Published:Updated:

``நாசாவுக்குப் போறேனே..!'' மதுரை டீக்கடைக்காரரின் மகள் தான்யா தஸ்னம்

மதுரை மாணவி, அறிவியல் தேர்வு எழுதி நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். டீக்கடை வைத்திருக்கும் அப்பா, தன் மகளைப் பற்றி கூறுகிறார்.

கல்வி மட்டுமே ஒருவரின் கனவுகளை நிறைவேற்றவைக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், மதுரைப் பள்ளி மாணவி தான்யா தஸ்னம். இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் ஒரு பெயரைச் சொல்லச் சொன்னால், 'அப்துல் கலாம்' என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு மிக எளிய பின்புலத்திலிருந்து படித்துவரும் ஒருவரால், எந்த உயரத்துக்கும் செல்ல முடியும் என்பதை, பள்ளி மாணவர்களிடம் கனவுகளை விதைத்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அவர் விதைத்ததில் பசுமையான விளைச்சல்தான் தான்யா.

தான்யா
தான்யா

அமெரிக்க நிறுவனம் நடத்திய அறிவியல் தேர்வில், இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்தவர், தான்யா தஸ்னம். தற்போது, மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவரால், எப்படி இந்திய அளவில் போட்டிபோட முடிந்தது; என்ன எழுதினார் உள்ளிட்ட கேள்விகளோடு, அவரின் தந்தை ஜாபர் உசேனைத் தொடர்புகொண்டோம்.

"மதுரை அழகர் கோயில் கடச்சனேந்தல்ல டீக்கடை வைச்சிருக்கேன். வீட்டுக்குப் பக்கத்துலயே கடை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு பத்தாவதும், ரெண்டாவது பொண்ணு அஞ்சாவதும் படிக்கிறாங்க. ரெண்டு பேருமே மதுரை மகாத்மா மாண்டிசோரி ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. தான்யாவுக்கு அறிவியல் தொடர்பான செய்திகள்னா தேடித்தேடி படிப்பா. இப்போ மட்டுமில்ல, அஞ்சாவது படிக்கும்போதிருந்தே வந்துடுச்சு. அப்துல் கலாம் பற்றி தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வமா இருப்பா. பெரிய சயின்டிஸ்ட்டாகணும்னு ஆசை. பள்ளிப் பாடங்களையும் நல்லா படிப்பா.

அப்பாவுடன் தான்யா
அப்பாவுடன் தான்யா

போன வருஷம் டிசம்பர் மாதம், ஸ்கூலுக்கு Go4guru என்ற அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் யாரேனும் ஒருவரைப் பற்றி 20 பக்க அளவில் கட்டுரை எழுதும் போட்டியைப் பற்றி சொல்லியிருக்காங்க. இயல்பாகவே, தான்யாவுக்கு அறிவியல் பிடிக்கும் என்பதால், உடனே சேர்ந்துட்டா. இந்தத் தேர்வு பற்றி இணையதளத்துலேயும் இருக்குனு சொன்னாங்க. அந்த நிறுவனம் கொடுத்திருந்த ஒரு வார காலத்துல அப்துல் கலாம் பற்றி நிறைய விஷயங்களைத் தேடிப் படிச்சா. 20 பக்கங்களுக்கு விரிவான கட்டுரையாக போட்டியில எழுதினா. ஸ்கூலும் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க.

இந்த போட்டித் தேர்வுல, இந்தியாவிலுள்ள 23 மாநிலங்களைச் சேர்ந்த 9,000-க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கிட்டாங்க. ஆனா, தான்யா ரொம்ப நம்பிக்கையோடு இருந்தா. அவ நம்பிக்கை பொய்யாகல. இந்திய அளவில் தேர்வான மூன்று பேரில், இவ பெயரும் இருந்துச்சு. அதிலேயும் முதலிடத்தைப் பிடிச்சிருந்தா. எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ரெண்டு மாதத்துக்கு முன் வந்து, தான்யா இந்தப் போட்டியில வென்றதுக்காக ஷீல்டு கொடுத்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வாரம் சென்னைக்கு வரச்சொல்லி, விண்வெளி வீரர் டான் ஜான்சென் முன்னிலையில அமெரிக்கா போறதுக்கான விமான டிக்கெட் கொடுத்தாங்க. சென்னையிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி, நாசாவுக்குப் போறாங்க. ஒன்பது நாள் பயணத்துல, மூன்று நாள் நாசாவுல இருக்கலாம். அப்பறம், அங்கே நடக்கும் தேர்வுல வெற்றி பெறும் ஐந்து பேருக்கு ஃப்ளோரிடா யுனிவர்சிட்டியில படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க.

தான்யா
தான்யா

தான்யாவுக்கு அறிவியலைப் போல மரமும் பிடிக்கும். சாலையோரத்துல இருக்கும் மரங்களை வெட்டினா, ரொம்ப வருத்தப்படுவா. அப்படி ஏதாவது மரத்தை வெட்டுறதைப் பார்த்துட்டா, வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் அதைப் பத்தியே பேசிட்டு இருப்பா. மரங்களை நிறைய வளர்க்கணும்னு சொல்லிட்டே இருப்பா. எதிர்காலத்துல அவ என்னவாகணும்னு நினைக்கிறாளோ, அதுக்கு நாங்க எந்தத் தடையும் சொல்லாம உதவியா இருப்போம். பசங்களோட ஆசையை நிறைவேத்துறதை விட வேற என்ன சந்தோஷம் இருக்கு?" என்றார் நிறைவாக.

இயற்கையையும் அறிவியலையும் ஒருசேர நேசிக்கும் குணம் வாய்ப்பது அரிது. தான்யாவுக்கு அக்குணம் இயல்பாகக் கிடைத்திருக்கிறது. அறிவியலின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளைக் கண்டறிவார் என்று நம்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு