Published:Updated:

நான்கு நோபல் பரிசு பெற்ற அபூர்வ குடும்பம்! - குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

மேரி க்யூரி பெண் என்பதால் அவருக்கு நோபல் பரிசு தரக் கூடாது என்று கமிட்டி உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

பேராசிரியர் அபிஜித் பேனர்ஜி மற்றும் அவர் மனைவி பேராசிரியர் எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்த ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை. மனைவி- கணவன் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது, வாழ்த்துகள்.

Abhijit Banerjee and Esther Duflo
Abhijit Banerjee and Esther Duflo

ஒரு சின்ன பிளாஷ்பேக்....

முதன் முதலில் மனைவி கணவனுக்கு நோபல் பரிசு தரப்பட்ட ஆண்டு 1903. மேரி க்யூரி மற்றும் அவர் கணவர் பியர் க்யூரி ஆகிய இருவருக்கும் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நோபல் கமிட்டி பியர் க்யூரிக்கும் ஹென்றி பெக்கரல்லுக்கும் நோபல் பரிசு தருவதாக முடிவு செய்தது. மேரி க்யூரி பெண் என்பதால் அவருக்கு நோபல் பரிசு தரக் கூடாது என்று கமிட்டி உறுப்பினர்கள் முடிவு செய்தனர். அன்றும் இன்றும் பெண்கள் எல்லாவற்றையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது! நோபல் கமிட்டியில் இருந்த பெண், உரிமை போராளியும் கணித மேதையுமான மிட்டாகி- லெஃப்லர், மேரி க்யூரிக்கு ஆதரவாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பியர் க்யூரியிடமும் தகவலைச் சொல்லிவிட்டார். பியர் க்யூரி, தனக்கு மட்டும் நோபல் பரிசு தந்தால் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் மேரி க்யூரிக்கு 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் நகைச்சுவை என்னவென்றால், இருவரும் நோபல் பரிசை வாங்கப் போகவில்லை. மேரி க்யூரி ஆராய்ச்சியில் பிசியாக இருப்பதாக சொல்லிவிட்டார். கூட்டத்தைப் பார்த்தால் கூச்சப்படும் பியர் க்யூரி உடல் நலம் சரியில்லை என்று சாக்கு சொல்லிவிட்டு நோபல் பரிசு வாங்கப் போகாமல் இருந்துவிட்டார்!

மேரி க்யூரி கதிரியக்கத்தால் இயங்கும் இயந்திரத்தை (X-ray machine) உருவாக்கினார். இதை ஆம்புலன்ஸ்களில் வைத்து எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைத்திருந்தார். இந்த இயந்திரங்கள் முதல் உலகப் போரில் எலும்பு முறிவு ஏற்பட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பெரும் உதவியாக இருந்தது. இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களை மேரி க்யூரியே போர்முனைகளில் ஓட்டிச் சென்று சிகிச்சை அளித்தார். அதனால் அவரை செஞ்சிலுவைச் சங்கம் கவுரவித்தது. மேரி க்யூரியின் ஆராய்ச்சியால், அர்ப்பணிப்பால் பல லட்சம் உயிர்கள் காக்கப்பட்டன. இன்றைக்கும் X-ray machine பயன்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியும். எல்லா நல் விளைவுகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு. அது ஆபத்தானதாக இருக்கக்கூடும். அந்தக் காலத்தில் கதிரியக்கத்தின் ஆபத்து தெரியாமல் பல பேர் உயிரைவிட்டனர்.

Irene Curie
Irene Curie

மேரி க்யூரி கண்டுபிடித்த ரேடியம் ஒளிரும் தன்மை கொண்டது. அதனால், ரேடியம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொம்மைகளைப் படுக்கையறையில் வைத்திருந்தனர். ஆல்ஃபிரட் க்யூரி என்பவர் ரேடியம் கலந்த பற்பசைகளை முகப்பூச்சுக்களை தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார். இவருக்கும் மேரி க்யூரிக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், க்யூரி என்ற பெயரைப் பார்த்து மக்கள் அவரிடம் ரேடியம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர். இதைப் பயன்படுத்திய எல்லோரும் புற்றுநோய் வந்து இறந்தனர். கதிரியக்கம் புற்றுநோயை வரவழைக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேரி க்யூரி கண்டுபிடித்த ஒரு கதிரியக்க தனிமம் பொலோனியம் (Polonium) . அவர் பிறந்த போலந்து (Poland) நாட்டின் நினைவாக பொலோனியம் என்று பெயர் வைத்தார். இந்தப் பொலோனியத்தைப் பயன்படுத்தி ஒரு கொலையும் செய்தது ரஷ்யா. அலெக்ஸ்சாண்டர் லித்வினென்கோ என்பவர் ரஷ்யாவின் கேஜிபியில் உளவாளியாக இருந்தவர். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவர்களிடமிருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இங்கிலாந்தும் அடைக்கலம் தந்தது. அங்கிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள், உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுது நோய்வாய்ப்பட்டார் லித்வினென்கோ. கடும் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி மூன்று வாரம் கழித்து மரணமடைந்தார். அவர் மரணம் மிகக் கொடுமையாக இருந்தது. லித்வினென்கோவை கொல்வதற்காக அனுப்பப்பட்ட கேஜிபி ஏஜென்டுகள் அவருடைய உணவில் பொலோனியத்தைக் கலந்திருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

Marie Curie
Marie Curie

பொலோனியத்தைக் கண்டுபிடித்தபொழுது அந்தத் தனிமம் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்று மேரி க்யூரி கணித்திருக்க மாட்டார். நோபல் பரிசு பெற்ற சில ஆண்டுகளுக்குப் (1906) பிறகு பியர் க்யூரி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதனால் மனம் தளராத மேரி க்யூரி தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1911-ம் ஆண்டு மேரி க்யூரிக்கு வேதியிலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இரண்டு நோபல் பரிசுகள் பெற்ற ஒரே பெண் மேரி க்யூரி. ஆனாலும் பிரான்ஸ் நாட்டின் ஆண் விஞ்ஞானிகள் அவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். அநாகரிகமாகவும் நடந்துகொண்டனர். மேரி க்யூரிக்கும் அவருடைய மாணவர் ஒருவருக்கும் தவறான உறவு என்று பேசினர். அந்தக் கிசுகிசுக்களை செய்தித்தாள்களிலும் வர வைத்தனர். அவருடைய ஆராய்ச்சிக் கூடத்துக்குள்ளும் நுழைய விடாமல் செய்தனர். போர் முனையில் வாகனத்தை ஓட்டிச் சென்று சேவை செய்த மேரி க்யூரிக்கு நாட்டுப்பற்று இல்லை என்றும் பேசினர். இந்தத் தொல்லைகளில் இருந்து 1934-ம் ஆண்டு விடுதலை பெற்றார் மேரி க்யூரி. கதிரியக்கத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததால் ரத்தப் புற்று நோய் வந்து காலமானார் மேரி க்யூரி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சொல்வார்கள். அதுபோல அவர் மகளும் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டார்.

மேரி க்யூரியின் மகள் ஐரீன் க்யூரி செயற்கை கதிரியக்கத்துக்காக நோபல் பரிசு பெற்றார். இவருடன் இவர் கணவரும் (ஃபிரெடெரிக் ஜுலியட் க்யூரி) நோபல் பரிசு பெற்றார். ஐரீன் க்யூரி ஒருமுறை இந்தியா வந்திருக்கிறார். புனேயில் இருக்கிற தேசிய வேதியியல் ஆய்வகத்தை (CSIR-National Chemical Laboratory) நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவுக்கு பண்டித நேருவின் அழைப்பை ஏற்று நோபல் பரிசு வென்ற 4 பேர் வந்திருந்தனர். அந்த நான்கு விஞ்ஞானிகள், சர் சி வி ராமன் (இந்தியா), சர் ராபர்ட் ராபின்சன் (இங்கிலாந்து), ஆர்தர் காம்டன் (அமெரிக்கா) மற்றும் ஐரீன் ஜூலியட் க்யூரி (பிரான்ஸ்).

Curie family
Curie family

இன்றைக்கு நோபல் பரிசு பெற்றிருக்கும் அபிஜித் பேனர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்லோ தம்பதியர்களுடன் சேர்ந்து ஆறு தம்பதிகள் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். 1. மேரி க்யூரி (இயற்பியல் மற்றும் மருத்துவம்) - பியர் க்யூரி (இயற்பியல்) 2. ஐரீன் ஜுலியட் க்யூரி - ஃபிரடெரிக் ஜுலியட்க்யூரி (வேதியியல்) 3. கெர்ட்டி கோரி - கார்ல் கோரி (மருத்துவம்) 4. மே பிரிட் - எட்வர்ட் மோசர் (மருத்துவம்) 5. ஆல்வா மிர்டால் (அமைதி) - குன்னர் மிர்டால் (பொருளாதாரம்) ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்றது ஒரே ஒரு முறைதான் நடந்திருக்கிறது. அந்த பெருமைக்குரிய குடும்பம் க்யூரி குடும்பம்.

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு