Published:Updated:

காசு... பணம்... துட்டு... மணி... மணி!

ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்

அள்ளிச் சுருட்டும் ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்

காசு... பணம்... துட்டு... மணி... மணி!

அள்ளிச் சுருட்டும் ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்

Published:Updated:
ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆளுங்கட்சி வாரிசு அட்ராசிட்டிகள்
அண்ணனை எதுக்குப் பார்க்கணும்... அவர் பையனைப் பாருங்க போதும். அவர்கிட்ட சொன்னாலே எல்லா காரியங்களும் முடிஞ்சுடும்’’ என்ற குரல்களை அ.தி.மு.க வி.ஐ.பி-க்களின் வீட்டு வாசல்களில் இப்போது அதிகமும் கேட்க முடிகிறது. ‘சர்வமும் வாரிசுகளே’ என்கிற நிலை, அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைத்துத் தரப்பிலும் இருக்கிறது. இப்படி, சகல திசைகளிலும் புகுந்து புறப்பட்டு கல்லாகட்டுவதோடு, அந்தப் பணத்தைப் பல்வேறு இடங்களில் கனஜோராக முதலீடும் செய்துவருகிறார்கள்.

மாங்கனிக்குப் புகழ்பெற்ற ஊர், இப்போது தமிழகத்தின் குட்டித் தலைநகராகவே அறியப்படுகிறது. அந்த ஊரில் மூத்தவருக்கு எல்லாமுமாக இருக்கும் காப்பியத் தலைவனின் வாரிசு இப்போது அரசு இயந்திரத்தின் அச்சாணி யாகவே வலம்வருகிறாராம். மைனராகச் சுற்றிவந்தவர், இப்போது மாப்பிள்ளையாகவும் ஜொலிக் கிறார். ‘கல்லூரி தொடங்கினால் நாமும் கல்வி வள்ளலாக வலம்வரலாம்’ என்ற எண்ணம் சில ஆண்டுகளுக்கு முன்பு வாரிசுக்கு உதித்திருக்கிறது. ‘அப்பாவும் மூத்தவரும் உடனிருக்கும்போது கவலை எதற்கு?’ என்று காவிரி பாயும் பகுதியில், கச்சிதமாகக் கல்லூரி ஒன்றையும் ஆரம்பித்து, இப்போது கல்லாகட்டி வருகிறார். அதோடு காக்கிகள் மத்தியில், ‘பஞ்சாயத்து முதல் பவர் மாற்றம் வரை இந்த வாரிசை அணுகினால் போதும்’ என்ற நிலையையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

காப்பிய வாரிசோடு கூட்டணி போட்டிருப்பவர், தமிழகத்தில் கடைக்கோடி நகரத்தைச் சேர்ந்த வாரிசு. இந்த வாரிசின் அப்பாவோ எந்த அரசுப் பதவியிலும் கிடையாது. ஆனால், அன்றைய சுந்தரமான அமைச்சருக்கு ஆல்-இன்-ஆலாக இருந்து, அந்தத் தொடர்புகள் மூலம் லட்சுமி கடாட்சமாக இப்போதும் பவர் காட்டிவருகிறார். மூத்தவரின் பின்னால் இப்போதும் அடிக்கடி கைகட்டி பவ்யமாகக் காட்சிதருவார் இந்த நபர். தன் வாரிசை, ‘கண்ணே, முத்தே’ என்று வளர்த்ததால், இப்போது அமைச்சர்களின் வாரிசுகளைவிட அதிகமாக கல்லாகட்டிவருகிறார்.

காசு... பணம்... துட்டு... மணி... மணி!

சமீபத்தில் இந்த வாரிசு நபர், நெல் சாகுபடிக்காக கம்போடியா நாட்டில் பல ஆயிரம் பரப்பளவிலான இடங்களை வாங்கியிருக்கிறார். அங்கு குறைந்த விலையில் இடமும், குறைந்த கூலிக்கு ஆட்களும் கிடைக்கிறார்களாம். அங்கிருந்து நெல் ஏற்றுமதியை வெளிநாடுகளுக்குச் செய்தால் லாபம் என்று தொலைநோக்குத் திட்டத்தோடு காரியத்தில் இறங்கியிருக்கிறார். கம்போடியா விவகாரத்தில் முத்தான நபருக்குக் கைகொடுத்தது, இன்னொரு மாண்புமிகுவின் வாரிசு. இந்த மாண்புமிகு, அடிக்கடி செய்திகளில் அடிபடும் துறையை தன்வசம் வைத்திருக்கும் தென்மாவட்ட பிரமுகர். இந்த மாண்புமிகுவின் மகனோ பெயரிலேயே ஐஸ்க்ரீம் வைத்திருப்பதால் என்னவோ, தனது பேச்சிலேயே எதிராளியைக் குளிரவைத்து விடுவாராம். ஐஸ்க்ரீம் வாரிசும் முத்தான வாரிசும் சமீபகாலங்களில் தென் மாவட்டங்களில், பெரிய அளவிலான நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை வேண்டியவர் களுக்கு முடித்துக் கொடுத்து கணிசமான தொகையைப் பார்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு வாரிசுகளுக்கும் ‘பாஸ்’-ஆக இருந்து ஆபரேட் செய்வது காப்பிய வாரிசு. இந்த மூவர் கூட்டணி கச்சிதமாகப் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்துவருகிறது.

அடுத்த முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும், தங்கள் கல்லாவுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று அங்கும் ஒரு துண்டை வசமாகப் போட்டிருக்கிறார்கள். சென்னை துறைமுகத்தில் லோடிங், அன்லோடிங் கான்ட்ராக்ட்டைச் செய்துவரும் ஒரு நபரின் நட்பு காப்பிய வாரிசுக்குக் கிடைத்தது. அந்த கான்ட்ராக்டரோ தி.மு.க தலைமைக்கு நெருக்கமான கட்டட நிறுவன அதிபரோடு நெருக்கமானவர். தி.மு.க புள்ளியின் நட்பை கான்ட்ராக்டர் மூலம் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது இந்த மூவர் வாரிசு கூட்டணி. இந்த நட்பால், தி.மு.க-வுக்கு நெருக்கமான கட்டட நிறுவனத்துக்குச் சத்தமில்லாமல் சில அரசு ஒப்பந்தங்களும் பெறப்பட்டுள்ளன.

வாரிசுக் கூட்டணி ஒருபுறம் என்றால், தனியாகவும் சில வாரிசுகள் ஆட்சி அதிகாரத்துக்குள் நீந்தி முத்தெடுக்கிறார்கள். வட மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாண்புமிகுக்கு, சமீபத்தில்தான் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரின் சகோதரரின் வாரிசு செய்யும் அட்ராசிட்டியைக் கண்டு ஆளும் தரப்பே அதிர்ந்துகிடக்கிறது. ‘பழனிக்கே பஞ்சாமிர்தம் கொடுத்துவிடுவார் அந்த வாரிசு’ என்று நக்கலாகச் சொல்கிறார்கள். முன்னாள் மாண்புமிகுவின் பெயரைப் பயன்படுத்தியே சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அனைத்து அமைச்சர்கள் வீடுகளிலும் சர்வ சாதாரணமாக நுழைந்துவிடுகிறாராம். குறிப்பாக, கொரோனாவால் குபேர அந்தஸ்து அடைந்தவர்களில் இந்த வாரிசும் ஒருவராம். துறையின் அமைச்சரே சரணம் என்று அவர் வீட்டிலேயே கிடந்து, பல கோடிக்கு ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறார்.

மற்றொரு வாரிசின் கதையோ வேறுவிதமாக இருக்கிறது. அண்ணாமலையார் ஆசிபெற்ற அந்த மாண்புமிகுவின் மகனோ, அப்பாவுக்கே ஆர்டர் போட்டு அதிகாரம் செய்கிறார். கடவுள் சொத்து விவகாரங்களில் காசு பார்ப்பதில் அந்த வாரிசு நபர் கில்லாடி. தன்னுடன் யாரையும் கூட்டுச் சேர்ப்பது அந்த வாரிசு நபருக்குப் பிடிக்காது; ஒற்றை மனிதராக அந்தத் துறையின் ஒப்பந்தங்கள் அனைத்தையும் சத்தமில்லாமல் கோயில் பிரசாதம்போல ஒரே வாயில் விழுங்கிவிடுகிறார்.

இவர்களெல்லாம் சின்னச் சின்ன சாம்பிள்கள்தான். சினிமாவில் 200 கோடி முதலீடு, துபாயில் மருத்துவமனையில் முதலீடு என்று இன்னும் பல ‘சாதனை’களைச் செய்த வாரிசுகளும் இருக்கிறார்கள்.

“இந்த வாரிசு கோதாவெல்லாம் மூத்தவருக்குத் தெரியாதா?” என்று அரசியல் வட்டாரத்தில் கேட்டால், “மூத்தவர், இளையவர் என அனைவருக்குமே வாரிசுகள் இருக்கிறார்கள். அவர்களோ இவற்றையே மிஞ்சும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்” என்று நக்கலாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள்!

அப்பாக்கள் ஆறடி பாய்ந்தால், பிள்ளைகள் ஆயிரமடி பாய்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism