அலசல்
Published:Updated:

சீனாவுக்கு இணையான தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்...

மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

மருந்து தயாரிப்புக்கு முன்பே மூடுவிழா?

உலக மக்களிடையே எந்தக் கொள்ளைநோய் பரவினாலும், அதற்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் மருத்துவ உலகம் முழுவீச்சில் இறங்கிவிடும். தற்போது கொரோனா (கோவிட்-19) உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வேளையில், ஒட்டுமொத்த உலகமும் அதற்கான மருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள்கள் வெளியே தெரியாமலிருந்த மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் கடைகோடி மக்கள் வரை உணரத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நேரத்தில்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் ‘தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ மூடப்படும் நிலையில் இருப்பதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

உலகத்தில் நோய் தடுப்பு மருந்துகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தடுப்பு மருந்துகளைப் பொறுத்தமட்டில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. இங்கிருந்து 150 நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் அனுப்பப்படு கின்றன! தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இணையாக தமிழகத்தில் சென்னை - கிண்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், இமாசலப்பிரதேசம் - கசவுலி ஆகிய இடங்களில் மத்திய அரசின் மருந்து உற்பத்தி மையங்களும் பங்களித்துவருகின்றன.

இந்த நிலையில், 2008-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட திருமணி கிராமத்தில் மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் ஹெச்.எல்.எல் பயோடெக் (HLL Biotech Limited) தடுப்பு மருந்து உற்பத்தி மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதை, ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகமாகவும் (Integrated Vaccines Complex - IVC) அறிவித்தார்கள். ஆண்டுக்கு 585 மில்லியன் டோஸஸ் (Doses) தடுப்பூசி மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஹெப்படிடிஸ் பி (Hepatitis B), ரேபிஸ் (Rabies) உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. நாடு முழுவதும் பச்சிளங் குழந்தைகளை கொடிய நோய்களிலிருந்து காப்பதே இந்த மையத்தின் நோக்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.

டி.கே.ரங்கராஜன் - ரெக்ஸ் சற்குணம்
டி.கே.ரங்கராஜன் - ரெக்ஸ் சற்குணம்

இதற்காக தமிழக அரசு சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் சார்பில் 594 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொழிற்சாலை தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வணிக நடவடிக்கை களைத் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் நிலையில் தற்போது இருப்பதாகச் சொல்கின்றனர், மருத்துவத் துறை சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்.

“இந்தத் தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணியாற்றிவந்தனர். அவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், சிலர் வேலையைவிட்டுச் சென்றுவிட்டனர். மீதம் உள்ள தொழிலாளர்கள், ‘வேலையை விடலாமா, வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் உள்ளனர். செயல்பாடு இல்லாமல் இருப்பதால் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்காக இங்கு அமைக்கப் பட்ட விலை உயர்ந்த, அதிநவீன உபகரணங்கள் செயல்பாட்டுத்திறனை இழந்து வருகின்றன. இந்த நிறுவனத்தை மத்திய அரசு தனியார்மயமாக்கத் திட்டமிடுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. அதனாலேயே இப்படி கேட்பாரற்று போட்டுள்ளனர்” என்கின்றனர் அவர்கள்.

‘இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்திருக் கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான டி.கே.ரங்கராஜன்.

அவரிடம் பேசினோம். “அந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே முயற்சி எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இந்த மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினேன். தொடர் முயற்சியின் விளைவாக அந்த முடிவைக் கைவிட்டது மத்திய அரசு.

சீனாவுக்கு இணையான தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்...

இந்த உற்பத்தி நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இங்கு, கொரோனா வைரஸ் பாதிப்புக்கே தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இது, சீனாவில் உள்ள அதிநவீன ஆய்வகங்களுக்கு நிகரானது. இந்த உற்பத்தி மையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்று சமீபத்தில் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், அந்த மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவராமலேயே வைத்துள்ளனர். அதைத் தனியார்மயமாக்கப்போகிறார்கள் என்ற பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது. அதனால்தான், பிரதமர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, இந்த மையத்தை ஏன் அரசே தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை விளக்கிக் கூறினேன். நான் தெரிவித்த கருத்துகளை பிரதமர் கவனத்துடன் கேட்டுக்கொண்டார். அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்த விவகாரத்தைப் பரிசீலித்து விரைவில் தகவல் தெரிவிப்பதாக எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்” என்றார் நம்பிக்கையுடன்.

இதற்கிடையே இந்தத் தடுப்பூசி மையத்தை, மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம். “500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த உற்பத்தி மையத்தில், ஒரு தடுப்பூசிகூட இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பல்வேறு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், இந்த மையத்தின் மூலம் முகக்கவசம், ஹேண்ட் சானிடைஸர், கையுறை போன்ற பொருள்களையாவது தயாரிக்கலாம். அவற்றை மக்கள் வாங்கத் தயாராக இருக்கின்றனர். எந்தச் சூழலிலும் இந்த மையத்தை தனியார்மயமாக்கவோ, மூடவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. இந்த மையம் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு போதுமான நிதியுதவியை அளிக்க வேண்டும். முடியாத பட்சத்தில், தமிழக அரசு இதை ஏற்று நடத்த வேண்டும். அதுவரையிலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதுடன் இடமாற்றம், ‘லே ஆஃப்’ போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன, உற்பத்தி மையத்தின் நிலை என்ன என்று, அதன் தலைமை நிர்வாக அலுவலர் மருத்துவர் விஜயனிடம் பேசினோம். “தடுப்பு மருந்து தொழிற்சாலை மூடப்படுகிறது எனச் சொல்வதெல்லாம் தவறான தகவல். நிறைய மருத்துவ ஆய்வுத் திட்டங்கள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான ஒப்புதல்கள் இன்னும் கிடைக்காமலேயே இருக்கின்றன. இந்த ஒப்புதல்களை வழங்குவதற்கு எதிர்பாராதவிதமாக கால அவகாசம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த மருத்துவ ஆய்வுகளுக்கான ஒப்புதல்களும் அவற்றுக்கான நிதியும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என நம்புகிறோம். அவை கிடைத்தவுடன் ஆய்வுகள் தொடரும்” என்றார்.

‘`கொரோனாவின் தீவிரம் இன்னும் சில தினங்களுக்கு அதிகரிக்கவே செய்யும்’’ என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றுநோய்களுக்கான தடுப்பு நடவடிக்கை களுக்கு இதுபோன்ற தடுப்பு மருந்து உற்பத்தி மையங்களைப் பயன்படுத்திக்கொள்வது காலத்தின் அவசரம்!