Published:Updated:

தடுப்பூசி போட்டும் அமைச்சருக்கு கொரோனா... சிக்கலை விளக்கும் பாரத் பயோடெக்!

தடுப்பூசி போட்டும் அமைச்சருக்கு கொரோனா!
தடுப்பூசி போட்டும் அமைச்சருக்கு கொரோனா!

இதில் யாருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது, யாருக்கு பிளாசிபோ ஊசி போடப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்படும். சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெரிவிக்கப்படாது.

கொரோனாவுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வல்லமை படைத்த தடுப்பூசிகள் பலவும் கடைசிக் கட்ட சோதனைகளில் இருக்கின்றன. சில தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனை முடிவுகளை வெளியிடவும் செய்துவிட்டன. பிரிட்டன் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் அவசரக் கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றுவிட்டது ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி.

இன்றைய சூழலில் 41 தடுப்பூசிகள் முதல் கட்ட சோதனையிலும், 17 தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், 13 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனையிலும் இருக்கின்றன. இதில் சில தடுப்பூசிகள் இரண்டு கட்ட சோதனைகளை ஒரே நேரத்தில் நடத்திவருகின்றன. இந்த தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு மிகவும் நம்பிக்கையளிக்கும் தடுப்பூசியாக இருந்தது பாரத் பயோடெக் நிறுவனம் ICMR உடன் இணைந்து தயாரித்திருக்கும் கோவாக்ஸின் (Covaxin) தடுப்பூசிதான். கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் இரண்டு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது, விரைவில் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கவுள்ளோம் என அறிவித்தது பாரத் பயோடெக். கிட்டத்தட்ட 22 நகரங்களில் 26,000 தன்னார்வலர்கள் இந்த மூன்றாம் கட்ட சோதனையில் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவித்திருந்தது அந்நிறுவனம்.

ஹரியானா சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ்
ஹரியானா சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ்
Health minister's office

மூன்றாம் கட்ட சோதனையும் தொடங்கியது. நவம்பர் 20-ம் தேதி 67 வயதான ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கோவாக்ஸின் தடுப்பூசி சோதனையில் பங்குகொண்டு முதல் டோஸை எடுத்துக்கொண்டார். ''இந்த தடுப்பூசி சோதனையில் பங்குகொள்ளும் முதல் தன்னார்வலர் நான்தான்'' என அப்போது ட்வீட் செய்திருந்தார் அவர். ஆனால், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து இன்று அவருக்கு கொரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் முடிவு வந்திருக்கிறது. இது மக்களிடையே பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மீது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

தொடரும் குழப்பங்கள்!

முதல் இரண்டு கட்ட சோதனைகளில் சுமார் 1000 பேர் பங்குகொண்டனர். அதில் நம்பிக்கையான முடிவுகள் கிடைக்கப்பெற்றதால்தான் மூன்றாம் கட்ட சோதனைக்கு (Phase 3) DGCI-யிடம் (Drugs Controller General of India) ஒப்புதல் பெற்றது பாரத் பயோடெக் நிறுவனம். ஆனால், ஏற்கெனவே முதல் கட்ட சோதனையில் பங்குகொண்ட தன்னார்வலர் ஒருவருக்குத் தீவிர பக்கவிளைவுகள் இருப்பது தெரிய வந்தும் அதை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறது பாரத் பயோடெக் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் எகனாமிக் டைம்ஸ் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டன. அதன்பின் அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்தது பாரத் பயோடெக் நிறுவனம்.

பாரத் பயோடெக் கோவாக்ஸின் | Bharath Biotech Covaxin
பாரத் பயோடெக் கோவாக்ஸின் | Bharath Biotech Covaxin

இந்நிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டும் அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இப்போது விளக்கம் அளித்திருக்கிறது அந்நிறுவனம்.

கோவாக்ஸின் தடுப்பூசி 28 நாள் இடைவெளியில் மொத்தம் இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படுகிறது. இதில் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டு 14 நாள் கழித்துத்தான் தடுப்பூசி பலன் அளித்திருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். இதில் ஒரு டோஸ் மட்டுமே அனில் விஜ் எடுத்துக்கொண்டார். மேலும், அனைத்து தடுப்பூசிகளின் கடைசிக் கட்ட சோதனைகள் போல இதுவும் Double blinded and Randomized முறையில்தான் சோதனை செய்யப்படுகிறது என்கிறது பாரத் பயோடெக் நிறுவனம்.

அது என்ன 'double blinded and randomized' சோதனை?

அதாவது இந்த சோதனையில் பங்குகொள்ளும் தன்னார்வலர்களில் பாதிப் பேருக்கு நிஜ தடுப்பூசியும் மீதிப் பேருக்கு எதுவுமே இல்லாத பிளாசிபோ (Placebo) ஊசிகளும் போடப்படும். இதற்குப் பிறகு இவர்களுள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் நிஜ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எத்தனை பேர் பிளாசிபோ ஊசிகள் போட்டுக்கொண்டவர்கள் என்று கணக்கிடப்படும். இதை வைத்தே தடுப்பூசியின் பலனளிக்கும் விகிதம் (Efficacy) முடிவெடுக்கப்படும். இதில் யாருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது, யாருக்கு பிளாசிபோ ஊசி போடப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்படும். சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெரிவிக்கப்படாது.

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?
இதனால் இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து தடுப்பூசியின் திறனை முடிவுசெய்ய முடியாது என்கிறது பாரத் பயோடெக் நிறுவனம். மூன்றாம் கட்ட சோதனைகள் முழு வீச்சில் இந்திய முழுவதும் நடத்தப்பட்டுவருவதால் மூன்றாம் கட்ட சோதனையின் இறுதி முடிவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். அப்போது உண்மையில் எந்த அளவு கோவாக்ஸின் பலனளிக்கிறது என்பது தெரிந்துவிடும்!
அடுத்த கட்டுரைக்கு