Published:Updated:

மகாபாரதத்தில் இன்டர்நெட்... அடித்துவிட்ட திரிபுரா முதல்வருக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்!

மகாபாரதத்தில் இன்டர்நெட்... அடித்துவிட்ட திரிபுரா முதல்வருக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்!

திரிபுரா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அறிவியல் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், அதற்கு முறையான ஆதாரங்களை முன்வைப்பதும் அவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

மகாபாரதத்தில் இன்டர்நெட்... அடித்துவிட்ட திரிபுரா முதல்வருக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்!

திரிபுரா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அறிவியல் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், அதற்கு முறையான ஆதாரங்களை முன்வைப்பதும் அவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

Published:Updated:
மகாபாரதத்தில் இன்டர்நெட்... அடித்துவிட்ட திரிபுரா முதல்வருக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்!

காவிரி பிரச்னை, ஐ.பி.எல். அடிதடி, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா இல்லையா, தி.மு.க-வை கௌசல்யா கேள்வி கேட்டது சரியா, நிர்மலா தேவி விவகாரத்துக்கு கவர்னர் நிகழ்த்திய அடடே பிரஸ் மீட் என்று இணையர்கள் இந்த மாதம் முழுவதும் பல விஷயங்களில் மூழ்கி இருக்க, சத்தமே இல்லாமல் மற்றுமொரு பா.ஜ,க., தலைவர் அற்புதமான அறிவியல் கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் இருந்து இப்படிப்பட்ட அபத்தமான கருத்துகள் மாதம் ஒரு முறை வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இப்போது அந்த வரிசையில் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப். ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது. வருவதற்கு முன்பே லெனின் சிலையை உடைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு. சமீபத்தில் கணினிமயமாக்கல் குறித்த பயிற்சி வகுப்பு ஒன்றில் பேசிய அவர்,

``இந்தியாவுக்கு இன்டர்நெட் ஒன்றும் புதிதல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதைக் கண்டுபிடித்துவிட்டோம். பின்பு எப்படி பார்வையில்லாத அரசர் திரிதாஷ்டிரரின் தேரோட்டியான சஞ்சயா போரில் என்ன நடக்கிறது என்பதை அவருக்கு விளக்கியிருக்க முடியும்? குருக்ஷேத்திரத்தில் நடந்த போர் குறித்து, ஹஸ்தினாபுர அரண்மனையில் இருந்த அவர் எப்படி தெரிந்துகொண்டார்? அப்படியென்றால் அப்போதே நம்மிடம் இன்டர்நெட்டும், சாட்டிலைட்களும் இருந்தன என்றுதானே அர்த்தம்? இப்போது வேண்டுமானால் இன்டர்நெட்டுக்கு அமெரிக்கர்கள் சொந்தம் கொண்டாடலாம். ஆனால், அது நம்முடையது. இன்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் இந்தியர்கள் சிறந்து விளங்க இதுதான் காரணம்!" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுமட்டுமின்றி, ``பிரதமர் மோடி அவர்களின் டிஜிட்டல் முன்னெடுப்புகள் அனைத்து இந்தியருக்கும் இன்று இணையச் சேவையை வழங்கியிருக்கின்றன. மோடிதான் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களை மக்களிடையே பிரபலப்படுத்தியுள்ளார்" என்றும் பெருமையுடன் கூறியுள்ளார்.

இதில் இரண்டாவது வேண்டுமானால் அவரின் சொந்த கருத்து என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆதாரமே இல்லாமல் புராண காலத்தில் இன்டர்நெட் நம்மிடம் இருந்தது என்று கூறுவது எவ்வளவு அபத்தமான செயல்? அப்படியே நம்மிடம் இருந்தது என்றாலும், இடையில் பல வருடங்கள் அவை இல்லாமல் போக காரணம் என்ன? அவர் கூறும் காலத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அத்தகைய வசதிகள் கிடையாது. தற்போதைய பெரும்பாலான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்குத் தேவையான செமிகண்டக்டர் (Semiconductor) என்ற விஷயமே 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் கண்டறியப்பட்டது.

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு புகழ்பெற்ற அமெரிக்க வான்அறிவியலாளர் நீல் டிக்ராஸ் டைசன் (Neil Degrasse Tyson) அறிவியல் வளர்ச்சி மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்து ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது அமெரிக்காவைப் புகழ்ந்து, ஓர் அரசியல் காய் நகர்த்தலாக வெளியிடப்பட்ட வீடியோ என்றாலும், அதில் அவர் கூறிய ஒரு சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. பொதுவாக அறிவியல் என்றாலே, ``இப்போது ஒன்று சொல்வார்கள், நாளை வேறொரு கோட்பாட்டை முன்வைப்பார்கள்" என்று அறியாமல் கேலி செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் கூறுவதுபோல இருந்தது அவர் பேசிய வசனங்கள். அது மேலே பார்த்த பொறுப்பில்லாத பேச்சுகளுக்கும் பொருந்திப் போவது ஆச்சர்யமான விஷயம்.

``இந்த 21-ம் நூற்றாண்டில், அறிவியல் சார்ந்து இது உண்மை, இது பொய், இதை நம்பலாம், இதை நம்பக்கூடாது என்று புரிந்துகொள்ளும் திறனையே அனைவரும், முக்கியமாக அரசியல்வாதிகள் இழந்துவிட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அறிவியல் குறித்து புரிந்து கொள்ளாதவர்கள், ஆதாரங்களோடு ஒரு விஷயம் முன் வைக்கப்படும்போது அதை மறுப்பவர்கள், அடிப்படை ஆதாரம் இன்றி நான் சொல்வதுதான் சரி என வாதாடுபவர்கள், இவர்கள் எல்லாம் நாட்டை ஆளும் இடத்துக்கு வரும்போது அவர்கள் நடத்தும் ஆட்சி எப்படி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியும்?

அது மட்டுமா? மக்கள், ஒரு சில குழுக்களின் பேச்சை நம்பி தடுப்பூசி போன்றவற்றை ஏற்க மறுக்கிறார்கள், புவி வெப்பமயமாதல் என்பதே நடக்கவில்லை என்கிறார்கள். இது நான் வளர்ந்த நாடுதானா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது. பல்வேறு முறை போர்க்களத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நின்றிருக்கிறோம். வெவ்வேறு கருத்துகளை முன்வைத்து வாதிட்டுள்ளோம். ஆனால், அறிவியல் என்று வரும்போது நமக்கு எப்போதும் ஒரே கருத்துதானே இருந்து வந்தது? 

அறிவியல் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு பயிற்சி. எது உண்மை என்று கண்டறியும் பயிற்சி. யாரோ ஓர் ஆராய்ச்சியாளர் தன்னுடைய அனுமானத்தை ஓர் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடுகிறார். அதில் எனக்கு ஆர்வம் ஏற்படுகிறது. அதை நான் ஆய்வு செய்து என்னுடைய முடிவுகளைப் பிரசுரிக்கிறேன். அதை இன்னொரு ஆய்வாளர் ஆய்வு செய்து, சரி அல்லது தவறு என்று விளக்கத்துடன் வேறொரு பதிவை வெளியிடுவார். காரணம், என்னைவிட அவர் அந்தத் துறையில் அனுபவம் பெற்றவர். அவரால் அதை மேலும் சிரத்தையுடன் ஆய்வு செய்ய முடியும். அவரும் எங்கள் கருத்தோடு ஒத்துப்போகும்போதுதான் அந்த ஆராய்ச்சியின் நம்பகத்தன்மை அதிகமாகும். 

இது அறிவியல், விளையாட்டல்ல. நீங்கள் ஒன்றின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் போன்றதும் அல்ல. நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு எனக்கு ஐன்ஸ்டீன் சொன்ன E=MC^2 என்பதில் நம்பிக்கை கிடையாது என்று சொல்லிவிட முடியாது. யாருக்கும் அப்படி ஓர் ஆப்ஷன் கிடையாது. ஏற்கெனவே, அது உண்மை எனக் கண்டறியப்பட்டுவிட்டது. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கணிதத்தில் ஒன்றும் ஒன்றும் கூட்டினால், இரண்டு வரும் என்பது மாற்றக் கூடிய ஒன்றா? அங்கே நீங்கள் வேறு விடையைத்தான் எதிர்பார்க்க முடியுமா? ஒருவேளை அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால், அதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் ஒன்றையும் நீங்கள் முன்வைக்க வேண்டும். அது உங்கள் கடமை. போகிறப்போக்கில் வெறும் 'எனக்கு இதுல நம்பிக்கை இல்லை' என்று கூற, யாருக்கும், ஏன் அறிவியலாளர்களுக்கேகூட உரிமை கிடையாது."

அடுத்து அவர் கூறிய சில வரிகள் ஸ்டெர்லைட் பிரச்னைக்கும் அழகாய் பொருந்திப் போகிறது.

``ஒரு பிரச்னை இருக்கிறது என்றால் முதலில் அதன் உண்மைத் தன்மையை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து உணர வேண்டும். ஒருவர், ஒரு பிரச்னை என்று நம்பத்தகுந்த ஆதாரங்களை அடுக்கும்போது, சரி, இங்கே பிரச்னை இருக்கிறது என்று அதைத் தலைவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கு அரசியல் ரீதியாக ஒரு தீர்வை காண முடியும். புவி வெப்பமாகிறது என்றால், முதலில் அரசியல்வாதிகள் அதை உண்மை என்று ஏற்றுக்கொண்டால்தானே அதற்கு ஒரு தீர்வை அவர்களால் காண முடியும்? 'சரி, புவி வெப்பமாகிறது. இனி கார்பன் அளவை இப்படிக் குறைத்துக்கொள்ளலாம். அதிகமாக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலைகளுக்கு இனி விதிகளைக் கடினமாக்கலாம்' என்று ஏதோ ஒரு முடிவை எடுக்க முடியும்? நீங்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அதைத் தட்டிக் கழிக்கும்போது, அதற்கான தீர்வையும் அடைய விடாமல் காலம் கடத்துகிறீர்கள் என்பதே உண்மை."

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் அவர்களின் இந்தப் பேச்சுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க, மனிதர் அப்போதும் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், ``ஒவ்வொரு இந்தியனும் தன் நாடு சிறந்தது என்பதில் கர்வம் கொள்ள வேண்டும். என் நாட்டில் அரியத் தொழில்நுட்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதில் எனக்குப் பெருமை. உண்மையைக் குழப்பம் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்தான் தன் நாட்டின் தரத்தை தாழ்த்திவிட்டு மற்ற நாடுகளைப் பாராட்டுவார்கள்" என்று தேசப்பற்றை வைத்து தன் தவறை மறைத்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அறிவியல் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், அதற்கு முறையான ஆதாரங்களை முன்வைப்பதும் அவர்களின் கடமை என்பதை உணர வேண்டும். மகாபாரதம், ராமாயணம் போன்றவை மிகப்பெரிய இதிகாசங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அவை உண்மையாக நடந்தவை அல்ல என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்களும் இங்கு உண்டு. பாரதப் போர் நடந்ததற்கான ஆதாரமே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. அதற்குள் நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால், மக்களின் நம்பிக்கை எதுவோ அதற்கு நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால், அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் கண்டிக்கப்பட வேண்டும். மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் முதல்வர்கள், அமைச்சர்கள் அறிவியல் ரீதியாகப் பேசும்போது அது சரியா என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக அறிவியலைப் பலி கொடுப்பது சரியில்லை. ஏனென்றால், பலர் அவர்கள் சொல்வதை உண்மை என்று நம்பத் தயாராக இருக்கிறார்கள். அது விபரீதத்திலும் போய் முடியலாம். அறிவியல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism