Published:Updated:

``மூன்று ஆராய்ச்சியாளர்கள்.. வெவ்வேறு இடங்கள்.. ஒரே தலைப்பு!' - ஆக்சிஜனும் நோபல் பரிசும் #NobelPrize

நோபல் பரிசு பெறும் இம்மூவரும், வெவ்வேறு இடங்களில் தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சி செய்தாலும், ஆராய்ச்சி செய்த விஷயம் ஒன்றுதான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒவ்வோர் ஆண்டும் ஆல்பிரட் நோபல் நினைவாக இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதிச் சேவை, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

Gregg L. Semenza
Gregg L. Semenza
Twitter\@NobelPrize

2019 -ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ``நம் செல்கள், ஆக்சிஜன் தேவைக்கேற்ப எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்கின்றது" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்த சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம். ஜி.கேலின், கிரேக் எல் செமன்ஸா ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாகப் பேசிய நோபல் கமிட்டி குழுவினர் , "நம் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத மாற்றங்கள் ஆக்சிஜனால் நிகழ்வன. இக்கண்டுபிடிப்பு, பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக உள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய் மற்றும் பல நோய்களுக்குத் தீர்வு காணலாம்" என்று கூறியுள்ளனர்.

நோபல் பரிசு பெறும் இம்மூவரும், வெவ்வேறு இடங்களில் தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சி செய்தாலும் ஆராய்ச்சிசெய்த விஷயம் ஒன்றுதான். நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு மாறும்போது, அதற்கு ஏற்றார்ப்போல் எவ்வாறு நம் செல்களும் மாறுகின்றன என்பதே இவர்களின் கண்டுபிடிப்பு. திசுக்களில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இக்கண்டுபிடிப்பின் மூலம், நம் செல்களில் ஆக்சிஜன் குறைந்த நிலையிலும் அதைத் தாக்குப்பிடிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் இம்மூவரும்.

Sir Peter J. Ratcliffe
Sir Peter J. Ratcliffe
Twitter\@NobelPrize

மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் நோபல் பரிசு அறிவிப்புச் செய்தியானது இன்ப அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் பேராசிரியரான செமன்ஸா, நோபல் பரிசு பெற்றது பற்றிக் கூறுகையில், "பள்ளியில் என் உயிரியல் ஆசிரியை எனக்குத் தூண்டுகோலாக இருந்தார் . அவர் எங்கள் வகுப்பு மாணவர்களிடம் , "நீங்கள் நோபல் பரிசு பெறுகையில், நீங்கள் அதற்கான அடிப்படையை இங்கிருந்துதான் கற்றுக் கொண்டீர்கள் என்பதை மறக்கக்கூடாது" என்று கூறிய வார்த்தைகள், நோபல் பரிசு பெற வேண்டும் என்பதை பசுமரத்தாணிபோல் பதிந்து, என்னை அடைய வைத்துள்ளது. என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இவர், ஆக்சிஜன் அளவு நம் உடம்பில் குறையும்போது, எரித்ரோபயோட்டினைச் சுரக்கச் செய்யத் தூண்டும் மரபணுவைக் கண்டுபிடித்துள்ளார். எரித்ரோபயோடின் தூண்டப்படுவதால், ஆக்சிஜன் கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்கள் அதிகமாகச் சுரந்து, ஆக்சிஜன் குறைபாட்டைச் சமன் செய்யும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வில்லியம் ஜி.கேலின், பாஸ்டனில் உள்ள டேனா பார்ப்பர் புற்றுநோய் இன்ஸ்டிட்யூட்டில், ஆராய்ச்சியாளராக உள்ளார். இவருக்கு, அதிகாலையில் நோபல் பரிசு குறித்து அறிவிக்க, 'இது கனவா? அல்ல நனவா ?'என்று அவரால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். லண்டனிலுள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சியாளரான சர் பீட்டர் ரெட்கிளிப்பும் இவர்களுடன் நோபல் பரிசைப் பகிர்கிறார்.

William G. Kaelin Jr
William G. Kaelin Jr
Twitter\@NobelPrize

இக்கண்டுபிடிப்பை இவர்கள் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ்களுக்குப் பிரசுரிக்க அனுப்பியபோது, அவை நிராகரிக்கப்பட்டன. ஆனால், இவர்கள் மனம் தளராமல் இருந்ததற்கான பரிசாக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது. புற்றுநோய்க் கட்டிக்கு நடுவில் இருக்கும் செல்கள்,ஆக்சிஜன் இல்லாமலேயே வாழும் தன்மை கொண்டன. இத்தன்மையால் அதைத் தகர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. இக்கண்டுபிடிப்பின்மூலம் அவற்றிற்கு விடை கிடைத்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரும் புரட்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள இம்மூவருக்கும் ஒன்பது லட்சம் டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 6,38,81,259 பகிர்ந்தளிக்கப்படும். மேலும், பல ஆராய்ச்சிகள் செய்து , புதிய மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்து, மக்களை அச்சுறுத்தும் தீவிர நோய்களைத் தகர்த்தெறியப்போகும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு