Published:Updated:

``ராக்கெட் எரிபொருள் செலவைக் குறைக்கப்போறோம்’’ அரசுப் பள்ளி மாணவர்களின் நம்பிக்கை முயற்சி #CelebrateGovtSchool

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``ராக்கெட் எரிபொருள் செலவைக் குறைக்கப்போறோம்’’ அரசுப் பள்ளி மாணவர்களின் நம்பிக்கை முயற்சி #CelebrateGovtSchool
``ராக்கெட் எரிபொருள் செலவைக் குறைக்கப்போறோம்’’ அரசுப் பள்ளி மாணவர்களின் நம்பிக்கை முயற்சி #CelebrateGovtSchool

"இதை எதுக்கு நாங்க உருவாக்கினோம் என்றால், நம்ம நாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு எரிபொருள் அதிகச் செலவாகுது. நாங்க செலவைக் குறைக்க முயற்சியாக இதைப் பண்ணப்போறோம். ஆமா, நாங்க எல்லோரும் சயின்டிஸ்ட்!’’

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் உள்ள ஆலங்குடியிலிருந்து 5 கி.மீ உள்ளே செல்ல வேண்டும். இருபுறமும் பறந்த வயல்வெளிகளைக் கொண்ட ஒத்தையடிப்பாதை. பேருந்து என்றால் காலை ஒருமுறை, மாலை ஒருமுறை. கூகுள் மேப் இந்தக் கிராமத்தைக் காட்டாவிட்டாலும், இக்கிராம மாணவர்களின் முயற்சிகளால் பின்னாளில் கூகுளில் தேடப்படலாம். அந்தக் கிராமத்தின் பெயர் தென்குவளைவேலி!

6 ஆசிரியர்கள் 100 மாணவர்களைக் கொண்டது தென்குவளைவேலி அரசு நடுநிலைப்பள்ளி. சென்ற வருடத்திலிருந்து உயர் நிலைப் பள்ளியாக உயர்ந்திருக்கிறது. எனவே, ஆலங்குடி செல்லும் உள்ளூர் மாணவர்கள் இங்கு சேர ஓரிரு வருடங்கள் ஆகும். போக்குவரத்து சிக்கல் காரணமாக வெளியூர் மாணவர்களும் இங்கு பயில்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு பள்ளி கடந்த சில தினங்களாகத் திருவாரூர் மாவட்டக் கல்வி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. காரணம், இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய சிறிய ராக்கெட். பறந்தது சில நிமிடங்கள்தான் என்றாலும், அது ஒட்டுமொத்த கிராமத்தின் கொண்டாட்ட தருணம்.

சேரன் செங்குட்டுவன், வசந்த், அருண், ஆதித்யன், அரவிந்தன், பிரவீன், அருள்சக்தி, தீபலஷ்மி, ஜனப்பிரியா சினேகா, ரஞ்சிதா. 9-ம் வகுப்பு படிக்கும் இந்த 11 பேர் கொண்ட குழு ராக்கெட்டை வடிவமைத்தார்கள். பள்ளியிலேயே சீனியர்கள். 10-ம் வகுப்பு இல்லாததால் சூப்பர் சீனியர் என்றுகூடச் சொல்லலாம். அந்தப் பெருமிதத்தோடு பேசுகிறார்கள், ``நாங்க எல்லாம் ஒரு மாசமா இந்த முயற்சியைச் செஞ்சிக்கிட்டு இருக்கோம். வழக்கமா ராக்கெட் பறப்பதற்குத் திரவமாக்கப்பட்ட ஆக்ஸிடைசுகள் பயன்படுத்துவாங்க. அதுல திரவ ஆக்சிஜன், நைட்ரஜன் டெட்ராக்ஸைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு கலந்திருக்கும். ஆனா, நாங்க வேற மாதிரி யோசிச்சோம். சமையல் சோடாவையும் சிட்ரிக் ஆசிடையும் தண்ணில கலந்து எரிபொருளாக்கினோம். இந்தக் கலவையை தடிமன் இல்லாத பாட்டிலில் ஊற்றி அடைத்திடனும். அப்புறம், அதைச் செங்குத்தா வெச்சா எல்லாம் கலந்து அழுத்தம் உண்டாக்கி கீழே அழுத்தும். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எதிர்வினை உண்டாகி பாட்டில் பறக்கும். இதுதான் நாங்க உருவாக்குன ராக்கெட்.’’

"இதை எதுக்கு நாங்க உருவாக்கினோம் என்றால், நம்ம நாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு எரிபொருள் அதிகச் செலவாகுது. நாங்க செலவைக் குறைக்க முயற்சியாக இதைப் பண்ணப்போறோம். ஆமா, நாங்க எல்லோரும் சயின்டிஸ்ட்!’’ என்கிறார்கள்.

சென்ற வருடம் வரை நடுநிலைப்பள்ளி என்பதால் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் கிடையாது. இனிவரும் வருடங்களில்தான் ஒன்பது மற்றும் பத்தாவது செய்முறைத் தேர்வுக்காக உருவாக்க வேண்டும். அப்படியிருக்கும்போது மாணவர்கள் அறிவியலில் பல விஷயங்களை அறிந்து வைத்திருந்தார்கள். முக்கியக் காரணம், ஆசிரியர் சூரியகுமார்.

``நான் சமூக அறிவியல் ஆசிரியர். மாணவர்களுக்கு புவியியலில் விண்வெளி, ராக்கெட் போன்ற பாடங்கள் நடத்தும்போது ஆர்வமாகக் கேட்பார்கள். நான் சமூக அறிவியல் துறைதான் என்றாலும் அறிவியலும் பரிச்சயமுள்ளவன். சுட்டி விகடனில் `இந்த நாள்’ போன்ற அறிவியல் தொடர்கள் எழுதியுள்ளேன். அவர்கள் ஆர்வமாகக் கேட்கும்போது அதைப் பற்றிய ஆய்வுகளையும் செயல்முறைகளையும் கண்டுபிடித்து அவர்களுக்குச் சொல்வேன். அதன்மூலம் அவர்கள் பயிற்சி பெறுவார்கள். அப்துல்கலாம், சுனிதா வில்லியம்ஸ் என்று அவர்களின் அனைத்து செயல்களையும் கற்கிறார்கள். நான் மதுரை நகரப்பள்ளியில் பணியாற்றினேன். ஆனால், கிராம மாணவர்களுக்குக் கல்வி கொடுக்கும் பொருட்டு விரும்பி இங்கே வந்தேன். இன்னும் சில வருடங்களில் இந்தப் பள்ளி மாணவர்கள் அறிவியலில் சிறந்து விளங்குவார்கள்’’ என்கிறார் ஆசிரியர் சூரியகுமார்.

மேலும் கூறும்போது, ``நாம் கிராம மாணவர்கள், தகுதி குறைவானவர்கள் என்று மதிப்பிடுவது தவறு. நான் பார்த்தவரையில் நகர மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் பெரிய அளவில் சிந்திக்கிறார்கள். அடுத்து, முட்டை ஓடு அமிலத்தைத் தாங்குகிறது. அதன் மூலம் உபயோகப்பொருள் பெண்களுக்காகக் கண்டுபிடிக்கும் செயலில் இறங்கியுள்ளோம். ஏனெனில், ஆசிட் வீசும் அபாயத்திலிருந்து தடுக்க வேண்டும்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி, போல்ட் ஸ்கோப் (Fold Scope) என்ற கையடக்க மைக்ரோஸ்கோப் மூலம் மாணவர்களுக்கு தாவரவியல் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம் மாணவர்களே, சுலபமாக ஒரு தாவரத்தின் மகரந்தம், சூல் போன்றவற்றைக் காண முடியும். அவற்றைக்கொண்டு தாவரத்தின் வகை, குடும்பம், மருத்துவ குணம் போன்றவற்றை அறியலாம். பெரும்பாலும் சுற்றுவட்டாரங்களில் பல தாவரங்களை வகைப்படுத்தியுள்ளார்கள். உதாரணத்துக்கு, கொன்றை என்று அறியப்படும் தாவரத்திலிருந்து பத்து வகைகளைப் பிரித்தறிந்துள்ளனர்.

அடிப்படை வசதி அதிகம் இல்லாத ஓர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி, அங்குள்ள மொட்டுகளால் அறிவியல் பூக்கும் பூங்காவாக மாறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு