Published:Updated:

``இவன் நினைப்பது அவனுக்குத் தெரியும்!" - இரட்டையர்களின் திகிலூட்டும் டெலிபதி உண்மையா? #TwinTelepathy

``இவன் நினைப்பது அவனுக்குத் தெரியும்!" - இரட்டையர்களின் திகிலூட்டும் டெலிபதி உண்மையா? #TwinTelepathy
``இவன் நினைப்பது அவனுக்குத் தெரியும்!" - இரட்டையர்களின் திகிலூட்டும் டெலிபதி உண்மையா? #TwinTelepathy

பதின்வயது ஆங்கிலப் பெண்ணான ஜெம்மா ஹக்டன் ( Gemma Houghton) அன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டாள். ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக அவள் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. இருந்தும் அது என்னவென்று முழுமையாக அவளுக்குப் புலப்படவில்லை. சில நிமிட யோசனைக்குப் பிறகு அவளின் இரட்டைச் சகோதரியான லீயன்னெவின் ( Leanne Houghton) முகம் அவள் மனதில் தோன்றி மறைந்திருக்கிறது. உடனே, தன்னுடன் பிறந்த இரட்டைச் சகோதரியான அவளுக்கு ஏதோ ஓர் ஆபத்து என்று அவளுக்குப் பொறி தட்டியிருக்கிறது. மாடியில் அவளின் அறைக்கு ஓடியிருக்கிறாள். அங்கே, குளியலறை டப்பில் அரை மயக்க நிலையில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். சரியான நேரத்தில் தன் சகோதரியை வெளியே இழுத்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரவைத்து, உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள் ஜெம்மா. இது 2009-ம் ஆண்டு டெலிக்ராஃப் தளத்தில் வெளியான செய்தி. இது ஓர் உதாரணம் மட்டுமே. இரட்டைப் பிறவிகள் பலர் இது போல தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை நிறைய முறை விவரித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Twin Telepathy அதாவது இரட்டையர்களின் டெலிபதி என்கிறார்கள்.

சென்ற வருடம், ஓர் ஆங்கிலப் பொழுதுபோக்கு தளமொன்று தங்கள் வாசகர்களில் யாரேனும் இரட்டைப் பிறவிகள் இருந்தால், தங்களுக்கு நேர்ந்த டெலிபதி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதற்கு வாசகர்கள் பதிவிட்ட சம்பவங்கள் அனைத்தும் திகிலூட்டுபவை! ஒரே நாளில் ஒரே கனவை பகிர்ந்து கொள்வது, வெளியே சென்ற தம்பிக்கு விபத்து என்று சொல்லாமலே தெரிந்து கொண்டது; ஒருவர் காலில் டேட்டூ இட்டுக்கொள்ள அது காயமான பின், மற்றொருவருக்கும் அதே இடத்தில் இரத்தக் காயம் ஏற்பட்டது; ஒருவருக்குக் காய்ச்சல் வந்தும் அதற்கான அறிகுறிகளே இல்லாமல் இருக்க, மற்றொருவர் காய்ச்சல் இல்லாவிட்டாலும் அதற்கான அறிகுறிகளுடன் படுத்துக்கிடந்தது; ஒரே க்ரீட்டிங் கார்டை இருவரும் அன்னையர் தினத்தன்று, அம்மாவிற்காகத் தேர்ந்தெடுத்தது என அந்தப் பட்டியல் நீள்கிறது. இந்த ஒவ்வோர் அனுபவமும் முன்னிறுத்தும் விஷயம் ஒன்றுதான். இரட்டையர்கள் வெவ்வேறு மனிதர்கள் என்றாலும், அவர்களின் உணர்வுகள் எப்போதும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றொருவன் என்ன முடிவு எடுப்பான் என அறிந்துகொள்ள கூடிய அளவுக்கு அவர்கள் இடையே இந்த டெலிபதி உணர்வு இருப்பதாகப் பலருடைய அனுபவங்கள் நமக்குக் கூறுகின்றன. அதிலும் ஒரே தோற்றமுடைய இரட்டையர்கள் என்றால் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு சிலரின் கருத்து.

1844-ம் ஆண்டு, புகழ்பெற்ற எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டுமாஸ் ( AlexanderDumas), தி கார்சிகன் பிரதர்ஸ் ( The Corsican Brothers) என்ற புதினத்தை வெளியிட்டார். இது ஓட்டிப் பிறந்து பின்னர் பிரிக்கப்பட்ட இரட்டைச் சகோதரர்களின் கதை. இதில் ஒருவரின் எண்ணங்களை மற்றொருவர் சொல்லாமலே புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் ஒருவரின் வலியை இன்னொருவர் உணருவது எனக் கதை அமைத்திருப்பார், இது ஒரு கற்பனைக் கதைதான் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் இந்த இரட்டையர்களின் டெலிபதி என்பது மிகவும் பேசப்பட்ட ஒரு மரபு ஆராய்ச்சி! சரி, இதற்கு மருத்துவ அறிவியல் என்ன விளக்கமளிக்கிறது?

இரட்டையர்கள் என்றாலே எப்போதும் ஒருவித ஆச்சர்யம் நமக்குத் தொற்றிக்கொள்ளும். அதிலும் ஒரே தோற்றம் கொண்டவர்கள் என்றால் அவ்வளவுதான். எங்கேனும் பொது இடங்களில் அவர்களைப் பார்த்தால்கூட, ஒரு நிமிடம் நின்று கவனித்து, ஆச்சர்யப்பட்டுவிட்டுதான் நகர்வோம். திரைப்படத்தில்கூட ஒரு கதாபாத்திரம் டபுள் ஆக்ஷன் என்றால், அந்தப் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். இப்படி ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்களை Identical Twins அல்லது Monozygotic Twins என்கிறார்கள். இவர்கள் ஒரே கருமுட்டையில் ( Zygote) இருந்து தோன்றிய இரு கருக்கள் ( Embryo).இவர்களின் தோற்றம் ஒரே அச்சில் வார்த்தது போல ஒன்று போலவே இருக்கும். இவர்களின் பாலினம் மாறுபடாது. இவர்கள் ஆண் அல்லது பெண் இரட்டையர்களாக மட்டுமே இருப்பார்கள். மற்றொரு வகையான இரட்டையர்களை Fracternal அல்லது Non-Identical Twins என்கிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளும் ஒரே பாலினமாகவும் இருக்கலாம், மாறுபட்டும் இருக்கலாம். காரணம், இவர்கள் வெவ்வேறு கருமுட்டையிலிருந்து அவதரித்தவர்கள். ஆனால், இவர்களின் உருவம் நிச்சயம் ஒன்றுபோல இருக்காது.

பொதுவாக, இரட்டைப் பிறவிகள் என்னும் போது அவர்களுக்கு மரபணு மற்றும் DNA ஒற்றுமை அதிகம் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அவர்கள் வாழும் விதம், வளர்க்கப்படும் விதம், உடுத்தும் உடை, படிக்கும் பள்ளி, வகுப்பு என ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பலருக்கு நண்பர்கள் கூட ஒரே மாதிரி அமையலாம். இவ்வகைச் சூழல் இரட்டையர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண சகோதர சகோதரிகளுக்குக் கூட அமையலாம்தான். ஆனால், அங்கே வயது வித்தியாசம் ஒரு பெரிய இடைவெளியாக இருக்கும். இங்கே இரட்டையர்கள், ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது, ஒரே பொம்மை வேண்டுமென அடம் பிடிப்பது, ஒற்றுமையாக எல்லா இடத்திற்கும் சென்று வருவது என அதகளம் செய்வார்கள். சில சமயம், ஒருவர் சொல்ல வருவதை, மற்றொருவர் சொல்லி முடிக்கும் ஆச்சர்யங்கள் எல்லாம் நிகழலாம். இதையும் தாண்டி அவர்கள் உணர்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போலவும், இருவருக்கும் சொல்லப்படாத டெலிபதி இணைப்பு ஒன்று இருப்பது போலவும் தோன்றும். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இருப்பதாக அறிவியல் பூர்வமாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இன்றளவில் அது ஓர் அமானுஷ்யம் கலந்த போலி விஷயமாக ( Pseudoscience) மட்டுமே பார்க்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, மேலே படித்த ஹக்டன் சகோதரிகளின் கதையை எடுத்துக் கொள்வோம். சம்பவம் நடந்தபோது இருவரும் தங்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அப்போது ஏதோ ஓர் ஆபத்து என்று ஜெம்மாவிற்கு தோன்றுகிறது. அது என்ன என்ன என்று மீண்டும் மீண்டும் யோசிக்கும் பொழுதுதான், லீயன்னெவின் எண்ணமே அவளுக்குத் தோன்றியிருக்கிறது. இவ்வகை எண்ணங்களை உளவியல்படி பகுப்பாய்வு செய்தால்...

``ஒரு சில நேரங்களில் அதீத உணர்வுகளால் உந்தப்பட்டு நிற்கும்போது. நம் எண்ண ஓட்டங்கள் சொல்ல வரும் விஷயத்தை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. காரணம், அவற்றை ப்ராசெஸ் செய்யும் அளவிற்கு நம் மூளைக்கு நேரம் இல்லை. அதாவது, ஒரு கொடூரமான பயம் ஒரு விஷயத்தால் ஏற்படுகிறது என்றால், அந்த விஷயம் என்னவென்று கிரகித்துக்கொள்ளும் முன்னரே மூளை பய உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்திருக்கும். பயம் உண்டான பின்பு அதை எப்படிப் போக்குவது என்ற சிந்தனையே மேலோங்குவதால் அதற்கான காரணம் நமக்குப் பெரிதாகத் தோன்றுவதில்லை. இந்தச் சம்பவத்தில் லீயன்னெவிற்கு முன்னரே அடிக்கடி வலிப்பு வந்ததாகக் கூறுகிறார்கள். ஜெம்மாவின் மூளை ஒருவித படபடப்பான நிலைக்குச் செல்ல, திடீரென தோன்றிய பயமே காரணம். இந்தப் பயம் உருவாக, லீயன்னெவை பல நேரம் காணாத நிலை காரணமாக இருக்கலாம். அது ஜெம்மாவின் மூளையை எட்டும் முன்பே, பயம் ஆட்கொண்டதால், உண்மை நிலை அவளுக்குப் புரிய, சில நிமிடங்கள் ஆகியிருக்கிறது. அவ்வளவே!

PC: MEN

இது இயல்பாகவே, நம் எல்லோருக்கும் தோன்றும் எண்ணங்கள் போலத்தான். ``கடைக்குச் சென்ற அம்மா ஏன் இன்னும் வரவில்லை?" , ``அப்பா இன்று வர ஏன் இவ்வளவு தாமதம்?" என்பது போன்ற எண்ணங்களின் வெளிப்பாடுதான் இதுவும். இப்படி நாம் எண்ணும் போது, ஏதோ ஒரு நாள், அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ ஏதோ ஒரு சிறு விபத்து ஏற்பட்டுவிட, உடனே எனக்கு உள்ளுணர்வு சொல்லியது. எனக்கும் அம்மாவிற்கும் டெலிபதி தொடர்பு இருக்கிறது என்று கூரிவிடுவோமா என்ன? யதேச்சையாக நடந்த சம்பவம் என்று கடந்துவிட மாட்டோம்? ஆனால், அத்தகைய சம்பவம் இங்கே இரட்டையர்கள் இடையே ஏற்படுவதால், அதனால் மட்டுமே பூதாகரம் ஆக்கப்பட்டு, பெரிதாகப் பேசப்படுகிறது. ஒரே வீட்டில் ஒன்றுபோல வளர்க்கப்பட்டவர்களின் எண்ண ஓட்டங்கள், எடுக்கும் முடிவுகள் ஒன்றுபோல இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? பல காலம் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகள் இடையேகூட அவ்வகை ஒற்றுமை இருக்கும். இத்தகைய சம்பவங்களும் கொட்டிக் கிடக்கும். இது அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்குக்கூடப் பொருந்தும்.

ஒரு சம்பவம் எப்படிப்பட்டது என்றால் அது பரபரப்பாகப் பேசப்படும்? அது இதுவரை நடக்காத ஒன்றாக, ஆச்சர்யப்படுத்தும் விதமான ஒன்றாக இருக்க வேண்டும். இரட்டையர்கள் அடுத்தடுத்த நாளில் மரணித்தார்கள் என்றால் அந்தச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும். அவர்கள் இடையே ஒரு மாயத் தொடர்பு இருந்ததாகக் கூறுவார்கள். ஆனால், ஒருவர் இறந்து பல வருடங்கள் கழித்து இறந்த இரட்டையர்களின் கதைகள் ஆயிரம் இருக்கும். அது ஒரு பெரிய விஷயமாகவே படாது. இவ்வகை சம்பவங்கள் யதேச்சையாக நடக்கும் ஒன்றாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. காரணம், இந்த உலகில் தற்போது நூறு மில்லியன்களுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இத்தகைய அமானுஷ்ய சம்பவங்கள் தங்களுக்கு நடந்ததாகக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதை வைத்து அறிவியல் ரீதியாக ஒரு முடிவை நாம் எட்டவே முடியாது.

இரட்டையர்கள் என்பதற்காகவோ அல்லது சகோதர-சகோதரி என்பதற்காகவோ அவர்களை ஒன்றுபோலவே வளர்க்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவம் உண்டு என்று நாம் உணர்ந்து செயல்பட வேண்டும், அண்ணன் போலவே செய், உன் இரட்டைச் சகோதரி போலவே செய் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அது சரி, உங்களுக்குத் தெரிந்த இரட்டையர்களின் வாழ்வில் இத்தகையச் சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அதைப் பதிவு செய்யுங்களேன்!