Published:Updated:

DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

Published:Updated:
DNA டெஸ்ட் பாதுகாப்பானதா...நம் DNA தகவல்கள் வெளியே கசிந்தால் என்ன நடக்கும்?

1912-ம் ஆண்டு. டன்பர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயதேயான பாபி டன்பர் (Bobby Dunbar) என்ற சிறுவன் மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் காணாமல் போகிறான். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவனைத் தேடி கண்டுபிடிக்கிறார்கள். அவன் குடும்பத்தில் ஒப்படைக்கப்படுகிறான். அவர்கள் சந்தோசமடைய வேண்டிய தருணத்தில் ஒரு பிரச்னை தலைதூக்குகிறது. வேறொரு பெண், அந்தச் சிறுவனை தன் மகன் என்று கூறி போராடுகிறார். வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்ல, தொடர்ந்து செலவு செய்து போராட முடியாத தாய் தன் போராட்டத்தைக் கைவிடுகிறார். பாபி டன்பராகவே அந்தச் சிறுவன் வளர்க்கப்படுகிறான். 1966-ம் ஆண்டு அவர் இறந்தவுடன், அவரின் பேத்திகளில் ஒருவரான மார்கரெட் டன்பர் கட்ரைட் (Margaret Dunbar Cutright) இந்தச் சர்ச்சையை மீண்டும் கையில் எடுக்கிறார். பாபி டன்பராக வளர்ந்த சிறுவனின் மகனுக்கு (அவளின் தந்தைக்கு) DNA பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவரின் DNA-விற்கும் டன்பர் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென உறுதி செய்யப்படுகிறது. அதாவது நான்கு வயதில் மீட்கப்பட்ட குழந்தை பாபி டன்பரே கிடையாது! உண்மையான டன்பர் என்னவானான் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இது வெறும் சாம்பிள்தான். இதுபோல எண்ணற்ற சிக்கலான, வினோதமான வழக்குகளுக்கு DNA டெஸ்ட் (பரிசோதனை) விடை அளித்துள்ளது. 

DNA டெஸ்ட் எனும் இந்த மருத்துவப் பரிசோதனை குறித்து அடிக்கடி செய்திகளிலும், நாம் பார்க்கும் படங்களிலும் வருவது உண்டு. சமீபத்தில் வெளியான நாச்சியார் படத்தில் கூட, DNA டெஸ்ட் வைத்துத்தான் பெரியதோர் முடிச்சே அவிழ்க்கப்படும். அது என்ன DNA டெஸ்ட்? அது எப்படி, எதற்காகவெல்லாம் செய்யப்படுகிறது? அதன் மூலம் சேமிக்கப்படும் தகவல்கள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை? அவை கசிவதால் என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

DNA டெஸ்ட் என்பது முக்கியமாக நான்கு விஷயங்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது.

பெற்றோர் பரிசோதனை (Parental testing): சர்ச்சையான பிரச்னைகளில், இந்தக் குழந்தைக்கு இவர்தான் பெற்றோர் என்பதை உறுதி செய்யலாம். 

தடயவியல் பரிசோதனை (Forensic testing): சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை இந்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பார்கள்.

மரபணு சிகிச்சை (Gene therapy): பெற்றோர் அல்லது குழந்தையின் மரபணு நிலைகள் மற்றும் பிறப்புக் குறைபாடுகளைக் கண்டறிய இதைச் செய்யலாம்.

மரபுவழி மரபியல் (Genetic genealogy): ஒருவரின் வம்சாவளி குறித்து ஆராய்வதற்குச் செய்யப்படுகிறது.

DNA பரிசோதனை என்றால் என்ன?

DNA மூலக்கூறுகள் இதில் பரிசோதிக்கப்படுகின்றன. இதில்தான் ஓர் உயிரின் மொத்த மரபணு குறியீடுகளும் அடங்கியுள்ளன. இதுதான் நம் கண் நிறத்திலிருந்து, நம் குணாதிசயங்கள் வரை அனைத்தையும் தீர்மானிக்கிறது. நம் உடம்பில் இருக்கும் அனைத்து செல்களிலும், தலைமுடி தொடங்கி அடிபாதத்திலுள்ள தோல் வரை அனைத்திலும் DNA-வின் முழுமையான தொகுப்பு நிச்சயம் இருக்கும். பொதுவாக, அனைத்து மனிதர்களுக்கும் 99.9% DNA ஒற்றுமை இருக்கும். மீதமிருக்கும் 0.1% DNA-வில் மட்டும்தான் வேறுபாடுகளை உணர முடியும். இதை மருத்துவத் துறையில் மரபணு மார்க்கர்கள் (Genetic Markers) என்கிறார்கள். இதைக் கண்டறியத்தான் DNA பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் மற்றொருவருக்கு உறவா இல்லையா என்பதைச் சுலபமாக கண்டறிந்துவிட முடியும். பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளில், இந்த மரபணு குறியீட்டைக் கண்டறிவதில்தான் இருக்கிறது பரிசோதனை செய்பவரின் திறமை.

மரபணு தகவல்கள் வெளியே வரலாமா?

DNA பரிசோதனை செய்தால் பல தகவல்களை அறிய முடியும்தான். ஆனால், ஓர் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ந்து உணரப்படும் முடிவுகளும், உங்கள் உடல் குறித்த தரவுகளும், நிச்சயம் கம்ப்யூட்டர் உதவியில்லாமல், தொழில்நுட்பம் இல்லாமல் பெற இயலாதவை. அதைப் பெற, உங்கள் DNA குறித்த தகவல்கள் நிச்சயம் சர்வர்களில் பதியப்படும். அது வெளியே கசிந்தால் உங்களைப் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளியே வந்து விடுமே? அதனால் ஆபத்து ஏற்படுமா? 

ஏற்கெனவே நம் ATM PIN நம்பரில் இருந்து, பேங்க் பாஸ்வேர்ட், ஆதார் தகவல்கள் வரை அனைத்துமே ஆன்லைனில் ஏதோவொரு வகையில் பதியப்படுகின்றன. அது அவ்வப்போது வெளியே கசிய, அதைப் பாதுகாப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. இவ்வளவு ஏன், நம் ஃபேஸ்புக் பாஸ்வேர்டையே நாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், நம் DNA குறித்த தகவல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை? அதை வெளியே ஏதோ ஓர் ஆய்வகத்தில் வெளிப்படுத்துவது சரியான ஒன்றா? அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? உதாரணத்திற்கு ஏதோ ஓர் கிரிமினல் வழக்கில், குற்றம் நடந்த இடத்தில், நீங்கள் என்றோ ஆய்வகத்தில் சமர்ப்பித்த உங்கள் DNA-வைக் கிடைக்கும்படி செய்துவிட்டால் என்னவாகும்? அந்தக் குற்றத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையென நிரூபிக்கவே ஓர் ஆயுள் வேண்டும்.

உடனே, இது குறித்து எதுவும் பயப்படத் தேவையில்லை. உண்மையில், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஓர் ஆய்வகம், தங்கள் ஆராய்ச்சிக்காக உங்கள் DNA-வில் வெறும் 0.02% DNA-வை மட்டுமே எடுக்கிறது. அதை வைத்து அவர்களால் ஆராய்ச்சி செய்யமுடியுமே தவிர, உங்களைப் போன்று ஒரு க்ளோன் உருவாக்கவோ, ஒரு கொலை நடந்த இடத்தில் அதைச் சிதற விடவோ முடியாது. ஆனால், உங்கள் மொத்த மரபணு தகவல்களையும் வைத்து, சரியான கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள், உங்கள் குணாதிசியம் இதுதான் என்பதைக் கண்டறிய முடியும். அப்படிப்பட்ட தகவல்கள் வெளியே கசியா வண்ணம் பாதுகாப்பதுதான் ஆய்வகங்களின் கடமை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னொருபுறம், உங்கள் மரபணு தகவல்கள் கொண்டு உங்களுக்கு இருக்கும் உடல் நலப் பிரச்னைகளை அறிந்துகொள்ள முடியும். எனவே, அது டேட்டாவாக பெருநிறுவனங்களுக்கு விற்கப்பட்டால், அதை வைத்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, இதற்கு எங்களிடம் தீர்வு இருக்கிறது என்கிற ரீதியில்கூட உங்களை மையப்படுத்தி அவர்கள் விளம்பரம் செய்ய நேரிடலாம். உதாரணமாக, முதுகுவலி களிம்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, முதுகுவலி அடிக்கடி ஏற்படும் நபர்களின் தரவுகளை ஒரு DNA பரிசோதனை கூடத்திலிருந்து பெற முடியும். அதை வைத்து அவர்களுக்கு அந்த நிறுவனம் தங்கள் முதுகுவலி களிம்பு குறித்த விளம்பரங்களைப் பிரத்யேகமாகக் காட்ட முடியும். பெரு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் குறித்த மரபணு தகவல்களைப் பெற முடியும். உங்களுக்கு ஒரு வியாதி இருப்பது உங்கள் மரபணு தகவல்கள் மூலம், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உங்கள் காப்பீட்டிற்கு மறுப்புத் தெரிவிக்கலாம். இவ்வாறு நாம் சாத்தியக் கூறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு பாசிட்டிவான கோணத்தில் இதைப் பார்த்தால், இது அந்த அளவிற்குப் பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். மரபணுத் தகவல்கள் என்பது நம் பெருவிரல் ரேகை போலத்தான். ஒன்றுபோல் இருக்காது. அந்த ரேகையை வைத்து நம்மை அடையாளம் காண முடியும். அதற்காக நம் பெருவிரலை நாம் எங்கேயும் பதிவதில்லையா என்ன? ஆதார் உட்பட பல்வேறு விஷயங்களுக்குப் பெருவிரல் ரேகை அவசியம். அது வெளியே கசிந்தால் பிரச்னை இல்லையா என்ன? அதைத் தவறாக யாரேனும் உபயோகப்படுத்தலாம் அல்லவா? எனவே, DNA பரிசோதனையில், மரபணு தகவல்கள் வெளியே வருவது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.