"குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி 100 சதவிகிதம் நிறைவு பெற்றது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்" என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ராக்கெட் ஏவுதளத்திற்கு ஏற்ற இடம் என்பது நிலநடுக்கோட்டுப் பகுதிதான். ஸ்ரீஹரிகோட்டா, நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. இந்த நெருக்கத்தால் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் சுற்றுப்பாதையின் தொலைவு குறையும். எரிபொருள் தேவையும் குறையும். வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசையில் இருந்து ஏவும்போது திசை திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை.

இங்கிருந்து தெற்கு, கிழக்குத்திசை நோக்கியும் ராக்கெட்டுகளை ஏவ முடியும். ராக்கெட்டின் உதிரி பாகங்கள், நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, சோதனை செய்து சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல, கிரையோசெனிக் இஞ்ஜினின் எரிப்பொருளான திரவ ஹைட்ரஜனும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இம்மையம், குலசேகரப்பட்டினத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளதால் போக்குவரத்துச் செலவுகளும் குறையும்.
இதேபோல ராக்கெட் உதிரிபாகத் தொழிற்சாலை அமைப்பதற்காக 1,500 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. கூடுதலாக நிலம் கேட்கப்பட்டதன் அடிப்படையில் 2,233 ஏக்கர் நிலம் வேண்டுமென கேட்கப்பட்டது. இதற்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 8 தாசில்தார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணி 100 சதவிகிதம் நிறைவு பெற்றது.
குலசேகரன்பட்டினம் அருகே கூடல் நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்தினை இஸ்ரோ தலைவர் சோமநாத் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய விஞ்ஞானிகள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க சிறந்த இடம். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 100 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. ஆய்வு மேற்கொண்டதில் தனக்கு முழு திருப்தி உள்ளது. பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக அரசின் அனுமதிக்காகக் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன, விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். சிறிய ரக ராக்கெட் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு ஏவப்படும். செப்டம்பர் மாதத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புதிய ராக்கெட் ஏவப்பட உள்ளது" எனக் கூறினார்.