Published:Updated:

பள்ளி மாணவர்களுக்கான இந்திய தேசிய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுகள்... விண்ணப்பிப்பது எப்படி?

International Science Olympiads

2022 ஆம் ஆண்டில் வானியல் (Astronomy), உயிரியல் (Biology), வேதியியல் (Chemistry), இளம் அறிவியல் (Junior Science) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளில் பன்னாட்டு ஒலிம்பியாட்கள் நடத்தப்பட இருக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கான இந்திய தேசிய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுகள்... விண்ணப்பிப்பது எப்படி?

2022 ஆம் ஆண்டில் வானியல் (Astronomy), உயிரியல் (Biology), வேதியியல் (Chemistry), இளம் அறிவியல் (Junior Science) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளில் பன்னாட்டு ஒலிம்பியாட்கள் நடத்தப்பட இருக்கின்றன.

Published:Updated:
International Science Olympiads
உலகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் துறையில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 'பன்னாட்டு அறிவியல் ஒலிம்பியாட்டுகள்' (International Science Olympiads) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பன்னாட்டு அறிவியல் ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக இந்திய அரசு 'தேசிய ஒலிம்பியாட் திட்டம்' (National Olympiad Programme) ஒன்றை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வு (Indian Olympiad Qualifier - IOQ) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்திய ஒலிம்பியாட் நிலைகள்

முந்தைய ஆண்டுகளில் பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மூன்று நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுக்கான நடைமுறை இரண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஒலிம்பியாட் திட்டம் (National Olympiad Programme)
தேசிய ஒலிம்பியாட் திட்டம் (National Olympiad Programme)

முதல் பகுதி

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுக்கான முதல் பகுதித் தேர்வாக, தேசியத் தகுதித் தேர்வு (National Standard Examinations) அமைந்திருக்கிறது. இத்தேர்வானது 75 நிமிடங்கள் எனும் கால அளவில் கொள்குறி வகைத் (Objective Type) தேர்வாக இருக்கும். இத்தேர்வானது இரண்டாம் பகுதித் தேர்விற்கான சலித்தல் தேர்வாகவே (Screening) இருக்கிறது. இத்தேர்வு, ஒவ்வொரு பாடத்திற்குமான பெயரிலான தேசியத் தகுதித் தேர்வாக, வானியல் – NSEA, உயிரியல் - NSEB, வேதியியல் - NSEC, இளம் அறிவியல் –NSEJS, இயற்பியல் – NSEP என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாம் பகுதி

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுக்கான இரண்டாம் பகுதித் தேர்வாக, இந்திய தேசிய ஒலிம்பியாட் (Indian National Olympiad) தேர்வு அமைந்திருக்கிறது. இத்தேர்வானது 120 நிமிடங்கள் எனும் கால அளவில் விரிவான பதிலளிக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சியடைபவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இதனை ஒவ்வொரு பாடத்திற்குமான பெயரிலான இந்திய தேசிய ஒலிம்பியாட் தேர்வாக, வானியல் - INAO, உயிரியல் - INBO, வேதியியல் - INChO, இளம் அறிவியல் – INJSO, இயற்பியல் - INPhO என்று அழைக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வி மற்றும் வயது

2022 ஆம் ஆண்டில் வானியல் (Astronomy), உயிரியல் (Biology), வேதியியல் (Chemistry), இளம் அறிவியல் (Junior Science) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளில் பன்னாட்டு ஒலிம்பியாட்கள் நடத்தப்பட இருக்கின்றன.

வானியல் (Astronomy), உயிரியல் (Biology), வேதியியல் (Chemistry) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளில் பங்கேற்பதற்கு, இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பள்ளியில் 30-11-2019 அன்று +2 அல்லது அதற்குக் குறைவான வகுப்பில் (8, 9, 10, 11 அல்லது 12 ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் 1-7-2002 முதல் 30-6-2007 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகம் அல்லது அதற்குச் சமமான கல்வி நிறுவனத்தில் 1-6-2022 அன்று படிப்பைத் தொடங்குபவராகவோ அல்லது அதற்குத் திட்டமிடுபவர்களாகவோ இருக்கக் கூடாது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் இளம் அறிவியல் (IOQJS) பிரிவில் நுழைவு பெற்றிருக்கக் கூடாது.

இளம் அறிவியல் (Junior Science) பிரிவில் பங்கேற்பதற்கு, இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பள்ளியில் 30-11-2019 அன்று 10 அல்லது அதற்குக் குறைவான வகுப்பில் (8, 9 அல்லது 10 ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் 1-1-2007 முதல் 31-12-2008 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். 2021-2022 ஆம் ஆண்டிற்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் வானியல் (IOQA), உயிரியல் (IOQB), வேதியியல் (IOQC) அல்லது இயற்பியல் (IOQP) பிரிவில் நுழைவு பெற்றிருக்கக் கூடாது.

மாணவர்கள்
மாணவர்கள்

விண்ணப்பம் பதிவு

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுக்குப் (Indian Olympiad Qualifier - IOQ) பதிவு (Enrollment) செய்து கொள்ள விரும்புபவர்கள், https://reg.ioqexam.in/ எனும் முகவரிக்குச் சென்று இணைய வழியில் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது இரண்டு படிமுறைகளிலான பதிவாக இருக்கிறது. இங்கு மேற்காணும் அறிவியல் பாடங்கள் தவிர்த்து, கணிதத்தில் இந்திய ஒலிம்பியாட் தகுதி (IOQM) சேர்க்கைக்கான பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்காணும் அறிவியல் பாடங்களிலான இந்திய ஒலிம்பியாட் தேர்வுகளில் விரும்பும் பாடம் ஒவ்வொன்றுக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். இப்பதிவு மடிக்கணினி மற்றும் மேசைக்கணினியில் (Laptop/Desktop Computers) மட்டுமே செய்யக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. திறன்பேசி/அலைபேசி (Smart Phone/Mobile Phone) வழியாகப் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொள்ளக் கடைசி நாள்: 31-10-2021

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வு

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வினை இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் கழகம் (Indian Association of Physics Teachers - IAPT), வேதியியல் ஆசிரியர்கள் கழகம் (Association of Chemistry Teachers - ACT), உயிரியல் அறிவியலுக்கான ஆசிரியர்கள் கழகம் (Association of Teachers in Biological Sciences - ATBS), டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education– HBCSE (TIFR)) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

முதல் பகுதித் தேர்வான தேசியத் தகுதித் தேர்வு (National Standard Examinations) இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் கழகம் (Indian Association of Physics Teachers - IAPT), வேதியியல் ஆசிரியர்கள் கழகம் (Association of Chemistry Teachers - ACT), உயிரியல் அறிவியலுக்கான ஆசிரியர்கள் கழகம் (Association of Teachers in Biological Sciences - ATBS) ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாம் பகுதித் தேர்வான இந்திய தேசிய ஒலிம்பியாட் (Indian National Olympiad) தேர்வு மற்றும் அடுத்த நிலைகளுக்கான தேர்வுகளையும், பயிற்சிகளையும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education– HBCSE (TIFR)) மேற்கொள்ளும்.

அறிவியல்
அறிவியல்

தேர்வு நாள்

இளம் அறிவியலுக்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் (Indian Olympiad Qualifier in Junior Science - IOQJS) தேர்வு 9-1-2022 அன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையிலும், இயற்பியலுக்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் (Indian Olympiad Qualifier in Physics - IOQP) தேர்வு 16-1-2022 அன்று காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரையிலும், உயிரியலுக்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் (Indian Olympiad Qualifier in Biology (IOQB) தேர்வு 16-1-2022 அன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையிலும், வானியலுக்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் (Indian Olympiad Qualifier in Astronomy - IOQA) தேர்வு 23-1-2022 அன்று காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரையிலும், வேதியியலுக்கான இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் (Indian Olympiad Qualifier in Chemistry - IOQC) தேர்வு 23-1-2022 அன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையிலும் நடைபெறும். இத்தேர்வு அட்டவணை தற்காலிகமானது. நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, குறுகிய அறிவிப்பில் மாற்றம் செய்யப்படலாம்.

மேற்காணும் நாட்களில் முதல் பகுதித் தேர்வுக்கு 75 நிமிடங்களும், இரண்டாம் பகுதித் தேர்வுக்கு 120 நிமிடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் 15 நிமிடங்கள் இடைவெளி இருக்கும். இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வில் மாணவர்கள் விரும்பினால், முதல் பகுதித் தேர்வு முடிந்தவுடன் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். முதல் பகுதித் தேர்வு எழுதாதவர்கள் இரண்டாம் பகுதித் தேர்வு மட்டும் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டு பகுதித் தேர்வுகளுக்குப் பின்பு, தொடர்ச்சியான அடுத்த நிலைகளுக்கான திட்டம் குறித்தத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிலை

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வின் பாடத்திட்டங்கள் குறித்தத் தகவல்கள், அடுத்த நிலையான புத்தொளிப்பயிற்சி மற்றும் தேர்வு முகாம்களுக்கான தேர்வு முறைகள் (Orientation-cum-Selection Camps - OCSCs) குறித்த விளக்கம், தகுதிக்கான அளவுகோல் போன்றவைகள் குறித்தும் https://olympiads.hbcse.tifr.res.in/olympiads-2021-2022/science-olympiad-2021-2022/ எனும் இணைய முகவரியில் தரப்பட்டிருக்கிறது.

கணக்கு பாடம்
கணக்கு பாடம்

கூடுதல் தகவல்கள்

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் https://olympiads.hbcse.tifr.res.in/ அல்லது https://www.iapt.org.in/ அல்லது https://www.mtai.org.in/ ஆகிய இணைய முகவரிகளிலான தளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம். இந்த ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்கான தேசியத் தகுதித் தேர்வு (National Standard Examinations) எனப்படும் முதல்நிலைத் தேர்வு குறித்த தகவல்களுக்கு “Homi Bhabha Centre for Science Education, Tata Institute of Fundamental Research, V. N. Purav Marg, Mankhurd, Mumbai-400088” எனும் முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.

*********

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் கணிதம்

இந்திய ஒலிம்பியாட் தகுதியாளர் கணிதம் எழுதிட விரும்புபவர்கள், https://reg.ioqexam.in/ எனும் இணையதளத்தில் தனியாகப் பதிவு செய்து கொள்ளலாம். கணிதப் பாடத்திற்கான தகுதிகள், தேர்வு நாள் குறித்து அறிய https://www.mtai.org.in/ அல்லது https://olympiads.hbcse.tifr.res.in/olympiads-2021-2022/mathematical-olympiad-2021-2022/eligibility-criteria-for-indian-olympiad-qualifier-in-mathematics-ioqm-2021-2022/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.