Published:Updated:

உங்களை நீங்களே குளோனிங் செய்தால் அந்த குளோன் எப்படி இருப்பான்... என்ன செய்வான்?

உங்கள் குளோன் நீங்கள் நினைத்தது போல இருக்கவும் மாட்டார். இங்கேயும் கரு உருவாகி, அது வளர்ந்து... என எல்லாமே இயல்பாகத்தான் நடக்கும். குளோனிங் ஒன்றும் ஏதோ மாயவித்தை கிடையாது.

உங்களை நீங்களே குளோனிங் செய்தால் அந்த குளோன் எப்படி இருப்பான்... என்ன செய்வான்?
உங்களை நீங்களே குளோனிங் செய்தால் அந்த குளோன் எப்படி இருப்பான்... என்ன செய்வான்?

யக்குநர் ஷங்கரின் 'ஜீன்ஸ்' திரைப்படம் வந்திருந்த சமயம். அப்போதைய காலகட்டத்தில், இரட்டை வேடப் படங்கள் அதிகம் வந்தாலும், ஜீன்ஸ் சற்றே மாறுபட்டு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், இரண்டு பிரசாந்த்களும் அச்சில் வார்த்தது போல எல்லாக் காட்சிகளிலும் ஒரே உடை, ஒரே உடல் மொழி. அதுவும் இருவரும் ஒன்றாகத் தொடரும் காட்சிகளில் எல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்று நமக்குத் தெரியவே தெரியாது. அந்த அளவு தத்ரூபம். அதே காலகட்டத்தில்தான் குளோனிங் குறித்த செய்திகளும் நிறைய வந்தன. உடனே, பிரசாந்தை ஷங்கர் குளோனிங் செய்து விட்டார் எனப் புரளிகள். அதுவும் நான் படித்த பள்ளியில் இஷ்டத்துக்கு ரீல் சுற்றினார்கள். ஆனால், குளோனிங் அவ்வளவு சுலபமா என்ன?

குளோனிங்... இந்த வார்த்தையைப் படித்தவுடன் நமக்குள் தோன்றும் பிம்பம் நிச்சயம் ஏதோ ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றிய நாயகனாகத்தான் இருக்கும். அது மட்டுமின்றி, நம்மைக் கொண்டு உருவாக்கப்பட்ட குளோனிங் நம்மைப் போலவே செயல்படும் என்றெல்லாம் எண்ணங்கள் நமக்கு கற்பனை விரியும். ஆனால், உண்மையில் குளோன் என்பது படங்களில் காட்டப்படுவது போல நடப்பது கிடையாது. உங்கள் குளோன் நீங்கள் நினைத்தது போல இருக்கவும் மாட்டார். இங்கேயும் கரு உருவாகி, அது வளர்ந்து... என எல்லாமே இயல்பாகத்தான் நடக்கும். குளோனிங் ஒன்றும் மாயவித்தை கிடையாது. அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், பெரும்பாலான குளோனிங் ஆராய்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது என்று தெரிந்துகொள்வோம்.

கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) கொண்டுதான் குளோனிங் செய்யப்படுகிறது. ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்சைமுறை குளோனிங் (Therapeutic Cloning) என்று மூன்று வகைகளில் குளோனிங் செய்கிறார்கள். இதில் வெறும் ஜீன்களையும், DNA கூறுகளையும் பிரதி எடுக்கும் முறை ஜீன் குளோனிங். ஒரு முழு மிருகத்தை அப்படியே பிரதி எடுப்பது இனப்பெருக்க குளோனிங். சிகிச்சைமுறை குளோனிங் மற்றும் சற்றே வேறுபட்டு ஓர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைமுறையாக இருக்கிறது. இதில் இனப்பெருக்க குளோனிங் முறை கொண்டு டாலி என்னும் செம்மறி ஆட்டைத் தவிர காப்பிகேட் என்றழைக்கப்படும் பூனை, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய், சமீபத்தில் இரண்டு குரங்குகள் என குளோன்கள் உருவாக்கி மனிதன் பல மைல்கற்களை தொட்டுக்கொண்டே இருக்கிறான். 

இது எப்படி நிகழ்கிறது?

குளோனிங் செய்யப்படவேண்டிய மிருகத்திலிருந்து இரண்டு செல்களை எடுத்துக்கொள்வார்கள். ஒன்று முதிர்ந்த சீமாடிக் உயிரணு (Matured Somatic Cell) மற்றொன்று DNA கூறுகள் நீக்கப்பட்ட முட்டைச் செல் (DNA removed Egg Cell). இதில் சீமாடிக் உயிரணுவில் இருக்கும் DNA கூறுகளை முட்டைச் செல்லுக்குள் செலுத்தி மரபணு ஒத்த தாய் மிருகம் ஒன்றினுள் உட்பொருத்திவிடுவார்கள். அது உருவாக்கும் குட்டி, இரண்டு செல்களைத் தானமளித்த மிருகத்தைப் போன்றே இருக்கும்.

மனிதனை குளோனிங் செய்தால் எப்படி இருப்பான்?

வெற்றி சதவிகிதம் குறைவு (1.6%) என்றாலும், குரங்கு வரைக்கும் வந்தாயிற்று. அடுத்து மனிதன்தானே?  இதே சீமாடிக் உயிரணு முறைப்படி மனிதனை குளோன் செய்யலாம். அப்படிச் செய்துவிட்டால் உங்களைக் கொண்டு குளோனிங் செய்யப்பட்ட மனிதன் எப்படி இருப்பான்? உதாரணத்துக்கு, நீங்கள் 5 அடி 2 அங்குலம் இருப்பதாக எடுத்துக்கொண்டால், உங்கள் குளோன் குழந்தையாக பிறந்து வளர்ந்தவுடன் அதே போலவே இருப்பார் என்று நீங்கள் நினைத்தால்... அதுதான் இல்லை. அவருக்கும் உங்களுக்கும் மரபணு ஒற்றுமை இருக்குமே தவிர, உருவ ஒற்றுமையோ, குணநலன்களில் ஒற்றுமையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பல மிருகங்கள் நோய்களைச் சுலபமாக தருவித்துக் கொள்கின்றன. பாதிப்படைந்த மூளை, இதயம், சிறுநீரகம், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நிலை என இந்தப் பட்டியல் நீள்கிறது. அதேபோல் மற்றுமொரு மிகப்பெரிய பிரச்னை, உங்கள் குளோனிற்கு இயல்பை மீறி வேகமாக வயதாகி விடும். அவரின் செல்கள் சீக்கிரம் வயதான ஒன்றாக ஆகி தளர்ந்து விடும். இதனால் உங்கள் குளோனின் ஆயுள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

எல்லாம் சரி, மரபணுதான் ஒன்றாகே இருக்கிறதே? அப்போது குணாதிசயங்கள்? 

இங்கேதான் நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். குணாதிசயங்கள் என்பவை மரபணுவோடு தொடர்பு உடையவை என்றாலும், நாம் வளரும் சூழல் மற்றும் சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம் குணநலன்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாற்றங்களை உண்டாக்கும். எனவே, நீங்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலைக்கும் உங்கள் குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதே சூழ்நிலை உங்களுடைய குளோனிற்கும் கிடைக்குமா என்றால் நிச்சயமாக கிடையாது. எனவே, உங்கள் குளோன் உங்களிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதனாகவே இருப்பான்.