Published:Updated:

ஃபைஸர் தடுப்பூசி... அனுமதி கொடுத்த பிரிட்டன்... முடிவுக்கு வருகிறதா கொரோனா?

Corona Vaccine | Pfizer
Corona Vaccine | Pfizer ( Bebeto Matthews )

ஃபைஸரின் தடுப்பூசிக்குத்தான் பிரிட்டன் அரசு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கொரோனாவுக்கு எதிரானப் போரில் மிக முக்கிய மைற்கல்லாக கருதப்படுகிறது.

கொரோனவால் இருண்டு கிடக்கும் உலகிற்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாக கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. வளர்ந்த நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிக வீரியத்துடன் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த முன்னேற்றங்கள் கொரோனா பெருந்தொற்று என்னும் அரக்கனை மனிதம் வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன.
Corona Vaccine
Corona Vaccine
Hans Pennink via AP

பொதுவாக ஒரு வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது மிகவும் சிக்கலான, அதே சமயம் அதிக நேரம் எடுக்கும் ஒரு பணி. முறையாக ஒரு வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு வர ஓரிரு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ஒரு தடுப்பூசி அரசின் ஒப்புதல் பெறுவதற்கு முன் மனிதர்களை வைத்து மூன்று கட்ட சோதனைகளை நடத்தி அவற்றில் நல்ல முடிவுகளைக் காட்டியிருக்க வேண்டும். மனிதர்களில் இந்த மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்ளப்படுவதற்கு முன் எலி, குரங்கு போன்ற மிருகங்களில் தடுப்பூசியைப் பரிசோதித்து பக்கவிளைவுகள் ஏதேனும் இருக்கின்றனவா, வைரஸுக்கு எதிரான எதிர்ப்பை இவை தருகின்றனவா எனச் சோதிக்கப்படும். இதில் வெற்றிகண்ட பிறகே மனிதர்களில் தடுப்பூசி சோதனை செய்யப்படும்.

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

முதல் கட்ட சோதனையில் வெகுசில பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும். மனிதர்களில் ஒரு தடுப்பூசி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறது, எத்தனை டோஸ் தரப்படவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இதில் உறுதிசெய்யப்படும். இதில் நல்ல முடிவுகள் எட்டப்படும் போது இரண்டாம் கட்ட சோதனைக்கு தடுப்பூசிகள் உட்படுத்தப்படும். இதில் ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் எனக் குழுக்களாகப் பிரித்து நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தடுப்பூசி போட்டு ஒவ்வொருவரிடத்திலும் எந்த மாதிரியான விளைவுகள் இருக்கின்றன என்று கண்காணிப்பார்கள். அடுத்தது மூன்றாவது கட்டம்... இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் இந்த தடுப்பூசிகள் சோதனை செய்யப்படும். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுகின்றனவா, போதிய நோய் எதிர்ப்புச் சக்தியை மனிதர்களிடத்தில் இந்த தடுப்பூசிகள் உருவாக்குகின்றனவா என இந்த கட்ட சோதனையில் ஓரளவு தெளிவாகவே தெரியவரும். இந்த சோதனைகளை முறையாகக் கண்காணிக்கப்பட்டு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படும். இதை வைத்து அரசுகளின் மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கும்.

'இத்தனை கட்ட சோதனைகள் எதற்கு, ரஷ்யா இரண்டாம் கட்ட சோதனையிலேயே ஒப்புதல் வழங்கிவிட்டதே...' என்று சிலருக்குத் தோன்றியிருக்கலாம். ஒரு தடுப்பூசி அனைவரிடத்திலும் ஒரே மாதிரியானதாக வேலைசெய்யும் எனச் சொல்லிவிட முடியாது. ஒரு வேளை தவறுதலாக ஒரு தடுப்புப்பூசி ஒப்புதல் பெற்றுவிட்டால் அதனால் வரும் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். 'தடுப்பூசி பில் கேட்ஸின் சதி', 'தடுப்பூசி மூலம் சிப் பொருத்துகிறார்கள்' என இப்போதே தடுப்பூசி போடமாட்டோம் என வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை மட்டும் பார்த்து சிலர் முடிவெடுத்துவருகின்றனர். இதில் தவறான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் தடுப்பூசி மீதான அவநம்பிக்கை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
via AP

முன்பு சொன்னது போல இந்த நடைமுறைகளையெல்லாம் முடித்து ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர ஓரிரு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ஆனால், காட்டுத்தீயெனப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்தையும் விரைவுபடுத்தி வருகின்றன தடுப்பூசி நிறுவனங்கள். ஆனால், பாதுகாப்பில் சமரசம் எதுவும் செய்யப்பட வில்லை. சில தடுப்பூசிகளின் இரண்டு கட்ட சோதனைகள் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதன்படி இன்றைய நிலையில் முதல்கட்ட சோதனையில் 41 தடுப்பூசிகளும், இரண்டாம் கட்ட சோதனையில் 17 தடுப்பூசிகளும், மூன்றாம் கட்ட சோதனையில் 13 தடுப்பூசிகளும் உள்ளன. இதில் சில தடுப்பூசிகள் இரண்டு கட்ட சோதனைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருக்கும்.

உலகின் முதல் COVID19 தடுப்பூசியைக் கொண்டுவருவதில் கிட்டத்தட்ட 54 மருந்து நிறுவனங்களிடத்தில் கடும் போட்டி நிலவிவருகிறது. இந்த ரேஸில் தற்போது முன்னணியில் இருக்கும் இரண்டு நிறுவனங்கள் ஃபைஸர் (Pfizer) மற்றும் மாடர்னா (Moderna). இதில் ஃபைஸரின் தடுப்பூசிக்குத்தான் பிரிட்டன் அரசு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாம் கட்ட சோதனையின் முதல்கட்ட முடிவுகளை ஃபைஸர் நிறுவனம் நவம்பர் 9-ம் தேதி உலகத்திற்கு அறிவித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த BioNTech நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 90% வேலைசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதென்ன 90%? நூறு பேரில் 90 பேருக்கு கொரோனாவால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் இந்த தடுப்பூசி என எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்கொண்ட பிறகு தலைவலி, உடல்வலி போன்ற உபாதைகள் இருந்தாலும் தீவிர பக்கவிளைவுகள் எதுவுமில்லை என்று தெரிவித்தது ஃபைஸர். பொதுவாகச் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸை கொண்டுதான் பெரும்பாலான தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இது mRNA-வை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் தடுப்பூசி. இந்த தடுப்பூசி மூலம் வெறும் வைரஸின் mRNA மட்டுமே உடலில் செலுத்தப்படும். இது வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க நமது நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு உத்தரவிடும். இதற்கு முன்பு இந்த முறையில் எந்த தடுப்பூசியுமே ஒப்புதல் பெற்றதில்லை. புதிய முறை என்றாலும் இந்த முறைதான் சற்றே வேகமாகத் தடுப்பூசி உருவாக வித்திட்டிருக்கிறது. வெறும் mRNA மட்டுமே செலுத்தப்படும் என்பதால் இதனால் தவறுதலாக நோய் ஏற்பட வாய்ப்பே கிடையாது.

Pfizer world headquarters in New York
Pfizer world headquarters in New York
Bebeto Matthews via AP

மாடர்னா நிறுவனமும் இதே mRNA முறையில்தான் அதன் தடுப்பூசியை வடிவமைத்திருந்தது. ஃபைஸர் இந்த முடிவுகளை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே மாடர்னாவும் அதன் மூன்றாம் கட்ட சோதனையின் ஆரம்பக்கட்ட முடிவுகளை அறிவித்தது. அதன்படி மாடர்னாவின் தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 94.5% வேலைசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 18-ம் தேதி மூன்றாம் கட்ட சோதனையின் இறுதி முடிவுகளையும் அறிவித்தது ஃபைஸர். அதில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஃபைஸரின் தடுப்பூசி 95% வேலைசெய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவுகள் இவ்வளவு விரைவில் எட்டப்பட்டதுக்கு mRNA முறை ஒரு காரணம். ஆனால், இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது வேகமெடுத்துப் பரவும் COVID-19 வைரஸ்தான். இன்னும் அமெரிக்காவில் நோய்த் தொற்றின் வீரியம் குறைந்ததாக இல்லை. ஒரு தடுப்பூசியின் திறனைக் கணக்கிடப் பல வருடங்களுக்கு முன் புள்ளியியல் நிபுணர்கள் வகுத்த முறைதான் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அது ஆயிரக்கணக்கான பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சிலருக்கு நிஜ தடுப்பூசியும் சிலருக்கு எதுவுமே இல்லாத பிளேஸ்போ(Placebo) ஊசிகளும் போடப்படும். இதற்குப் பிறகு இவர்களுள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தடுப்பூசி போடப்பட்டவர்கள், எத்தனை பேர் பிளேஸ்போ ஊசிகள் போடப்பட்டவர்கள் என்று கணக்கிடப்படும். இதை வைத்தே தடுப்பூசியின் திறன் முடிவெடுக்கப்படும். இதை 'Efficacy' என்பார்கள். மேலே பார்த்த சதவிகிதங்கள் எல்லாம் இந்த 'Efficacy'-யை குறிப்பவைதான். தொற்று வேகமாகப் பரவிவருவதால் இந்த கட்ட சோதனையில் விரைவில் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுவிடுகின்றனர். விரைவில் முடிவுகளும் கிடைத்துவிடுகின்றன. உதாரணத்திற்கு 44,000 பேர் ஃபைஸர் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பாதிப் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது, பாதிப் பேருக்கு Placebo மட்டும் செலுத்தப்பட்டது. இதில் 170 பேர் தொற்றுக்குள்ளாகினர். இதில் 162 பேர் Placebo மட்டுமே செலுத்தப்பட்டவர்கள். 8 பேர் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டவர்கள். 170 என்ற இந்த எண்ணிக்கையை இவ்வளவு விரைவில் எட்ட கொரோனாவின் வீரியமே முக்கிய காரணம்.

Corona Vaccine
Corona Vaccine
Ted S. Warren via AP

இந்த முடிவுகளை மட்டும் வைத்தே தீர்மானமாகத் தடுப்பூசியின் திறனை முழுவதுமாக சொல்லிவிடமுடியாது என்று சில ஆய்வாளர்கள் எச்சரிக்கவும் செய்கின்றனர். கொரோனவை பொறுத்தவரையில் அறிகுறிகள் அற்றவர்களே அதிகம். அவர்களின் நிலையை இந்த முடிவுகள் பிரதிபலிக்காது என்கின்றனர். ஆனால், தீவிர விளைவுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை ஒரு தடுப்பூசி கொடுத்தாலே போதுமானது தான். இந்த அடிப்படையில்தான் சோதனை முடிவுகள் திருப்பியளிப்பதாக இருக்கின்றன என ஃபைஸர் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு.

பிரிட்டனின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பான Medicines and Healthcare products Regulatory Agency (MHRA) கொடுத்த பரிந்துரையின்படி பொது மக்கள் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என ஒப்புதல் வழங்குகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பல மாத சோதனைகளுக்குப் பிறகு கிடைத்த தகவல்களை MHRA வல்லுநர்கள் முழுவதுமாக ஆராய்ந்து அவை பாதுகாப்பு மற்றும் திறன் சார்த்த அனைத்து தரநிலைகள் பூர்த்திசெய்வதாகத் தெரிவித்த பின்னரே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
பிரிட்டனின் சுகாதாரத் துறை

The Joint Committee on Vaccinations and Immunisations (JCVI) யாருக்கெல்லாம் முதலில் தடுப்பூசி போடவேண்டும், என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளை விரைவில் வெளியிடும்.

அந்நாட்டின் சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக் 95% திறன் கொண்ட இந்த தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். முதல்கட்டமாகத் தேசிய சுகாதார அமைப்பை (NHS) சேர்ந்த சுகாதார பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னதான் அதிக அளவில் வேகமாகத் தயாரிக்கமுடியும் என்றாலும் mRNA மையப்படுத்திய இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமானது அது சேகரிக்கப்பட வேண்டிய வெப்பம். ஃபைஸரின் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றாலும் செயலிழந்துவிடும் அந்த தடுப்பூசி. சேமிப்பு கிடங்குகளில் ஐந்து நாட்கள் வரைதான் சேமிக்க முடியும். இதனால் இதை மக்களுக்கு எடுத்துச்செல்லும் செலவு என்பது மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே இப்படி பெரிய அளவில் தடுப்பூசிகளை மக்களுக்கு எடுத்து சென்ற அனுபவம் தேசிய சுகாதார அமைப்பிற்கு(NHS) இருக்கிறது. அதனால், அனைத்தும் சரிவர நடந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கிறது அந்நாட்டு அரசு.

இதுவரை ஃபைஸரிடன் 4 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இதில் இந்த மாதத்திற்குள் 1 கோடி டோஸ்கள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் சில வார இடைவெளியில் இரு டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். பிரிட்டனின் மொத்த மக்கள் தொகை 6.6 கோடி. இதனால், அங்கு தடுப்பூசிகள் முழுவதுமாக சென்று சேர சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

Corona Vaccine
Corona Vaccine
Claudio Furlan/LaPresse via AP

முன்பு சொன்னது போல அனைவருக்கும் ஃபைஸர் தடுப்பூசியை எடுத்துச்செல்வது சிக்கலான விஷயம்தான். இதனால்தான் இந்தியா போன்ற நாடுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸினஸா (AstraZeneca) நிறுவனமும் தயாரிக்கும் Covishield தடுப்பூசியை நம்பியிருக்கின்றன. கடைசிக் கட்ட சோதனையில் இருக்கும் இதைப் பெருமளவில் தயாரிக்கத் தயாராகவுள்ளது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப்(Serum Institute of India). இதன் மூன்றாம் கட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்குகொண்டுள்ளனர். இதன் மூன்றாம் கட்ட சோதனையின் முதல்கட்ட முடிவுகளும் வெளியாகிவிட்டன. இரு வேறு வித்தியாசமான டோஸ்கள் வைத்துச் செய்யப்பட்ட சோதனைகளில் ஒன்றில் 90% மற்றொன்றில் 62% என்ற நம்பிக்கையான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. மொத்தமாக இது கொரோனா வைரஸுக்கு எதிராக 70.4% வேலைசெய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 24,000 பேர் கலந்துகொண்ட சோதனையை வைத்து வெளிவந்திருக்கும் முடிவு. முழுவதுமாக மூன்றாம் கட்ட சோதனையின் முடிவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஃபைஸர் தடுப்பூசிக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் விரைவில் இந்த தடுப்பூசிக்கும் அங்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தால் இந்தியாவிலும் விரைவில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும்.

இது அல்லாமல் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் (Novavax) நிறுவனத்தின் தடுப்பூசி ஒன்று மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. இதுவும் இந்தியாவிற்கு அதிக அளவில் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் கடைசிக்கட்ட சோதனையும் இந்தியாவில் தொடங்கிவிட்டது. இருப்பதிலேயே குறைந்த விலை தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் (COVAXIN) தடுப்புப்பூசியும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. 'குறைந்தது 60% திறன் கொண்டதாக இது இருக்கும்' எனச் சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள்.அதிக அளவில் மக்களுக்குத் தடுப்பூசி போடும் 'Covid-19 vaccination programme' என்னும் திட்டத்தை வகுத்து வருகிறது இந்திய அரசு. இதைப் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிலைக்குழு மேற்பார்வையிடும். இதற்காக 'Co-Win' என்னும் மென்பொருள் உருவாக்கப்பட்டு மூன்று மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மிக விரைவில் தடுப்பூசிகள் இந்தியாவுக்கும் வரப்போவது உண்மைதான். ஆனால், அதுவரை பொறுமை இழக்காமல் நாம் இருந்திட வேண்டும். தற்போது தொற்றைத் தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் முகக் கவசமும், சமூக இடைவெளியும்தான். அவற்றை கடைப்பிடித்து நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
அடுத்த கட்டுரைக்கு