒரே பையன். பூர்வீகமே விழுப்புரம்தான் என்றாலும் இன்றுவரை நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். நான் படித்தது பொறியியல் ECE துறைதான். மயிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்தான் பயின்றேன். நான் சிறுவயதில் டிவி அதிகமாக பார்ப்பேன். பள்ளிக்குச் சென்றால் பார்க்க முடியாது என்பதற்காக அட்டைப்பெட்டியில் டிவி போல வரைந்து சோலார் பேனல் ஒன்றை அதில் இணைத்து எடுத்துச் செல்வேன். ஆனால், அது இயங்காது. இப்படிதான் என் அறிவியலில் ஆர்வம் கூடியது.

குறும்புத்தனமாக சின்ன சின்னதாக ஏதாவது ஒன்றை பள்ளிநாட்களில் செய்து பார்ப்பேன். கல்லூரியில் நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு யோசனை தோன்றியது. நான் கார் கேம் விளையாடுவேன், விளையாடி முடித்ததும் நான் ஏதாவது மற்ற கார்களை சேதப்படுத்தி இருந்தால் குறிப்பிட்ட நாணயங்களைப் பிடித்திருப்பார்கள். இதை ஏன் நாம் வேறு மாதிரி நடைமுறையில் பயன்படுத்தக்கூடாது எனத் தோன்றியது. அந்த சமயத்தில்தான் பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்தது. பாஸ்டேக் வசதியை ஒரு கார் உரிமையாளர் பெரும்பொழுது உரிய ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பித்திருப்பார். அது சேமிக்கப்பட்டிருக்கும். காரில் ஒட்டப்படும் உரிய வில்லையில் அந்தத் தகவல்கள் கட்டாயம் அடங்கியிருக்கும். இப்போது பாஸ்டேக் முறை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகமான கார் விபத்துகள் நடக்கின்றன. இடித்துவிட்டு செல்லும் சிலர் அகப்படுவதில்லை. துன்பப்படுவது என்னவோ பாதிக்கப்படுபவர்தான். எனவே, ஒரு காரை மற்றொரு கார் இடித்துவிட்டு சென்றால் இடித்தவரின் கார் 500 மீட்டர் இடைவெளிக்குள் நின்றுவிடும். மேற்கொண்டு அந்தக் காரை இயக்க முடியாது. பாதிப்படைந்த வாகனத்திலிருந்து காவல் நிலையம், வீடு மற்றும் ஆம்புலன்ஸ்கு உதவி எனும் அழைப்பு சென்றுவிடும். உரியவர்கள் எளிதாகக் காக்கப்படுவார்கள். இதுதான் என்னுடைய முதல் கண்டுபிடிப்பு. இதை முழுமையாக செய்து முடிக்க எனக்கு 7,000 ரூபாய் வரை தேவைப்பட்டது. இதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு எனக்கு போதிய வசதி இல்லை. நான் ட்விட்டர் பயன்படுத்துவதுண்டு. அந்தச் சமயத்தில் பள்ளி மாணவர் ஒருவருக்கு உதவி செய்திருந்தார் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன். எனக்கும் உதவி தேவைப்பட்டதால் அவருக்கு டிவீட் செய்தேன். அவரும் என்னுடைய கோரிக்கையை ஏற்று நான் ஒரு கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்பதற்கு உதவி செய்தார்.

முதல் கண்டுபிடிப்பு
முதல் கண்டுபிடிப்பு

அந்தப் போட்டி, கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்குக்கொள்ளும் ACMA எனும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இந்திய அளவிலான போட்டி. நான் அதில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டாடா நிறுவனத்தின் முக்கிய நபர் ஒருவர் என் கண்டுபிடிப்பை பாராட்டி அதைப் பற்றி கேட்டார். ஆனால், அதன்பின் தகவல் ஏதுமில்லை. இதே கண்டுபிடிப்பை கொண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றேன். அதன் பின் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன், மு.க.ஸ்டாலின், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கிரண் பேடி போன்றோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள். எனக்கு ஒரு கார் கிடைத்தால் அந்தக் கண்டுபிடிப்பை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டிவிடுவேன். நடிகர் விஜய் அவர்களைச் சந்தித்து கார் உதவி கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிறைய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் தொடர்ச்சியாக பெண்கள் பாதுகாப்புக் கருவி ஒன்றை கண்டுபிடித்தேன். அது கைக்கடிகாரம் போன்ற பேண்ட் வடிவில் இருக்கும். அதில் ஒரு பொத்தான் மட்டும் இருக்கும். பெற்றோர் மற்றும் காவல்துறையினரின் மொபைல் எண் சேமிக்கப்பட்ட சிம்கார்டு ஒன்று அதில் பொருத்தப்பட்டிருக்கும். எதாவது அவர்களுக்கு ஆபத்து எனும் பொழுது அந்த பொத்தானை அழுத்தினால் போதும். பெண் பாதுகாப்பு பிரிவு மற்றும் பெற்றோர்களுக்கு எந்த இடம் என்பதைக் குறிப்பிட்டு ஒரே சமயத்தில் அழைப்பு சென்றுவிடும். அதன்மூலம் நாம் அவர்களை சுலபமாகக் காப்பாற்றிவிடலாம். அதுமட்டுமின்றி, இதற்கு ஒரு செயலியையும் உருவாக்கி உள்ளேன். அதன் மூலம் தங்கள் குழந்தை எங்கு உள்ளார் என்று பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்தக் கண்டுபிடிப்பை செய்து முடிப்பதற்கு 1700 ரூபாய் தான் செலவாகியது. அரசு இதற்கு அங்கீகாரம் கொடுத்து உதவினால் 600 ரூபாய்க்கு என்னால் செய்து கொடுக்க முடியும்.

பெண்கள் பாதுகாப்பு கருவி
பெண்கள் பாதுகாப்பு கருவி

நம் அனைவரின் வாழ்க்கையையும் கடந்த வருடம் முதல் பெரிதாக பாதித்து வருகிறது கொரோனா. மருத்துவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து கொரோனா தொற்றாளர்களையும் நேரில் சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, தொற்றாளர்களுக்கு உணவு, மருந்துகளை எடுத்து செல்லக்கூடிய வகையிலும், அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க கூடிய வகையிலும் கேமராவுடன் ஒரு சிறு கார் செய்தேன். அந்த கார் 4 கிலோ எடை வரை சுமந்து செல்லும். மிகவும் அவசரம் எனும் நிலையில் உள்ள தொற்றாளர்களை மட்டும் நேரில் மருத்துவர் சென்று பார்த்தால் போதும் என்ற அடிப்படையில் அந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினேன். இதற்கு 1500 ரூபாய் வரை செலவானது.

‘கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஒரு விருதை இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழங்கியது. ஏப்ரல் 14-ம் தேதி ‘யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றொரு விருதை வழங்கியிருக்கிறது. கார் விபத்துக்குள்ளானதும் மருத்துவ உதவிக்கு அழைக்கும் கருவி மற்றும் கொரோனா தொற்றாளர்களுக்கு மருந்து எடுத்து செல்லும் கண்டுபிடிப்புகளுக்கு உரிய உரிமம் பெற்று வைத்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.

இதற்கான செலவுகள் அனைத்திற்கும் பணம் வீட்டிலிருந்துதான் வாங்கினேன். ஒரு சிறிய போட்டிக்கு போகும்போதும் அம்மா தான் அணிந்திருக்கும் நகையை அடகு வைத்து, கடன் வாங்கிதான் கொடுத்து அனுப்புவார்கள். அப்போதெல்லாம், ‘நாம் எப்படியாவது விரைவாக சாதித்துவிட மாட்டோமா...' என்று தோன்றும். தற்போது குப்பை தரம் பிரித்தல் தொடர்பாக ஒரு கண்டுபிடிப்பை செய்துக்கொண்டு வருகிறேன். இவை மட்டுமில்லாமல் அனிமேஷன் விடியோவும் செய்கிறேன். புதுவை அரசுக்கு சாலைப் பாதுகாப்பு மாதம் தொடர்பாக போக்குவரத்து விழிப்புணர்வு அனிமேஷன் வீடியோ ஒன்று செய்து கொடுத்துள்ளேன். மீண்டும் புதுச்சேரி அரசுக்கு, தேர்தல் விழிப்புணர்வு அனிமேஷன் வீடியோவும் தயார் செய்தேன். அண்மையில் கொரோனா நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக அனிமேஷன் முறையில் வகுப்பு எடுத்தற்காக விழுப்புரத்தை சேர்ந்த பெண் தமிழாசிரியர் ஹேமலதா பலராலும் பாராட்டப்பட்டார். பிரதமர் மோடியும் (மனதின் குரல் உரையில்) அவரைப் பாராட்டினார். அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்குப் பயன்படுத்திய அந்த அனிமேஷன் வீடியோவை நான்தான் வடிவமைத்துக் கொடுத்தேன். மொத்தம் 54 வீடியோக்கள். 3 மணிநேரம் 35 நிமிடங்கள் அந்த வீடியோவின் கால அளவு. இதைக் குறைந்த அளவிலான கட்டணம் மூலமாகவே செய்து கொடுத்தேன்.

''அஞ்சு ரூபாய் போடு - மாஸ்க் எடு''- சென்னை இன்ஜினீயர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

அனிமேஷன் செய்வதற்கு தனியாக நான் வகுப்புகள் எதுவும் போகவில்லை. எல்லாம் இணையம் மூலமாகக் கற்றதுதான். வருங்கால மாணவர்களுக்கு அறிவியலைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த கட்டணத்தில், அதாவது நான்கு மாதங்களுக்கு 4,000 ரூபாயில் ரோபாட்டிக்ஸ் (AI) கற்றுத்தருகிறேன். என்னுடைய எதிர்கால கனவு சிறந்த விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான். பொறியியல் படித்தால் வேலை இல்லை எனும் தவறான அபிப்பிராயம் இன்றைய மாணவர்கள் மனதில் நிறைந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் மட்டும் வேலையைத் தேடாமல், எதிர்கால தேவைகளாக இருக்கும் கோடிங், அனிமேஷன் போன்றவற்றையும் இணைந்து படிக்கும்போது கட்டாயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார் அவர்.

அவருக்கு வாழ்த்துகளை கூறி அங்கிருந்து புறப்பட்டோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு