அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ: வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா?

தங்கம் தென்னரசு - வைகைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம் தென்னரசு - வைகைச்செல்வன்

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. மூன்றடுக்கு, நான்கடுக்குப் பாதுகாப்பு வளையத்தில், யாரும் எளிதில் நெருங்க முடியாத அளவில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன

தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர், தி.மு.க

‘‘எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். முன்பெல்லாம் வாக்குப்பெட்டிகளைத் தரையில் வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது ரேக்கில் அடுக்கிவைத்திருக்கிறார்கள். பெட்டிகள் கீழே இருக்கும்போது, நாம் கண்காணிக்க மிக எளிதாக இருக்கும். ஆனால், தற்போது எல்லா அடுக்குகளிலுமுள்ள வாக்குப்பெட்டிகளையும் சரியாக எடுத்து வருகிறார்களா என்பதைக் கூடுதலாகக் கண்காணிக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, சென்னை வேளச்சேரியில் டூ வீலரில் இரண்டு பேர் வாக்குப்பெட்டிகளை எடுத்துப்போனதையும், மக்கள் அவர்களைப் பிடித்து ஒப்படைத்ததையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். முதலில், அது வாக்குகளே பதிவாகாத பெட்டி என்றார்கள். தற்போது, அந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இது போன்ற சம்பவங்களால்தான் ஏற்கெனவே இருக்கிற சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன. அதனால்தான், கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தேவை உருவாகிறது.’’

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

‘‘வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. மூன்றடுக்கு, நான்கடுக்குப் பாதுகாப்பு வளையத்தில், யாரும் எளிதில் நெருங்க முடியாத அளவில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துக் கட்சி சார்பாகவும் ஆட்கள் இருந்து கண்காணித்துவருகிறார்கள். காலை, மதியம், இரவு என மூன்று ஷிஃப்ட்களில் எங்கள் கட்சி நிர்வாகிகளும் மிகத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள். கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள்தான் பெட்டிகள் இருக்கின்றன. இருந்தபோதும், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்கள். அரசாங்கம் தன் கடமையைச் சரியாகச் செய்துவந்தாலும், எந்தவொரு விஷயத்திலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதுதானே சரியாக இருக்கும்? அதைத்தான் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க தொண்டர்களான நாங்கள் அதை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருகிறோம்.”