Published:Updated:

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

Published:Updated:
டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

த்யபால் சிங். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர். கல்வித்துறையில் ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார். ஔரங்காபாந்தில் 'அகில இந்திய வைதீக சம்மேளன்' என்று ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார். திரும்பிய இடமெல்லாம் மைக்குகள். இங்கே என்ன பேசினாலும், அது இந்தியா முழுவதும், இல்லை உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் செய்தியாக கொண்டு சேர்க்கப்படும் என்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. அந்த மேடையில் கொஞ்சமும் யோசிக்காமல் அல்லது யோசித்து வைத்தே டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்து இப்படி பேசுகிறார்.

"டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் ரீதியாகத் தவறானது. நிரூபிக்கப்படாத ஒன்று. அதை கல்விப் பாடத்திலிருந்து நீக்க வேண்டும். மாற்றம் கொண்டு வர வேண்டும். மனிதன் எப்போதும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் குறிப்பிடவில்லை, யாரும் அப்படியொரு நிகழ்வைப் பார்த்ததாக கூறவில்லை" என்பதாக விரிகிறது அவரின் கருத்து.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு (Theory of Evolution) குறித்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ளாத நிலையே இத்தகைய கருத்துக்களை கூற வைக்கிறது. முதலில் டார்வின் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று வெளிப்படையாக எங்கும் குறிப்பிடவில்லை. மனிதக் குரங்கு இனமும், தற்போதைய மனித இனமும் வேறொரு பொதுவான இனத்திலிருந்து வந்தவை என்றே குறிப்பிட்டுள்ளார். இங்கே அந்தப் பழைய பொதுவான இனம் என்பது ஓர் இனமாக இருக்கலாம், அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவையாக கூட இருக்கலாம் என்பதே அவர் கருத்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆசிரியராக இருக்கும் முனைவர் தாமு அவர்களிடம் பேசியபோது, டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் மேல் பலருக்கும் இருக்கும் தவறான புரிதல் குறித்து விளக்கினார்.

“உயிரினங்களின் தோற்றம் குறித்தான கருத்துக்களை 120 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தாலும், சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் குறித்து மட்டுமல்ல, டார்வின் குறித்தே பல தவறான கருத்துக்களும் சர்ச்சைகளும் இன்றைக்கும் உலா வருகின்றன. அதில் ஒன்றுதான் தற்போது மத்திய அமைச்சர் சத்யேந்திர பால் கூறியுள்ள கருத்துக்கள். அத்தகைய விமர்சனங்கள் குறித்து முதலில் பார்த்து விடுவோம்.

நம்பப்படும் கருத்து: டார்வின்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைக் கண்டறிந்தார்.

உண்மை: பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தை என்று போற்றப்பட்டாலும், டார்வினுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சித் தத்துவங்களை யாருமே சொல்லவில்லை என்று பொருளல்ல. தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் இயற்கைத் தேர்வு கோட்பாடுகளை முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டவர்தான் டார்வின். அதனால்தான் அவருக்கு இந்த அங்கீகாரம்.

நம்பப்படும் கருத்து: டார்வின் அடிப்படையில் ஒரு நாத்திகவாதி. அதனால்தான் இறைவனுக்கு எதிராக இப்படிப் பிதற்றியுள்ளார்.

உண்மை: டார்வின் என்றைக்குமே தான் ஒரு நாத்திகவாதி என்று எங்கும் முழங்கவில்லை. அவர் தன்னை யதார்த்தவாதி, அதாவது Agnostic, என்றுதான் குறிப்பிடுறார். மேலும் அவர், கடவுளின் இருத்தலை மறுக்கவில்லை. மாறாக, பரிணாம வளர்ச்சி என்பது மனிதனைப் படைக்க கடவுள் தேர்ந்தெடுத்த ஒரு முறையாகக் கூட இருக்கலாம் என்று சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும், டார்வின் தேவாலயங்களுக்குச் சென்றுள்ளார். தன்னுடையின் ஆய்வின் முடிவுகள் தனக்கு மிகவும் பிடித்த விவிலியத்தில் (Bible) சொல்லப்பட்ட தத்துவங்களை சுக்கு நூறாக்குகிறதே என்றும் பலமுறை வேதனைப்பட்டு உள்ளார்.

நம்பப்படும் கருத்து: குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்று டார்வின் கூறுகிறார். (இதைச் சொல்லித்தான் மத்திய அமைச்சர் சத்யபால் சிங் இந்திய ஊடகங்களில் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களின் செய்திகளிலும் அடிபடுகிறார்.)

உண்மை: தன்னுடைய The Descent of Man-புத்தகத்தில் டார்வின் வெளியிட்டுள்ள ஒரு hypothesis, அதாவது ஓர் அறிவியல் அனுமானம் என்னவென்றால், மனிதக்குரங்கு இனமும் மனிதனும் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் என்பதே. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று, மனிதக் குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்று டார்வின் எங்கும் கூறவில்லை. மனிதனும், மனிதக் குரங்கும், இயற்கை தேர்ந்தெடுத்த Tree of Life-ல் அடுத்தடுத்த கிளைகள் என்பதே. இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால், மனிதனும் மனிதக்குரங்கு இனமும் (குரங்கிற்கும்-மனிதக் குரங்கிற்கும் உடலியல் ரீதியாகவே பல வேறுபாடுகள் உள்ளன. ஆக, டார்வின் குறிப்பிட்டது குரங்கை  அல்ல - மனிதக் குரங்கை!) சகோதர இனங்கள். டார்வின் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எதனை அனுமானம் செய்தாரோ அதைத்தான் மறுக்க முடியாத அறிவியல் துறையின் மரபியல் ஆய்வுகளும் நமக்கு நிரூபணம் செய்கின்றன. உதாரணமாக, மனிதனுக்கும், மனிதக் குரங்கு இனத்திற்கும் 96 சதவீத ஜீன்கள் ஒரே மாதிரி உள்ளன என்பதுதான் அது!”

அடுத்து சத்யபால் சிங் போன்ற உயர் பதவியில் இருக்கும் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி என்ற அறிவியலை முழுக்க தெரிந்து கொள்ளாமல் பொது மேடையில் இப்படிப் பேசுவது நமக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு,

“மத்திய அமைச்சர் சத்யபால் சிங் ஒரு கல்வி அமைச்சர். வேதியியல் துறையில் M.Phil., பின்பு M.A., Ph.D உள்ளிட்ட உயரிய பட்டங்களை பெற்றவர். அவரைப் போன்றவர்கள் இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற கருத்துக்களை பரப்புவது இந்தியக் கல்வித் தரத்தை கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்ல; கேலிப் பொருளாகவும் ஆக்கிவிடும். ஏனென்றால், டார்வினின் கொள்கைகள் மருத்துவம், அறிவியல் மட்டுமல்ல சமூக அறிவியல் துறைகளிலும் பல ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக இருந்து வருகிறது.

மதத்திற்கும் அறிவியலுக்கும் என்றைக்குமே ஏழாம் பொருத்தம்தான். மேற்கத்திய நாடுகளில் பரவலாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தில் உருவாக்க இறையியல் (creation theology) என்ற ஒரு பிரிவே உண்டு. அது அறிவியல் கருத்துக்களை புறந்தள்ளாது. அதே வேளையில் இறையியல் தத்துவங்களையும் சமரசம் செய்யாத ஓர் அணுகுமுறையை அது ஏற்படுத்த முயல்கிறது. அமெரிக்கா-ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் agnostics என்று கூறப்படும் யதார்த்தவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், டார்வினின் அறிவியல் கோட்பாடுகளைப் புறக்கணிப்பது வரலாற்றில் பின்னோக்கிப் பயணிப்பதற்கு சமம். இதுபோன்ற கூற்றுகளையும், மூட நம்பிக்கைகளையும் பரப்பும் ஆளுமைகள் அரசியல் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பது இந்திய நாடு எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே பார்வையாளர்களால் எடுத்துக்கொள்ளப்படும்” என்று பதிலளித்தார்.

டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது ‘தியரி’ என்ற பெயரில்தான் வழங்கப்பட்டு வருகிறது. அதை எதிர்த்து கருத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம் மத்திய அமைச்சர் உட்பட. ஆனால், அதற்கு எதிராக வைக்கப்படும் வாதம் என்பது அறிவியல் பூர்வமாகவும், சிந்திக்க வைப்பதாகவும்தான் இருக்க வேண்டும். யாரும் குரங்கு மனிதனாக மாறுவதைப் பார்க்கவில்லை. நம் மூதாதையர் எங்கும் அது குறித்து பேசவில்லை, எழுதவில்லை என்றெல்லாம் அமைச்சர் சத்யபால் கூறுகிறார். பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனம் தோன்றியதாக கூறப்படுவது இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வு. அப்போது யாரும் குறிப்பெடுக்கவில்லை, அதைப் பார்க்கவில்லை என்று பிதற்றுவது எந்த விதத்தில் டார்வினின் கோட்பாட்டிற்கு எதிரான வாதமாகும்? இல்லை நினைத்தாலும், எடுக்கத்தான் முடியுமா? தற்போது, அமைச்சரின் இந்தக் கருத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள், எதிர் வாதங்கள் அறிவியலாளர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் மூன்று சிறந்த அறிவியல் கல்வி நிலையங்களான புது தில்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி,  பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமி மற்றும் அலாகாபாத் தேசிய அறிவியல் அகாடமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. தர்க்க ரீதியாக இப்படியொரு விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று தெரிவித்துள்ளனர். அதில் இருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதை முன்மொழிந்துள்ளனர்.

ஆளும் பாரதிய ஜனதா அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல. 2014ம் ஆண்டில் நடைபெற்ற சயின்ஸ் காங்கிரஸ் விழாவில், நம் பிரதமர் மோடி அவர்களே, நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். விநாயகரே அதற்குச் சாட்சி என்றெல்லாம் முழங்கியுள்ளார். இத்தகைய அறிவியல் ஆதாரமற்ற கருத்துகள், உண்மை என்ற ரீதியில், அதுவும் ஒரு பிரதமரே முழங்கும் போது அது வெளிநாட்டில் செய்திகளாக வெளி வருகிறது. இது இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தை தலைகீழாக மாற்றி விடுகிறது. மதத்தை வளர்ப்பது, வளர்க்காமல் போவது பாஜக போன்ற கட்சிகளின் சொந்த விருப்பம். ஆனால், அந்த நோக்கத்திற்காக அறிவியல் கோட்பாடுகளை கேலிக்கூத்தாக மாற்றுவது கண்டனத்திற்குரியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism