ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் சிகிச்சையில் ஆயுர்வேதத்தின் செயல்திறனை ஆராய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்கான உலகின் முதல் மல்டிசென்டர் ஃபேஸ் 3 (multicenter phase-3), அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாக, தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ருமட்டாலஜிஸ்ட் டாக்டர் டேனியல் எரிக் ஃபர்ஸ்ட்டால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏவிபி ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநரும், ஆய்வின் இணை ஆய்வாளருமான டாக்டர் சோமித் குமார் கூறுகையில், ``டபுள் பிளைண்ட் - டபுள் டம்மி கிளினிக்கல் டிரெயல் முறையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, ருமெட்டாலஜியில் ஆயுர்வேதத்தை உலக அளவில் எடுத்துச் செல்லும்'' எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு மே மாதம் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வானது கோயம்புத்தூரில் உள்ள ஏவிபி ஆராய்ச்சி அறக்கட்டளை, பெங்களூரில் உள்ள வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பையில் உள்ள ராஜா ராம்தேவ் ஆனந்திலாலா மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் பிளைண்ட் - டபுள் டம்மி ஆராய்ச்சி என்றால் என்ன?
இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுபவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு உண்மையான மருந்து கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வினைப் பயனற்ற (Ineffective) டம்மியான மருந்து கொடுக்கப்படும். யாருக்கு உண்மையான மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது அதை எடுத்துக் கொண்டவர்களுக்கும் தெரியாது; மருந்தைக் கொடுக்கும் மருத்துவருக்கோ, ஆராய்ச்சியாளருக்கோ தெரியாது. இது போன்று ஆய்வு மேற்கொள்ளும்போது பாரபட்சமான முடிவு எடுப்பது தடுக்கப்படும். மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கும் சிகிச்சையின் விளைவு குறித்த உளவியல் சிக்கல் இல்லாமல் இருக்கும். எனவே, ஆராய்ச்சிகளிலேயே டபுள் பிளைண்ட் - டபுள் டம்மி முறைதான் மிகவும் பயனுள்ள, நம்பகத்தன்மையுள்ள ஆராய்ச்சியாகக் கருதப்படுகிறது.