Published:Updated:

இது மருந்து மட்டுமல்ல; மினி மருத்துவர்... வியப்பூட்டும் மின்னணு மாத்திரை!

வெறும் மருந்தாக மட்டுமன்றி, உடலின் இயக்கங்களைக் கண்காணிப்பதில் மினி மருத்துவராகவே செயல்படவிருக்கின்றன இந்த மின்னணு மாத்திரைகள்.

Capsules
Capsules

கையில் வைத்திருக்கும் மொபைல் முதல் காதில் மாட்டியிருக்கும் இயர்போன் வரை கேட்ஜெட்கள் இன்றி நமக்கு ஒருநாள்கூட நகர்வதே இல்லை. இந்த மின்னணு காதல் தற்போது மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறது. ஆம், நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளிலும் புதுமை புகுந்திருக்கிறது. இதுவரைக்கும் வெறுமனே மருந்துகளை மட்டுமே தன்னுள் வைத்திருந்த மாத்திரைகள் இனிமேல் அதைத் தாண்டியும் பல்வேறு வேலைகளை நம் உடலில் செய்யப்போகின்றன. இதற்கான மின்னணு மாத்திரைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

அதென்ன மின்னணு மாத்திரை, எதுவும் ஷாக் அடிக்கும் சமாசாரமா என நீங்கள் நினைக்கிறீர்களா. அப்படியெல்லாம் இல்லைதான். ஆனால், இது செய்யும் வேலைகளைப் பார்த்தால் வியப்பில் கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போவோம். சரி, அதென்ன மின்னணு மாத்திரை?

Pills
Pills

முதல் மின்னணு மாத்திரையானது 1972-ம் ஆண்டு பேராசிரியர் ஜான் கூப்பர் மற்றும் எரிக் ஜோஹமேஸான் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. மருத்துவர் ஒரு நோயைக் கண்டுபிடிக்க, பரிசோதனைகளை எழுதிக்கொடுத்து, பின்னர் நோயாளி அதைத் தகுந்த நிபுணர்களிடம் சென்று செய்து, முடிவுகளைப் பெற்று மருத்துவரிடமே அதைக் கொண்டுவந்து தருவதுதான் இப்போதுவரை இருக்கும் வழக்கம். இந்த நேரத்தை நம்மால் குறைக்கவே முடியாதா? உடனடியாக நோய்களை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்ததுதான் மின்னணு மாத்திரை.

இந்த மருந்தை ஒருவர் உட்கொண்டால் உடனே அது அவரின் உடலில் உள்ள குறிப்பிட்ட சில பிரச்னைகளை ஆய்வுசெய்ய ஆரம்பித்துவிடும். தன்மையைப் பொறுத்து முடிவுகளும் உடனுக்குடன் கிடைத்துவிடும். ஆனால், இதற்காக மருந்துகளை தினமும் விழுங்கவேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. ஒரே ஒரு மாத்திரை, ஒரு மாதம் வரை வயிற்றிலிருந்து வேலை செய்யுமாம்.

Electronic Pills (Sample)
Electronic Pills (Sample)
AP

Massachusetts Institute Of Technology தற்போது உருவாக்கியுள்ள மின்னணு மாத்திரையில், நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர் ப்ளூடூத் வயர்லஸ் டெக்னாலஜி மூலம் நோயாளியின் வயிற்றில் மருந்தின் அளவைக் கூட்டவும், குறைக்கவும் கூட ஒரு வசதியை வைத்திருக்கின்றனர். ஒருவேளை மருந்து வேலை செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே அதை நிறுத்தவும் முடியும். இந்த எலெக்ட்ரானிக் மருந்துகள் மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து மருந்தின் அளவை அவ்வப்போது மருத்துவர்கள் கையாள முடியும். தொற்று, உள்ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் இருந்தால் இதுவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தும்.

இதுமட்டுமல்ல. இன்னும் பல்வேறு வேலைகளைச் செய்கிறது இது. இது ஒரு நோயாளிக்கு வலி நிவாரணத்திற்கு மிகவும் உதவும். நோயாளிகளின் வலி உணர்ந்து அது மருந்துகளைச் செலுத்தும். போதை மருந்துகளை அதிகம் உபயோகித்தால் மருத்துவருக்கு நேரடியாகத் தகவல் போய்விடும். மின்னணு மருந்துகள் என்பது மல்ட்டி சேனல் சென்சார் கொண்டு உடம்பில் நடக்கும் உயிரி மருத்துவ மாற்றங்களையும் கண்காணிக்க வல்லது.

Vikatan

இது நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிந்து, மருந்தை அங்கே சரியாகச் செலுத்துவது, வயிறு சம்பந்தமான நோய்களைக் கண்டறிவது, சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வது எனப் பல மருத்துவ வேலைகளைச் செய்யும் திறன்கொண்டது.

இந்த வேலைகளைச் செய்வதற்காக இந்த மின்னணு மருந்துகளுக்கு உதவுவது இதிலிருக்கும் பேட்டரியாகும். இந்த பேட்டரி விழுங்குவதற்கு ஏற்ற வழியில் தயாரிக்கப்பட்டது. இது நம்முடைய உடலிற்குக் கேடு விளைவிக்காது என்றும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் தேவையான இடங்களில் மட்டுமே மருந்து வேலை செய்வதால் சிறிய அளவு மருந்தால் சிறந்த செயல்பாட்டை ஏற்படுத்தமுடியும். மருந்து நம் உடம்பில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், நம் உடம்பு மருந்தை ஏற்றுக்கொண்டுள்ளதா என்பதையும் மருத்துவர் கண்காணிக்க முடியும். இதில் எதுவும் தவறு இருந்தால் மருத்துவர் அவர் இருந்த இடத்திலேயே இந்த மருந்தின் வேலையை நிறுத்தமுடியும்.

Capsule
Capsule

தற்போது இதன் தயாரிப்பு விலை அதிக அளவில் இருந்தாலும் வரும் காலங்களில் இது குறையும். விலை குறைந்தால் உடனே விற்பனைக்கு வந்துவிடும் என்பதில் ஐயமில்லை. மின்னணு மருந்துகள் நம்முடைய பக்கத்துக் கடைகளிலும் கிடைக்கும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.