பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தங்கத்தில் இருந்து மருந்து!

தங்கத்தில் இருந்து மருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கத்தில் இருந்து மருந்து!

தங்கத்தில் இருந்து மருந்து!

சுமை நானோ தொழில்நுட்பத்தின் தந்தை  என்று அழைக்கப்படுபவர் கட்டேஷ் வி.கட்டி. மருத்துவத் துறையை இயற்கையின் வசம் திருப்பும் முயற்சியை முன்னெடுத்துக் கொண்டி ருக்கிறார். ரசாயனங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தாமல் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளார். 

தங்கத்தில் இருந்து மருந்து!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கட்டி. 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். 175 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர், அவற்றில் 55 கண்டுபிடிப்பு களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். ஆராய்ச்சி விஞ்ஞானியும் மனைவியுமான கவிதாவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

சென்னையில் செயல்படும் தன்வந்திரி நானோ ஆயிஷாதி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானத் தொழில்நுட்ப அதிகாரியாகவும், இயக்குநர் குழும உறுப்பினராகவும் இருக்கும் கட்டேஷ் வி.கட்டி, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார்.  அவரோடு பேசினேன். 

“ஆசிரியராக வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் முதுநிலை வேதியியல் படித்த பின்பு, அறிவியலே என்னை அதிகமாக ஈர்த்தது. அதன்பின் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்சி) ஆராய்ச்சிப் படிப்பை முடித்தேன்.  ஜெர்மனியில் ஃபெல்லோஷிப் கிடைத்தது. 1985-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சென்றுவிட்டேன். ஜெர்மனியைத் தொடர்ந்து, கனடாவுக்குப் பணியாற்றச் சென்றேன். 1990-ம் ஆண்டு மிசோரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்து சுமார் 29 ஆண்டுகளாக ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் பணியாற்றிவருகிறேன்.

 வேதியியலை மருத்துவத்தில் பயன்படுத்தும் திறமைமிக்கவர்களை மிசோரி பல்கலைக்கழகம் தேடிக்கொண்டிருந்தது. அதனால்தான் வேதியியல் படித்த எனக்கு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. புற்றுநோய், பார்க்கின்சன்ஸ், கீல்வாதம் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க புதிய ரசாயனங்கள், வேதிப்பொருள்களைக் கண்டறிவதற்காக வேதியியல் பின்னணி உள்ளவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

தங்கத்தில் இருந்து மருந்து!

மிகவும் மெதுவாக எனது ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கினாலும், அதிக அளவில் புதிய மருந்துகளைக் கண்டறியத் தொடங்கினேன். 1989, செப்டம்பரில் அந்த முக்கிய முடிவை எடுத்தேன். ‘வாழ்நாளுக்குள் மனிதகுலத்துக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமென்று!’ 

அப்போதுதான் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மருத்துவத்தில் உலோகத்தின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். தொடர்ந்து நடத்திய பல்வேறு ஆராய்ச்சியின் மூலம் மருந்துகளின் அளவு (size) சிறியதாக இருக்கும்போது, அதன் பலன் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தோம். எனவே, மருந்துகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் நானோ தொழில் நுட்பத்தைக் கையாளத் தொடங்கினேன்.

அதன்பிறகு நானோ தொழில்நுட்பத்தில் சிறிய அளவிலான மருந்துகளைத் தயாரித்தோம். நானோ மூலக்கூறுகள் எந்த அளவுக்குச் சிறியது என்றால், ஒற்றை முடியின் அகலத்தைக் காட்டிலும் ஒரு லட்சம் மடங்கு சிறியது. அமெரிக்க அரசு என் போன்ற 11 பேருக்கு நிதியுதவியும் அளித்து நானோ தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்தது.  2005 முதல் 2010 வரை நானோ தொழில்நுட்பத்தில் கண்டறிந்த மருந்துகளைப் பரிசோதனை செய்து, இறுதியாக வெற்றியடைந்தேன்.

 என்னுடைய சிகிச்சை முறை தங்கத்தை மையமாகக் கொண்டது. தாவரங்களிலும் ரசாயனங்கள் இருக்கும். அதிலிருந்து எடுக்கப்படும் ரசாயனங்கள் ‘பைட்டோ கெமிக்கல்ஸ்’ (phytochemicals). இந்த ரசாயனங்களில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுகள் இருக்காது. அதனால் பைட்டோ கெமிக்கல்ஸுடன் தங்க நானோ துகள்களைப் பயன்படுத்தி புராஸ்டேட் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று நிரூபித்தேன். அந்த ஆராய்ச்சி முடிவு பல்வேறு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. 2000-ம் ஆண்டு வரை புற்றுநோய்க்கு ரசாயனங்கள், வேதிப்பொருள்களைப் பயன் படுத்தி மருந்துகள் தயாரித்தேன். அதன்பிறகு, முழுக்க முழுக்க தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள்கள், ரசாயனங்களைப் பயன்படுத்தினேன்.

 முதன்முலில் எங்கள் வீட்டு சமையலறையில் இருந்த சோயா பீன்ஸிலிருந்து எடுக்கப்பட்ட பைட்டோ கெமிக்கலுடன் தங்கத்தைச் சேர்த்துத் தங்க நானோ துகள்களை நானும் என் மனைவியும் உருவாக்கினோம். யாராலும் அதை நம்ப முடியவில்லை. காரணம், நாங்கள் தயாரிக்கும் வேதிப்பொருளில் எந்தவித நச்சுப்புகையும் வெளியாகாது. அதனால் பெரிய பெரிய ஆய்வகங்கள் அதற்குத் தேவைப்படவில்லை. அதன்பின்பு டீத்தூள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டை போன்றவற்றிலிருந்து பைட்டோ கெமிக்கல்களை உருவாக்கினோம். லவங்கப்பட்டையிலிருந்து எடுக்கப்பட்ட வேதிப்பொருள், 2010-ம் ஆண்டின் உலகின் சிறந்த பத்துக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இறுதியாக அனைத்தையும் ஒருங்கிணைத்தோம். ‘பசுமை நானோ தொழில்நுட்பம்’ என்ற புதிய கருத்து உருவானது. 

தங்கத்தில் இருந்து மருந்து!

தற்போது பசுமை நானோ தொழில்நுட்பத்தை ஆயுர்வேத மருத்துவத்துடன் இணைத்திருக்கிறோம். இந்தியப் பாரம்பர்ய மருத்துவமான ஆயுர்வேதத்தில் அதிக அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. தங்கபஸ்பம் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியமான மருந்து. தங்கத்துடன் இருக்கும் இந்த சுவாரஸ்யமான மருத்துவப்பிணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தோம். எங்களிடம் தங்க நானோ துகள்கள் இருந்தன. அதனுடன் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளைப் பயன்படுத்தித் தங்கபஸ்பத்தைத் தயாரிக்கலாம் என்று தீர்மானித்தோம். தங்கத்தைத் தீயில் உருக்கி, அதனுடன் பாதரசம் போன்ற உலோகங்ளைச் சேர்த்துத் தங்கபஸ்பம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள், தங்கத்தோடு தாவரங்கள் அல்லது மூலிகைகளைப் பயன்படுத்துகிறோம். தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகங்களையும் அதில் பயன்படுத்து வதில்லை. அதனால் 100 சதவிகிதம் எவ்வித ரசாயனங்களும் நச்சுகளும் அதில் இல்லை.

நெல்லிக்காய், மாங்காய், சோயா பீன்ஸ் போன்ற பலவற்றைப் பயன்படுத்தித் தங்கபஸ்பம் தயாரிக்கிறோம். புராஸ்டேட் புற்றுநோய், கணையப் புற்றுநோய், ரத்தப்புற்றுநோய், கீல்வாதம் என அனைத்து நோய்களுக்கும் இதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். இந்த மருந்துகளைப் பயன்படுத்தி,  விலங்குகளின் உடலிலும் மனித உடலிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் மீண்டும் பல்வேறு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு இந்தத் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டிருக்கிறோம்.
 
அமெரிக்க வர்த்தகக் குறியீடு மற்றும் காப்புரிமை நிறுவனம், நானோ ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்பாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் முதற்கட்ட அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சில ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரித்திருக்கிறோம். சாதாரண நோய்த் தொற்றுகளைப் போன்று, எச்ஐவி நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகளுக்கும் சிகிச்சை அளிக்கும் ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆன்டிபயாடிக்’ மருந்துகளைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறோம்.

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய ஆயுர்வேத மருத்துவம் ஏன் உலக அளவில் பிரபலமாகவில்லை..? அறிவியல்பூர்வமாக ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துச் செல்லாததே இதற்குக் காரணம். அதைத்தான் இப்போது பசுமை நானோ தொழில்நுட்பத்தின் வழி செய்கிறோம். ஆயுர்வேதம் மட்டுமன்றி, தாவரங்கள், மூலிகைகள், உலோகங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவம், ஹோமியோபதி, சீன மருத்துவம், யுனானி என அனைத்து மருத்துவத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். உலகம் முழுவதும் இந்தத் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கும் நாள் அருகில் இருக்கிறது. உலகெங்கும் பல நாடுகள் இதை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்தியாவையும் இந்திய விஞ்ஞானிகளையும் இந்தத் தொழில்நுட்பம் ஈர்க்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

பசுமை நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் உரிமம்,  சென்னையில் இயங்கும் டிஎன்ஏ (தன்வந்திரி நானோ ஆயிஷாதி) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பசுமை நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் உரிமம் இந்த நிறுவனத்துக்கு மட்டும்தான் உள்ளது.  இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபய குமார் ஜெயின், மனிதர்களின் ஸ்டெம்செல்லைச் சேமித்து வைக்கும் ‘லைப்செல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருபவர். இந்த நிறுவனத்தின் மூலம் சென்னையிலும் நானோ மருந்துகளைக் கொண்டு சோதனை நடைபெறுகிறது” என்கிறார் கட்டி.

 நோபல் பரிசுக்கு இணையான ‘ஹெவசி’ விருதினை  2015-ம் ஆண்டிலேயே  பெற்றுள்ளார் கட்டி.  “விருதுகளைப் பெறுவது என் நோக்கமல்ல, மனித சமுதாயத்தை நோயின் பிடியிலிருந்து விடுவிக்கவே ஆசைப்படுகிறேன்” என்கிறார்.

வாழ்த்துகள்!

ஜெனி ஃப்ரீடா - படங்கள்: வீ.நாகமணி