உலகின் முதல் விண்வெளி சுற்றுலா என்ற பெருமையோடு கடந்த ஜூலை 11-ஆம் தேதி ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தங்கள் விண்வெளிப் பயணத்தை முடித்திருக்க, நேற்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து முதல் விண்வெளிச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். விண்வெளிச் சுற்றுலா என்ற திட்டத்தின் அடுத்த மைல் கல்லை இந்த இரண்டு நிறுவனமும், இரண்டு மனிதர்களும் தொட்டிருக்கின்றனர்.
ஜூலை 20-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஜெஃப் பெஸோஸின் விண்வெளிச் சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது. சரியாக இந்திய நேரப்படி மாலை 6.43-க்கு, ஜெஃப் பெஸோஸ், அவரது சகோதரர் மார்க் பெஸோஸ், வாலி ஃபங்க் மற்றும் முதல் விண்வெளி சுற்றுலா செல்லும் வாடிக்கையாளர் ஆலிவர் டேமன் (Oliver Daemen) ஆகியோருடன் அமெரிக்காவில் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்குக் கிளம்பியது நியூ ஷெப்பர்ட் விண்கலம்.
பூமியில் இருந்து 62 மைல்கள் தாண்டி கர்மன் கோட்டைக் (Karman Line - பூமியின் வளிமண்டலத்தையும், விண்வெளியையும் பிரிக்கும் வகையில் குறிக்கப்படும் எல்லைக் கோடு) கடந்து சில நிமிடங்கள் விண்வெளியில் எடையற்ற தன்மையைப் பயணக் குழுவினர் உணர்ந்த பின்னர், மீண்டும் பூமியில் வந்து விழுந்தது அவர்கள் பயணித்த கேப்ஸியூல். 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்தப் பயணத்தில்தான் உலகிலேயே மிகவும் இளமையான வயதில் விண்வெளிக்குப் பயணம் செய்யும் 18 வயது ஆலிவரும், அதிக வயதில் விண்வெளிப் பயணம் செய்பவருமான வாலி ஃபங்கும் இடம் பெற்றிருந்தனர்.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் 53.5 மைல்கள் வரை பயணம் செய்து பூமிக்குத் திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 57 வயதாகும் பெஸோஸூக்கு 5 வயதில் இருந்தே விண்ணுக்குச் செல்லும் ஆர்வம் மிகுதியாக இருந்துள்ளது. பெஸோஸ் பிரான்சன் இருவரும் தங்களது பல ஆண்டுக் கனவை தற்போது நனவாக்கியுள்ளனர். 9 நாள்கள் இடைவெளியில் இருவருமே விண்ணுக்குச் சென்று வந்துள்ளனர்.
நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இருந்து பிரிந்த அதன் பூஸ்டர் வெற்றிகரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதே பூஸ்டரைக் கொண்டு மீண்டும் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதுதான் விண்வெளிச் சுற்றுலாவிற்கான முதல் குறிக்கோளாகவும் இருந்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்களை வடிவமைத்ததன் மூலம், விண்வெளிச் சுற்றுலாவுக்கான செலவும் வெகுவாகவே குறையும்.
இனி வரும் ஆண்டுகளில் இரண்டு நிறுவனங்களும் வியாபார ரீதியாகப் பல விண்வெளிச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.