Published:Updated:

களத்தில் ரஜினி! - சீறும் சீமான்... காத்திருக்கும் கமல்... ‘திருதிரு’ தினகரன்... உருளும் உதிரிகள்

ரஜினி, சீமான், கமல், தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி, சீமான், கமல், தினகரன்

“தமிழகத்துக்கு ரஜினி தேவையேயில்லை... இது மராட்டியனா, மானத் தமிழனா என்பதற்கான போர்!”

களத்தில் ரஜினி! - சீறும் சீமான்... காத்திருக்கும் கமல்... ‘திருதிரு’ தினகரன்... உருளும் உதிரிகள்

“தமிழகத்துக்கு ரஜினி தேவையேயில்லை... இது மராட்டியனா, மானத் தமிழனா என்பதற்கான போர்!”

Published:Updated:
ரஜினி, சீமான், கமல், தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி, சீமான், கமல், தினகரன்
தமிழக அரசியல் களத்தில் குழப்பத்தீயைப் பற்றவைத்திருக்கிறார் ரஜினி. அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் நேரடியாக வார்த்தைகளை ‘இறைக்கா’விட்டாலும், ரஜினியின் அரசியல் அறிவிப்பு அந்தக் கட்சிகளுக்குள்ளும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதிருக்கும் கூட்டணியே தொடருமா என்று சொல்ல இயலாது. ஜனவரிக்குப் பிறகு தலைவர்களின் மனவரிகள் மாறலாம். ரஜினியைச் சாட்சியாகவைத்து புதுக்கூட்டணிக் காட்சிகள் அரங்கேறலாம். அதேசமயம், இதுவரை கூட்டணி அமைக்காமல் தனித்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் வியூகம் என்ன... ரஜினியின் வரவு அவர்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறது... சீமான், கமல் ஆகியோரின் முதல்வர் வேட்பாளர் கனவு என்னவாகும்..?
ரஜினி
ரஜினி

சீறும் சீமான்!

ரஜினியின் அரசியல் வரவால் அதிகம் உற்சாக மடைந்திருப்பது நாம் தமிழர் கட்சியினர்தான். “தமிழகத்துக்கு ரஜினி தேவையேயில்லை... இது மராட்டியனா, மானத் தமிழனா என்பதற்கான போர்!” என்று பகிரங்கமாகவே ரஜினிக்கு எதிரான போர்க்களத்தைத் தயார் செய்கிறார் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர், “இன்றுள்ள அரசியல்வாதிகளில் ரஜினியைக் கடுமையாக எதிர்ப்பது சீமான் மட்டுமே. 2021 தேர்தல் களம், ரஜினி Vs சீமான் என்றே நகரும். இது எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய இமேஜைக் கொடுக்கும். பெருவாரியான இளைஞர்களை எங்கள் பக்கம் இழுக்கும்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது தெலுங்கு, கன்னடம், செளராஷ்டிரா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மொழிவாரி சிறுபான்மையினர் என 11 பேருக்கு சீட் வழங்கியது நாம் தமிழர் கட்சி. நாங்கள் எந்த மொழிக்கும், எந்தச் சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல என்பதை இதன் மூலம் நிரூபித்தோம். ஆனால், எங்கள் நிலத்தை அந்நியன் ஆளக் கூடாது, ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் பிரசாரமே, ‘மராட்டியரான ரஜினி, தமிழகத்தை, தமிழர்களை எப்படி ஆளலாம், அவருக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ என்பதாகவே அமையும். எங்களது போரை ரஜினி எதிர்கொள்வது மிகவும் கஷ்டம். இதனால் தமிழுணர்வுள்ளவர்கள், ரஜினியை விரும்பாதவர்கள், இளைஞர்களின் வாக்குகள் கணிசமாக எங்கள் கட்சிக்கு வரும்” என்றனர்.

சீமான்
சீமான்

இதையேதான் சீமானும், “ரஜினிக்கான தேவை தமிழ்நாட்டில் என்ன இருக்கிறது... மீத்தேன் எரிவாயு திட்டம், நீட் தேர்வு, இயற்கை வளங்கள் கொள்ளைபோவது, புதிய கல்விக் கொள்கை, புதிய வேளாண்மைச் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன... இந்தத் தேர்தலே மராட்டியனா, மானத் தமிழனா என்பதற்கான போராகச் செல்லவிருக்கிறது. ‘முப்பது நாள்களில் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?’ என்பதுபோல அறுபது நாள்களில் முதலமைச்சராக ஆசைப்படுகிறார் ரஜினி. அது நாங்கள் இருக்கும்வரை நடக்காது” என்று சீறியிருக்கிறார்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை, தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப் பிரிவான வீரத்தமிழர் முன்னணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “பசுபதீஸ்வரர் கோயில் மட்டுமல்ல, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் எந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்தினாலும் தமிழிலும் நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் வெற்றியை மேற்கோள்காட்டி, ‘நாங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல. குடமுழுக்கைத் தமிழில் நடத்தவைத்ததே நாம் தமிழர் கட்சிதான்’ என்று ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு எதிராகக் கம்பு சுழற்றத் தயாராகிவிட்டார் சீமான். குறிப்பாக, ரஜினிக்கு எதிராக தமிழுணர்வைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் சீமான். இதை போயஸ் தோட்டம் எதிர்கொள்வது கடினம்தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

காத்திருக்கும் கமல்

ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு இரண்டு நாள்கள் முன்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணையும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய கமல்ஹாசன், “ரஜினி என் நண்பர். நிச்சயமாக அவரிடம் ஆதரவு கேட்பேன்” என்றார். இதைக் கோடிட்டுக் காட்டி, ‘ரஜினியுடன் கமல் கூட்டணி சேரப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகளைப் பார்த்த பிறகு முடிவெடுக்கலாம் என்று காத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் மய்யத்தினர்.

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 36 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் சாராத நடுநிலையாளர்கள், முன்னேறிய சமூகத்தினர், தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், செளராஷ்டிரா சமூகத்தினர் உள்ளிட்ட மொழிவாரி சிறுபான்மை மக்கள் ஆகியோரில் கணிசமானோர் கமலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்கள் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதேசமயம், இந்தமுறை மொழிவாரி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ரஜினி, கமலுக்கு விழுந்த வாக்குகளில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவார். இதனால்தான், ரஜினியுடன் கூட்டணிவைப்பதற்கு சில திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால், அவர் அரசியல் வருகை குறித்த அறிவிப்பின்போதே, அவரது பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு புரிந்துவிட்டது. அன்றைய தினம், ரஜினியுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த மன்ற நிர்வாகிகள் யாரையும் அவர் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. ‘தலைவா... தலைவா...’ என உயிரைக் கொடுக்கவும் துணிந்து நின்ற ரசிகர்களையும் அருகில் வைத்துக்கொள்ள வில்லை. ஆனால், பா.ஜ.க கட்சி நிர்வாகி ஒருவர் ரஜினிக்கு மிக நெருக்கமாக நின்றார். இப்படி ரஜினியின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு, எங்களது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரானது.

கடந்த 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்றார். இது, இந்து அமைப்புகளைக் கொந்தளிக்க வைத்தது. மக்கள் நீதி மய்யத்தைத் தடை செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் புகாரெல்லாம் கொடுத்தார்கள். இப்படி ‘முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று பேசியவரால், தற்போது டெல்லி ஆதரவுடன் அரங்கேறும் ரஜினியின் ஆன்மிக அரசியலை ரசிக்க இயலவில்லை.

கமல்
கமல்

அதேசமயம், சந்தோஷ் பாபு கட்சியில் சேர்ந்த விழாவில், கமல் கூறிய வார்த்தைகளும் நடப்பு அரசியலில் தவிர்க்க முடியாதவை. ‘கூட்டணிக்காகக் கொத்தடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. திரைத்துறையில் ரஜினியும் நானும் போட்டியாளர் களாக இருந்தோமே தவிர, பொறாமைக்காரர்களாக இருந்தது கிடையாது. அரசியலிலும் அது தொடரலாம்’ என்று கூறியிருக்கிறார். இது ஒரு சிக்னல். தேவைப்பட்டால், ரஜினியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்து கமலின் காய்நகர்த்தல்கள் மாறலாம்.

ஒருவேளை ரஜினியை நேரடியாக எதிர்த்தால், திரைத்துறையில் ஜொலித்த ‘ரஜினி Vs கமல்’ என்கிற பிம்பத்தை தமிழக அரசியலிலும் ஏற்படுத்த முடியும். இது மிகப்பெரிய இமேஜை தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்துக்குக் கொடுக்கும். இந்த வியூகத்தின் மூலமாக தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க விரும்பாத முஸ்லிம்கள், முன்னேறிய சமூகத்தினர், ரஜினியை விரும்பாத நடுநிலையாளர்களின் வாக்குகள் எங்களுக்கு வருமென்று எதிர் பார்க்கிறோம். அப்படியான சூழலில் முதல்வர் வேட்பாளராக கமல் இருப்பார். ஒருவேளை ரஜினி, பா.ஜ.க ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுயமாக, ஆரோக்கியமான அரசியல் செய்யும் பட்சத்தில், ரஜினியுடன் கூட்டணிவைப்பது குறித்து கமல் பரிசீலனை செய்வார். இப்போதைக்கு அமைதியாகக் காத்திருக்கிறார் கமல்” என்றார்கள்.

‘திருதிரு’ தினகரன்!

தமிழகமெங்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது அ.ம.மு.க. இதைத் தொடர்ந்து குழுவின் அறிக்கையை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் நிர்வாகிகள் சமர்ப்பித்தபோது, “கூட்டணியைப் பத்தி யாரும் கவலைப்படாதீங்க. அதை நான் பார்த்துக்குறேன். ரஜினியால நம்ம வாக்குவங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. உற்சாகமா தேர்தல் வேலையை ஆரம்பிங்க” என்றாராம். கொரோனா அச்சுறுத்தலால் ஒதுங்கியிருந்த தினகரன், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளன்று, பெரிய ஊர்வலத்தையும் சென்னையில் நடத்திக் காட்டியிருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க மூத்த தலைவர் ஒருவர், “வீதிக்கு வீதி, ‘எங்களிடம் கைகட்டி நின்றவர் எடப்பாடி’ என்று பேசிவிட்டு, அவருக்கு நேரடிப் போட்டியாளராகக் களத்தில் நிற்கவில்லையென்றால், தினகரனின் இமேஜ் உடைந்துவிடும். அதனால்தான், கூட்டணி என்கிற பெயரில் 30, 40 சீட்டுகளுக்காகத் தனது முதல்வர் வேட்பாளர் இமேஜை விட்டுக் கொடுக்க தினகரன் தயாராக இல்லை. பிறகு எப்படி ரஜினியின் தலைமையை அவர் ஏற்பார்? இந்த முறை தனித்துச் செல்வதையே தினகரன் விரும்புகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அ.ம.மு.க., ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றது. உள்ளாட்சித் தேர்தலின்போது, பல ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களைப் பிடித்திருக்கிறோம். தமிழகமெங்கும் மொத்தமாக 16 சதவிகித வாக்குகள் எங்களுக்கு விழுந்திருக்கின்றன. இதற்கான தரவுகள் எங்களிடம் இருக்கின்றன. மூன்றாவது பெரிய கட்சியான அ.ம.மு.க-வின் தலைமையில்தான் கூட்டணி அமையுமே தவிர, மற்றொருவரைத் தலைவராகக்கொண்ட கூட்டணியில் இணைய மாட்டோம்” என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

இவர்கள் இப்படிச் சொன்னாலும், ரஜினியின் அரசியல் வரவு தினகரன் தரப்பை எந்த முடிவையும் எடுக்கவிடாமல் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்கிறார்கள் அவரை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள். இது பற்றிப் பேசியவர்கள், “ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால், அவருடன் கூட்டணிவைக்கலாம் என்பது ஆரம்பத்தில் தினகரனின் திட்டமாக இருந்தது உண்மைதான். இப்போது ரஜினி, பா.ஜ.க பின்னணியுடன் அரசியல் வருகையை அறிவித்திருப்பதால், பா.ஜ.க தங்களைக் கூட்டணியில் சேர்க்குமா அல்லது ஊழல் குற்றத்தில் தண்டனை பெற்றவரான சசிகலா கட்சியுடன் கூட்டணிவைப்பதை ரஜினிதான் விரும்புவாரா என்றெல்லாம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது தினகரன் முகாம். அதனால், இப்போதைக்கு அவர்கள் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள்” என்றார்கள்.

ஒரு குட்டையைக் குழப்புவதுபோல தமிழக அரசியலைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த். இப்போதைக்கு தமிழக மக்களின் கண்களுக்கு எதுவும் தென்படாவிட்டாலும், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது... கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கத் தயாராகிவிட்டது பா.ஜ.க என்பதே அது!

*******

இவர்களின் நிலைப்பாடு என்ன?

பட்டியல் சமூகத்தின்கீழ் வரும் ஏழு உட்பிரிவுகளை இணைத்து, `தேவேந்திர குல வேளாளர்’ என்று பொதுப் பெயரில் அழைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முதல்வரின் அறிவிப்பை, புதிய தமிழகம் கட்சி ரசிக்கவில்லை என்கிறார்கள். பட்டியலின வெளியேற்றம் என்பதில் தீர்மானமாக இருக்கும் அந்தக் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, ‘தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரில் அறிவித்தாலும், இட ஒதுக்கீட்டில் பழைய முறையே தொடரும்’ என்று முதல்வர் கூறியிருப்பதால் கொந்தளிப்பில் இருக்கிறாராம். டிசம்பர் 6-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நிர்வாகிகளிடம் பேசிய கிருஷ்ணசாமி, ஜனவரி முதல் வாரத்தில் போராட்டம் நடத்தவும் அழைப்புவிடுத்திருக்கிறாராம். தேவேந்திர குல வேளாளர் பிரச்னையை மையப்படுத்தி தென் மாவட்டங்களில் அரசியலைக் கையிலெடுக்கிறார் கிருஷ்ணசாமி. இதில் ரஜினியின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல், கிருஷ்ணசாமி அவருடன் கைகோப்பாரா என்பது தெரியாது. அதேசமயம், வெற்றிபெற வாய்ப்புள்ள கூட்டணியை கணித்தே டாக்டர் இடம் மாறுவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

களத்தில் ரஜினி! - சீறும் சீமான்... காத்திருக்கும் கமல்... ‘திருதிரு’ தினகரன்... உருளும் உதிரிகள்

அ.தி.மு.க கூட்டணியில் இன்றுவரை தொடரும் முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் கருணாஸ், மீண்டும் திருவாடானை தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகிறார். தேவர் ஜெயந்தி விழாவுக்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பிரமாண்ட வரவேற்பை அவர் அளித்ததே இதற்கு சாட்சி என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.

கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரியில் ரஜினி கட்சி தொடங்கிய பிறகு அன்றைய சூழலுக்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கக் காத்திருக்கிறார்கள் என்கின்றன அவர்களின் முகாம்கள்!

மெளனம் காக்கும் பா.ம.க!

ராமதாஸ்
ராமதாஸ்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த பா.ம.க., இன்றுவரை அந்தக் கூட்டணியில்தான் தொடர்கிறது. அமைச்சர் ஜெயக்குமார், ‘அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று அறிவித்ததற்கு அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரிடமிருந்தும் எந்த மறுமொழியும் வரவில்லை. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொண்டனர் என்பதே இந்த மெளனத்துக்கு அர்த்தம். ஒருவேளை ரஜினி தாக்கத்தில் மருத்துவர்கள் இருவரும் கூட்டணி மாறினால், போட்டி வேறு திசையில் திரும்பக்கூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism