Election bannerElection banner
Published:Updated:

"பிரேக் அப்-க்கு கவலை வேண்டாம்!” - வழிகாட்டும் மனோவியல் ஆராய்ச்சி

"பிரேக் அப்-க்கு கவலை வேண்டாம்!” - வழிகாட்டும் மனோவியல் ஆராய்ச்சி
"பிரேக் அப்-க்கு கவலை வேண்டாம்!” - வழிகாட்டும் மனோவியல் ஆராய்ச்சி

அந்தக் கடலைகளை மென்றுகொண்டிருக்கும் மனம் திடீரென்று பிரியும் சமயத்தில் நடந்த நிகழ்வுகளுக்குள் கொண்டுசென்று பதட்டத்துக்கு ஆளாக்கி இறுதியில் சோர்வாக்கி நிம்மதி என்றால் எந்தக் கடையில விக்குதுன்னு கேட்கும் அளவுக்கு நம்மை சோகக் கடலுக்குள் மூழ்கடித்துவிடும்.

மது வாழ்வில் எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்து "இதுவும் கடந்து போகும்" என்று நினைத்ததைப் போல் அவ்வளவு எளிதில் காதலும் கடந்து போவதில்லை.பிரேக் அப் ஆனால் அதைக் கடப்பதற்குள் நாம் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவளைப்/அவனைப் பற்றி நினைக்காமல் இருக்கமாட்டேனென்று நமது மனம் அவ்வளவு அடம்பிடிக்கும். அதனால் ஏற்படும் அழுத்தங்களைச் சகிக்கமுடியாமல் இருக்கும் சமயத்தில் தான் நமது நண்பன் "மச்சா என் ஆளு ஓகே சொல்லிட்டாடா" என்கிற செய்தியைச் சந்தோஷமாகச் சொல்லி வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சிட்டு ஜாலியா அவன் ஆளோட வேர்க்கடலை சாப்பிட மெரினா பீச்சுக்குப் போயிடுவான். அந்த நேரத்துல நமது முன்னாள் காதலியோடு நாம் போட்ட கடலையெல்லாம் ஞாபகம் வந்து மதியவேளைக் கடற்கரையைவிட அதிகமாக நமது மனற்கரை வேகத் தொடங்கிடும். அந்தக் கடலைகளை மென்றுகொண்டிருக்கும் மனம் திடீரென்று பிரியும் சமயத்தில் நடந்த நிகழ்வுகளுக்குள் கொண்டுசென்று பதட்டத்திற்கு ஆளாக்கி இறுதியில் சோர்வாக்கி ’நிம்மதி என்றால் எந்தக் கடையில விக்குதுன்னு’ கேட்கும் அளவுக்கு நம்மை சோகக் கடலுக்குள் மூழ்கடித்துவிடும். இத்தனை போராட்டங்களைச் சந்தித்து மனதைச் சமாதானப்படுத்தவே விடிந்து விடும். அப்புறம் எங்க தூங்குறது? அதனால் தூக்கமின்மை பிரச்னையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்குவோம். இதுபோக பசியின்மை வேற. அத மட்டும் அப்படியே விட்டுறுவோம் (சோகமா இருக்கப்பதான் அதிகமா சாப்பிடுற நண்பர்களும் இருக்காங்களே, அதான்).

இந்த மாதிரியான மன உளைச்சல்களால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைப் போக்க என்ன வழி என்று மனோதத்துவ அறிவியல் ரீதியாக ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள். 20 முதல் 37 வயதுக்குள் இருக்கும் 24 பேரைக் கொண்டு மிசோரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மனோவியல் பேராசிரியர் செயின்ட் லூயிஸ் ஓர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு தொடங்குவதற்கு முன் பங்கேற்பாளார்களுக்கு லூயிஸ் மூன்று மனோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார். ஆய்வின்போது அவர் சொன்ன பயிற்சிகளைச் செய்யவேண்டும். அதை லூயிஸ் தனித்தனி நபர்களாகக் கவனித்து அவர்களின் உணர்ச்சிகளை மூளை மின் வரைபடம் (Electro Encephalogram) என்ற கருவியின் மூலமாகப் பதிவு செய்வார்.

அவர்கள் தங்கள் முன்னாள் துணையின் குறைகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கவேண்டும். உதாரணமாக, அவர் உங்களோடு பழகிய காலகட்டங்களில் சிறுசிறு விஷயங்களுக்குக்கூட வாக்குவாதங்களைக் கிளப்பிவிட்டு உங்கள் விளக்கங்களையும் ஏற்காமல் நிம்மதியைக் குலைக்கும் வண்ணம் சண்டை போட்டிருக்கலாம். இப்போது அவர்கள் அந்த மாதிரியான நிகழ்வுகளைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கவேண்டும். அப்படியான நிகழ்வுகளைச் சிந்திக்கும்போது "அவர் அப்படியெல்லாம் செய்தவர்தானே!" என்ற சிந்தனை அவர்மீது உங்களுக்கு வெறுப்பை உருவாக்கும். அதன்பிறகு அந்த மாதிரியான வாக்குவாதங்கள் இல்லாததால் இனி நீங்கள் செய்யப்போகும் எந்தவொரு செயலிலும் சுதந்திரமாக ஈடுபடலாம் என்ற சிந்தனை சிறிது சிறிதாக ஊற்றெடுக்கும். அதுவே முன்னாள் துணையை மறப்பதற்கான பிள்ளையார் சுழி. 

உங்கள் துணைமீது நீங்கள் வைத்திருந்த காதல் பற்றிய சிந்தனையை அவர்மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை மிகவும் நேர்மையாக உங்களுக்கு நீங்களே எடைபோட்டுப் பார்க்கவேண்டும். அது உண்மையில் இவ்வளவு தூரம் வேதனைப்படும் அளவிற்கு இருக்கின்றதா இல்லை உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா என்பதை உங்களுக்குப் புரியவைக்கும். ஒருவேளை உண்மையாகவே அது அவ்வளவு ஆழமான அன்பாக இருந்தாலும் அத்தனை அன்பாக இருந்தும் இப்படிப் பிரிந்துவிட்டோமே என்ற வேதனையே அந்த உறவின் மீதான பிடிப்பைச் சிறிது சிறிதாகத் தளர்த்தத் தொடங்கும்.

மூன்றாவதாக, அப்படி ஆழமான அன்போடு இருந்து உங்களுக்கு விருப்பமான ஆனால் அவர்களுக்கு விருப்பமில்லாத காரணத்தால் சிலவற்றைச் செய்யாமல் விட்டிருப்பீர்கள். அவர்களோடு இருந்ததால் நீங்கள் என்ன மாதிரியான சந்தோஷங்களை இழந்தீர்கள்? அதையெல்லாம் தற்போது மீண்டும் உங்களால் எவ்வளவு தூரத்திற்கு மீண்டும் அடையமுடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். உதாரணமாக, உங்களுக்கு நீண்டதூரப் பயணம் மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்திருக்கலாம். தன்னைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அன்புக்கட்டளையை மீறி அப்போது ஆசைப்பட்டதைச் செய்யமுடியாமலும் போயிருக்கலாம். அதைத் தற்போது தடையின்றிச் செய்யலாம் அல்லவா!

இந்தப் பயிற்சிகளைச் செய்வதன்மூலம் இறுதியாக உங்களைவிட்டுப் பிரிந்துபோன துணையை நினைத்துக் கவலைப் படுவதைவிட அவரால் நீங்கள் இழந்தவற்றைத் திரும்ப அடைவதிலேயே உங்கள் மனம் குறியாக இருக்கும். 24பேரிடமும் தனித்தனியாக இந்தச் சிந்தனைப் பயிற்சியை மேற்கொள்ள வைத்து லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார். அதில் அவர்கள் மனதில் இருந்த காதல் உணர்வுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால், அவர்களது மனம் திசைதிருப்பப்பட்டது. திசைதிருப்புவதும் ஒருவகையில் தவிர்ப்பதுதான் என்கிறார் லூயிஸ். அதாவது தம் காதல் அல்லது காதலர் மீதான உணர்வுகளிலிருந்து உடனடியாக யாரும் வெளிவருவதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய அப்போதைய சிந்தனையிலிருந்து வெளிக்கொணரப்படுகிறார்கள். அதுவே  இழப்பின் வேதனையில் இருப்பவர்களுக்கான அப்போதைய தேவை. அதைச் செய்யும்போது தங்கள் கவலையைத் தவிர்த்துச் செய்யவேண்டியதின்மீது ஆர்வம்கொண்டு சந்தோஷமடைகின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் நம் ஆழ்மனதை நாம் கொஞ்சம் ஏமாற்றிக் கொள்கிறோம். அப்போதைக்கு அதை அவ்வாறு நினைக்க வைப்பதன்மூலம் நமது மன வலிகளுக்கு மருந்து தேடிக்கொள்கிறோம். அதையே தொடர்ச்சியாகச் செய்யும்போது மனம் முழுமையாக இழப்பிலிருந்து விடுபட்டுச் சகஜநிலைக்குத் திரும்பிவிடும். 

"காதலர் குறித்த எதிர்மறைச் சிந்தனைகள் காதல் உணர்வுகளை மட்டுப்படுத்துகின்றன. கவன மாற்றம் உணர்ச்சிப் பெருக்கிலிருந்து வெளிவருவதற்கான நேர்மறைச் சிந்தனைகளை வகுத்துத் தருகிறது." - செயின்ட் லூயிஸ்

அப்புறம் என்னங்க! லூயிஸ் சொன்னத முயற்சி செய்து மீண்டுவர முயற்சி பண்ணுங்க...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு