Published:Updated:

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

கனிமொழியுடன் போட்டி போடும் கிச்சன்...

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

கனிமொழியுடன் போட்டி போடும் கிச்சன்...

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
“குழாயடிச் சண்டையை ஆரம்பித்து விட்டார்களே!” - தொண்டையைச் செருமியபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “தி.மு.க - அ.தி.மு.க அடித்துக்கொள்வதைச் சொல்கிறீர்களா?” என்றபடி இஞ்சியும் தேனும் கலந்த டீயை கழுகாரிடம் நீட்டினோம். தொண்டைக்கு இதமாக ஒரு மடக்கு உறிஞ்சியவர், “ஆமாம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக விருதுநகர் மாவட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை தி.மு.க-வினர் எரித்தனர். அவர்களுடன் அ.தி.மு.க-வினர் மோதலில் ஈடுபட, ஏரியாவே ரணகளமாகிவிட்டது. கடைசியில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள் போலீஸார். இவர்களின் குழாயடிச் சண்டைக்குக் காரணமே ரஜினிதான்” என்று கண்களைச் சிமிட்டியபடியே ரகளையாகச் செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ரஜினியின் அரசியல் வருகை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு ஜெர்க்கை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினியைச் சீண்டாமல், ‘உனக்கு எதிரி நான், எனக்கு எதிரி நீ’ என்று இருதரப்புமே ‘இந்தக் கோட்டை தாண்டி நான் வர மாட்டேன்... அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக் கூடாது’ என்கிற லெவலுக்கு ரஜினியைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ‘பேச்சு பேச்சாக இல்லாமல்’ அடிதடி வரை போய்விட்டதுதான் யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்!”

“வடிவேலு நடிக்காத குறையைத் தீர்த்துவைக்கிறார்கள் என்று சொல்லும்... சரி, என்.கே.கே.பி.ராஜாவை ஸ்டாலின் திடீரென சந்தித்திருக்கிறாரே..?”

“தி.மு.க வட்டாரத்தில், `அதிருப்தியாளர்களை அரவணைக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின்’ என்கிறார்கள். மூத்தவர்கள், முக்கியத்துவம் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டவர் களை ஸ்டாலினே தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்திருக்கிறாராம். இந்த வகையில், கடந்த வாரம் கொங்கு மண்டலத்துக்கு ஸ்டாலின் விசிட் செய்தபோது என்.கே.கே.பி ராஜா வீட்டுக்குச் சென்று அவரின் அம்மாவின் மறைவுக்கு துக்கம் விசாரித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. தான் பேசும் அனைவரிடமும், ‘அடுத்து நாமதான் ஆட்சிக்கு வரப் போறோம். உங்க அனைவருக்குமே முக்கியத்துவம் தரப்படும்’ என்று வாக்குறுதி கொடுக்கிறாராம் ஸ்டாலின்.”

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

“சரிதான்... கிச்சன் கேபினெட் மாவட்டச் செயலாளர்களுக்கு போன் போடுகிறாராமே... என்ன திடீர் விசாரணை?”

“எல்லாம் கனிமொழி பற்றிய விசாரணைதான். பழங்குடி கிராமங்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள், யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பம், சாதனையாளர்கள், கட்சி சீனியர்கள் என்று அரசியல் தலைவர்கள் இதுவரை பயணிக்காத இடங்களுக்கு கனிமொழி விசிட் அடிப்பது கட்சித் தலைமையை உற்று கவனிக்கவைத்திருக்கிறது. கூட்டமும் திரளாகக் கூடுகிறது. கனிமொழியின் செயல்பாடுகளை பார்த்துவிட்டே, கமல்ஹாசன் ‘மய்யம் மாதர் படை’ என்கிற புதிய பிரிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள். அதேசமயம், தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம் பேசும் கிச்சன் கேபினெட், ‘கனி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யறது யாரு? கனியைவிட நம்ம தம்பி உதய்க்கு அதிகமா கூட்டம் கூடணும்’ என்று அன்புக் கட்டளையும் போட்டிருக்கிறதாம். இதற்கிடையே, சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகளை முடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதால் பத்து நாள் பிரசாரம், பத்து நாள் ஷூட்டிங் என்று அவரது பிரசாரத்தை மாற்றியிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

“ம்ம்... ரஜினி தரப்பில் என்ன நடக்கிறது?”

“மக்கள் திட்டப் பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கும் நிதியில், 32 - 40 சதவிகிதம் தேவையற்ற செலவுகளால் வீணாவதாக ரஜினியின் குடும்ப நண்பர் ஒருவர் கணக்கு போட்டிருக்கிறாராம். இவருடன் ஓய்வுபெற்ற ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள் என்று ஒரு ஸ்பெஷல் டீம் ஜரூராக ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழகத்திலுள்ள கட்டமைப்புகளைவைத்து ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அரசு ஈட்ட முடியுமென்று அவர்கள் சில திட்டங்களைத் தயாரித்துவருகிறார்கள். தவிர இட ஒதுக்கீடு, நீட் தேர்வுக்கு மாற்று என்று 15 அம்சங்கள்கொண்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்த டீம். பெங்களூருவிலிருந்து ரஜினி திரும்பியதும், இந்த டீமுடன் அவர் கலந்தாலோசிக்கப்போகிறாராம். ரஜினிக்காகத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளையும் இந்த டீம்தான் செய்யப் போகிறது என்கிறார்கள்.”

“ஓஹோ... பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா அப்செட்டில் இருக்கிறாராமே..?” என்றபடி, சூடாக வெங்காய பக்கோடாக்களைத் தட்டில் நிரப்பினோம். பக்கோடாக்களை மென்றபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“தேசியச் செயலாளர், கேரள மாநில மேலிடப் பார்வையாளர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், வேறு எந்தப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஹெச்.ராஜாவை தற்போது எந்த நிகழ்ச்சிக்கும் கட்சி நிர்வாகிகள் அழைப்பதில்லையாம். சமீபத்தில் மதுரையில் நடந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்ள வந்தவரை, கட்சி நிர்வாகிகள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்கிறார்கள். ‘இப்படி பத்தோடு பதினொன்றாக நிற்பதற்கு பதிலாக, தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, மீண்டும் சங்கப் பணிகளுக்கு சென்றுவிடலாமா?’ என்று கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம் ராஜா.”

“ம்ம்ம்... எப்படி இருந்த மனுஷன்!”

“பா.ஜ.க-வில் நடந்த இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்... கேளும். நாகர்கோவிலில், டிசம்பர் 6-ம் தேதி நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். அன்று அம்பேத்கரின் நினைவுதினம். அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மீடியாக்களிடம் பேசிய முருகன், ‘அம்பேத்கர் பேருல நாணயம், பீம் ஆப் இதெல்லாம் நாங்க வெளியிட்டிருக்கோம். 1952 பொதுத்தேர்தல்ல அம்பேத்கர் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பிய பெருமை பா.ஜ.க-வையே சாரும்’ என்று பேசவும் அருகிலிருந்த நிர்வாகிகளுக்கு கிலியடித்துப்போனதாம்.”

“ஏன்?”

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

“பா.ஜ.க உதயமானதே 1980-ம் ஆண்டுதான். அதற்கு முன்னால், 1951-ல் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான பாரதிய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனசங்கம் தொடங்கப்பட்டு முதலில் 1952-ல்தான் தேர்தலையே சந்திக்கிறது. ‘இப்படி இருக்கும்போது அம்பேத்கரை எப்படி பா.ஜ.க ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருக்க முடியும்? வரலாறு தெரியாமல் பேசிச் சிக்கலை வரவழைக்கிறாரே...’ என்று சீனியர்களே தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.”

“சரிதான்... அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”

“விருதுநகர் மண்டலப் பொறுப் பாளராக நத்தம் விஸ்வநாதனை நியமித்ததில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் அதிருப்தியாம். தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘ஏற்கெனவே மாவட்டத்தை இரண்டாகப் பிரிச்சு பவரை குறைச்சுட்டானுவ... இப்ப மண்டலப் பொறுப்புகூட கொடுக்காம அசிங்கப் படுத்துறாங்களே’ என்று புலம்பித் தீர்த்திருக்கிறார். இது எதுவும் தெரியாமல், கடந்த வாரம் ராஜேந்திர பாலாஜிக்கு போன் போட்ட நத்தம், ‘ஆலோசனைக் கூட்டம் போடணும். ஏற்பாடு பண்ணுங்க...’ என்று சொல்லியிருக்கிறார். உஷ்ணமான ராஜேந்திர பாலாஜி, ‘அதெல்லாம் ஒண்ணும் வர வேணாம், நாங்க சொல்றப்ப வந்தா போதும்’ என்று வெடுக்கென்று பேசிவிட்டு, தொடர்பைத் துண்டித்துவிட்டாராம். கடுப்பான நத்தம், விவகாரத்தை எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டுபோகவும், தலைமையிடமிருந்து ராஜேந்திர பாலாஜிக்கு அர்ச்சனை விழுந்திருக்கிறது.”

“ம்ம்... டி.டி.வி.தினகரன் திடீரென வேகமெடுத்துவிட்டாரே..?”

“தேர்தல் வருகிறது அல்லவா... சமீபத்தில் தன்னைச் சந்தித்த கட்சி சீனியர்களிடம், ‘உருப்படியாக ஒரு பூத்துக்கு 24 பேரைக் கட்சியில் சேர்த்தால் போதும்’ என்று சொல்லிவிட்டாராம் தினகரன். இப்படிச் சேர்க்கப்படுபவர்களின் மொபைல் எண்களைத் தொடர்புகொண்டு, கிராஸ் செக் செய்வதற்குத் தனி டீம் செயல்படுகிறது. கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியையும் முடுக்கிவிட்டிருக்கிறார். அநேகமாக, ஜனவரியில் மகள் ஜெயஹரிணியின் திருமணத்தை முடித்த கையோடு பிரசார வேனைக் கிளப்பிவிடுவார் என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“டிசம்பர் 2010-ல் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில், கிறிஸ்தவர்களின் வாக்குகளை ஜெயலலிதா அறுவடை செய்வதற்கு இந்த விழா பெரும் உதவி புரிந்தது. இதே ஃபார்முலாவில், வரும் டிசம்பர் 22-ம் தேதி அருமனையில் நடக்கவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள விருக்கிறாராம் முதல்வர் பழனிசாமி. ‘பா.ஜ.க-வின் கையாள்’ என்று அ.தி.மு.க மீதுள்ள விமர்சனத்தைத் துடைப்பதற்கான விழாவாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்” என்றபடி வானில் சிறகை விரித்தார் கழுகார்.

*****

சிக்கலில் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

கட்டடம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு இடம்பெயர்ந்திருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ஹோட்டல் தொழிலதிபர் ஒருவருடன் சேர்ந்து தீவு ஒன்றில் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறாராம். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பெருந்தொகை குறித்து அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் ரகசியமாக விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றன. பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதால், இவரது முதலீடுகள் குறித்து அவர்களே டெல்லிக்குத் தகவல் அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஆட்சி மாறினால், அதிகாரி கம்பி எண்ணுவது நிச்சயம் என்கிறது கோட்டை வட்டாரம்!

விளக்கம்

மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!”

09.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘சரக்கு போட்டா அவன் சைக்கோ’ என்ற தலைப்பில் ஒரு சைக்கோ கொலையாளி பற்றிய கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், கொலைசெய்யப்பட்ட ‘பாக்கிய அன்பரசு’ என வேறோருவரின் படம் வெளியாகியிருப்பது நம் கவனத்துக்கு வந்தது. போலீஸார் தந்த தகவல் அடிப்படையிலேயே அதை நாம் வெளியிட்டிருந்தோம். அருகில் உள்ள படத்தில் இருப்பவர்தான் உண்மையில் அந்தக் கொலையில் இறந்துபோன பாக்கிய அன்பரசு. - ஆ-ர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism